தமிழோவியம்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : உள்ளத்தில் நல்ல உள்ளம்...
- ஜெயந்தி சங்கர்

'கடவுள் பாதி மிருகம் பாதி' கலந்து செய்த கலவையான சமூகத்தில் நல்லதும் கெட்டதும் கலந்தேயிருக்கின்றன. இந்தவாரம் சிங்கப்பூரில் நடந்த சில நல்ல செயல்களைப் பார்ப்போம். அடுத்தவாரம் திடுக்கிடும் சில தீய(திருட்டுச்)செயல்களுக்கு என்று ஒதுக்கி விடலாம்.

அடுத்த வீட்டில் யாரிருக்கிறார் என்றே தெரிந்துகொள்ளாத இயந்திர மனிதர்கள் வாழும் குட்டித்தீவு நாடான இந்த ஊரிலும் சில நல்ல உள்ளங்கள் இருக்கத்தானிருக்கின்றன என்றறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூகப்பணிகள் செய்யவென்று நேரம் ஒதுக்கி ஒரு தாளகதியில் செய்வது வேறு. நிச்சயம் அதனை வாழ்க்கைமுறையாக ஆக்கிக்கொண்டவர்கள் பாராட்டுக்குரியவகளே . ஆனால், நான் சொல்வது எதிர்பாராது
சட்டென்று 'உடுக்கை இழந்தவன் கைபோல', காலத்தினாற் செய்யும் உதவி !

ஜூலை 25 மாலை நடந்தது என்ன தெரியுமா? ஐந்துமணி சுமாருக்கு '·பாரம் த ஷாப்பிங்க் மோல்' என்னும் பேரங்காடியின் வாகனங்கள் நிறுத்தும் மூன்றாவது தளத்தில் திருமதி ஆமி என்ற மாது தன் ஒன்றரை வயது குழந்தையுடன் காரை நிறுத்தியிருக்கிறார். குழந்தை கார் சாவியைவைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. பின்னாடியிருக்கும் பேபிசீட்டில் இருந்தது குழந்தை. ஆமி குழந்தையின் கையில் சாவியிருப்பதை மறந்து கதவைச்சாத்தியிருக்கிறார். ஆட்டோலாக் பட்டனை வேறு அமுத்தியதில் காருக்குள் குழந்தை சாவியோடு. அம்மாவோ வெளியில் பதற்றத்தோடு. இதுமட்டுமில்லை, வீட்டுச் சாவியிருக்கும் 'ஹேண்ட் பேக்' வேறு காருக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. உள்ளேயிருந்த குழந்தை அழ ஆரம்பித்ததுமே ஆமிக்குப் பதற்றம் அதிகரித்துவிட்டது. நல்லவேளையாக அங்கு மின்தூக்கியில் இறங்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்மணி போலிஸ¤க்கும் கார் செர்வீஸ¤க்கும் தொலைபேசத் தன்னுடைய கையடக்கத் தொலைபேசியைக் கொடுத்துதவியிருக்கிறார். பிறகு அங்கே காரை நிறுத்திய இன்னொரு தம்பதியையைச் சந்தித்தார். அவர்கள் ஆமிக்கு உதவ முன்வந்தனர். அங்கு செக்யூரிடியிலிருந்து கிடைத்த சுத்தியலை வைத்துக் கஷடப்பட்டு கார் ஜன்னலை உடைத்து அந்த ஆண் உதவினார். கையில் காயம் படும் என்பதையும் பொருட்படுத்தாது உடைத்த ஜன்னல் வழியாகக் கையை நுழைத்துக் குழந்தையிடமிருந்து கார்சாவியை எடுத்துக்கொடுத்தார். நிம்மதிப்பெருமூச்சுடன் ஆமி கார் கதவைத்திறந்து தன் குழந்தையை எடுத்துக்கொண்டார்.

