தமிழோவியம்
மேட்ச் பிக்சிங் : ஷரத் பவாரைத் தோற்கடித்த தால்மியா 'தில்லுமுல்லு'
- பத்ரி சேஷாத்ரி

மே மாதம் எழுதியிருந்த கட்டுரையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் தேர்தல்கள் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதை ஒருமுறை படித்துவிட்டு இந்தக் கட்டுரையைத் படிக்கவும்.

இந்திய கிரிக்கெட்டில் தால்மியா யாராலும் எதிர்க்க முடியாத பெரும் சக்தியாக மாறியுள்ளார். ஒரே நேரத்தில் மூன்று பெரும் வழக்குகளை பிசிசிஐ சந்திக்கிறது. மிக முக்கியமான கிரிக்கெட் தொடர் - இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே - நடைபெற உள்ளது. அதைத் தொலைக்காட்சியில் காண்பிப்பதில் குழப்பம். இப்பொழுது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.

அதைவிட முக்கியமான விஷயம் பிசிசிஐயின் குடுமி யார் கையில் இருக்க வேண்டும் என்பது. ஜக்மோகன் தால்மியா தனக்காகவே பேட்ரன்-இன்-சீஃப் - அதாவது தலமைப் புரவலர் என்ற பட்டத்தை வாங்கி வைத்துக்கொண்டுள்ளார். இது நிறைவேற இருந்த அவசரப் பொதுக்கூட்டத்தைத் தடைசெய்ய ஒருவர் மத்தியப்பிரதேச நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடுத்து கோர்ட்டின் ஆணையை எடுத்துக்கொண்டு சென்னைக்குப் போவதற்குள் அவசர அவசரமாக கூட்டம் நடந்து முடிந்து தால்மியா ஒருமனதாகப் புரவலராக்கப்பட்டார்!

ஆனால் மேற்கொண்டு சென்னை நகர நீதிமன்றம் ஒன்றில் ஒருவர் தடையுத்தரவு வாங்கியுள்ளார். பிசிசிஐ அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் போகப்போகிறது.

இதற்கிடையில் பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரண்பீர் சிங் மகேந்திரா, அருண் ஜெயிட்லி இருவருக்குமிடையில் பலத்த போட்டி நடப்பதாக இருந்தது. இருவருமே தால்மியா தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என விரும்பினர். தால்மியா யார் பக்கம் சாய்கிறாரோ, அவர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலை.

Ranbir and Pawarஇந்நிலையில் மத்திய கேபினெட் அமைச்சர் ஷரத் பவார் திடீரென, தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்தார். சுழற்சி முறையில் தலைவர் பதவி வடக்குப் பிராந்தியத்திற்குப் போக வேண்டும். பவார் மும்பை கிரிக்கெட்டின் தலைவர் (மேற்குப் பிராந்தியம்). ஆனால் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் பவார் பெயரை முன்மொழிய முடிவு செய்தது. அருண் ஜெயிட்லி போட்டிலியிருந்து விலகிக் கொண்டார். தால்மியா ரண்பீர் சிங் மகேந்திராவை ஆதரித்தார்.

அவ்வளவுதானே? இனி தேர்தல்தான் என்றால், அதுதான் இல்லை.

தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு வெளியே செல்லும் தலைவர் - தால்மியாவின் - வேலை.

ஆனால் பவார் ஆதரவாளர் (தால்மியா எதிரி) ஏ.சி.முத்தையா சென்னை உயர்நீதிமன்றம் சென்று தால்மியா தேர்தலை நடத்தினால் குழப்பம் விளைவிப்பார். அதனால் சென்னை உயர்நீதிமன்றமே யாரையாவது நியமித்து தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அஷோக் குமார், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மோகனை தேர்தலை நடத்தக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் தேர்தல் நாளன்று பிசிசிஐ சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சை அணுகி, அஷோக் குமாரின் ஆணையை ரத்து செய்ய வைத்தது. இதன்படி தால்மியாவே தேர்தலை நடத்தலாம் என்று முடிவானது.

மொத்தம் 31 வாக்குகள். இந்த வாக்குகளை யார் போடுவார்கள்? ஒவ்வொரு கிரிக்கெட் அசோசியேஷனும் ஒருவரை நியமித்து அவரிடம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஆனால் நடைமுறையில் தேர்தலை நடத்துபவர் - இந்த இடத்தில் தால்மியாதான் - யார் ஒவ்வொரு அசோசியேஷனுக்காகவும் வாக்களிப்பார் என்பதை முடிவு செய்வார். மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் இரண்டு இடங்களிலிருந்தும், இரண்டு பேர்கள் தாங்கள்தான் வாக்களிக்க உரிமை பெற்றவர்கள் என்று வந்தனர். [இதுவும் முன்னேற்பாடுதான்!] தால்மியா தேர்தலை நடத்துபவர் என்ற உரிமையில் ராஜஸ்தானிலிருந்து வாக்களிக்க வந்தவர்களுக்குள் தன் ஆதரவாளரை வாக்களிக்கவும், மஹாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள் இருவரையும் வாக்களிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் முடிவு செய்தார்!

மஹாராஷ்டிரம் பவாரது சொந்த மாநிலம் என்பதை மனதில் வைக்கவும்!

விளைவு? மொத்தம் 30 வாக்குகள்தான் [மாஹாராஷ்டிரம் தவிர்த்து]. அது 15-15 என்று பிரிந்தது. உடனே தால்மியா தனது casting வாக்கை ரண்பீர் சிங் மகேந்திராவுக்குப் போட்டு அவரை வெற்றி பெற்றவராக அறிவித்தார்!

தோற்ற ஷரத் பவார் தான் இதை மேற்கொண்டு நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஏன் என்று புரியவில்லை. வெளியிலிருந்து பார்க்கும் அனைவருக்குமே தால்மியா ஆடியுள்ள அழுகுணி ஆட்டம் தெரிய வரும்!

பிசிசிஐயின் சட்டங்கள் மிகவும் குழப்பமானவை. பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமானவை. பொய், திருடு, ஏமாற்று வளர உதவி செய்பவை. வெளிப்படையாக எதுவுமே நடப்பதில்லை.

இப்படியானதொரு இடத்தில்தான் அரசியல்வாதிகளும், ஊழல் பெருச்சாளிகளும், பதவித் தரகர்களும் கொழித்தாடுவார்கள்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தக் கூத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பார்கள். ஒரு பக்கம் இந்திய அணியின் விளையாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மந்தமான நிலை நிலவுகிறது. கிரிக்கெட் வாரியத்திலோ அசிங்கமான அரசியல் சண்டைகள். எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் போய் நிற்க வேண்டிய நிலை. இதே நிலைமை தொடர்ந்தால் மத்திய அரசு வேறு வழியின்றி இந்திய கிரிக்கெட் வாரியத்தினை கையகப்படுத்திக் கொண்டு தானே நிர்வாகம் செய்ய வேண்டியிருக்கும்.

பொதுவாக அரசு நிர்வாகம் செய்யும் எதுவுமே உயர்வாக இருப்பதில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரையில் இப்பொழுது இருப்பதை விட மோசமாக நிர்வகிக்க இந்திய அரசால் கூட முடியாது!

Copyright © 2005 Tamiloviam.com - Authors