டாக்டர்கள் எல்லோரும் 'வசூல் ராஜாக்கள்' இல்லை, தெரியுமோ ? ! ஆகஸ்ட் முதல் வாரத்தில் திருமதி லாம் முன் யீ என்னும் பெண்மணியின் ஊனமுற்ற மகனுக்குப் பயங்கரக்காய்ச்சல் அடித்தது. தாய் உடனே  பஸிர் ரிஸ் வட்டாரத்தில் இருக்கும் ஒரு மருத்தவரான டாக்டர் ஜோஷ¤வா லிம்மிடம் சென்றார். அங்குபோய் மருத்துவர் வீட்டிற்கு வரமுடியுமா என்று கேட்கத்தான் சென்றார். அங்குபோனதும்தான் வீட்டிற்கு வந்து சிகிச்சையளிக்க $200 வசூலிப்பது தெரியவந்திருக்கிறது. மருத்துவரிடம் தான் வேலைக்குச் செல்லவில்லை, அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். மருத்துவர் லிம், உடனே அவர் வீட்டிற்குப்போய் சிகிச்சையளித்தார். சில நாட்களிலேயே ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரிடம் சென்றதும் பொறுமையாக மகனின் நிலைமையை விளக்கிக்கூறினார். அதற்கடுத்த நாள் வீட்டிற்கு போன்செய்து
பையன் எப்படியிருக்கிறான் என்று அக்கறையுடன் விசாரித்தார். மொத்தமாக $ 20 மட்டுமே செலுத்தச் சொல்லியிருக்கிறார். டாக்டரின் அக்கறையையும் பெருந்தன்மையையும் திருமதி லிம் நெகிழ்ச்சியுடன் நாளிதழுக்கு எழுதி நன்றி கூறினார்.

பணத்தோடு பர்ஸைத்தொலைத்துவிட்டு அது திரும்பக்கிடைத்தால்,..? ஜூலை 30 ஆம் தேதி செல்வி.ஆவ்ட்ரி தனது பர்ஸை 317 ஆம் எண் கொண்ட பேருந்தில் விட்டுவிட்டார். அதில் $400 பணமிருந்தது. யாரும் எடுத்தவர்களோ கிடைத்தவர்களோ திரும்பக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையே இல்லாது பயந்தார். ஆனால், திரு. வோங்க் அதைக்கண்டெடுத்து, அதிலிருந்த ஆவ்ட்ரியின் முகவரிக்குச் சென்று நேரிலேயே வாலட்டைக்
கொடுத்திருக்கிறார். ஆவ்ட்ரிக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றியுணர்ச்சி!

சினிமா தியேட்டரில் ஜூலை 30 ஆம் தேதி நடந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு தாய் ஆங்கிலப்படம் பார்க்கவென்று தனக்கும் தன் மகனுக்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டு, படம் ஆரம்பிக்க நேரமிருந்ததால் அருகில் இருந்த கடைகளைச் சுற்றிப்பார்த்துவிட்டு தியேட்டருக்கு வந்திருக்கிறார். டிக்கெட்டுகளை எங்கோ தொலைத்துவிட்டார்.  அவர் வார்த்தையை நம்பி அங்கிருந்த மேனேஜர் ஜெவெஸ்ட் என்பவர் நிலைமையைப் புரிந்துகொண்டு  இருவரையும் படம் பார்க்க தியேட்டருக்குள் அழைத்துக் கொண்டுபோய் உட்கார வைத்திருக்கிறார். இதை அந்தப்பெண் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

ஒரே வேலையைச் செய்யும் ஆசாமிகளுக்கு வேலையில் அலுப்பும் சலிப்பும் வந்து ஓர் இயந்திரத்தன்மை ஏற்பட்டுவிடுமல்லபா? ! சில விதிவிலக்குகளுண்டு இத நபரைப்போல. ஜூலை 19 சோ ஸ்வீ கியாட் என்பவர் டௌனர் ரோட் அஞ்சலகத்திற்குச் சென்று தன் சகோதரிக்காக சில பார்ஸல்களைச் சேகரித்தார். மூன்று புத்தகப்பார்ஸல்கள் கிட்டத்தட்ட 10கிலோ எடை இருந்ததாம். எப்படி வீட்டிற்குக் கொண்டுபோவது என்று
தயங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வேலைசெய்த ஊழியர் ரேமாண்ட் என்பவர் காகிதப்பையில் போட்டுக்கட்டிக் கொடுத்துதவினார். அன்று மாலையே சோ ஸ்வீ கியாட் தாம்ஸன் ப்ளாஸாவில் இருக்கும் போஸ் (POS Bank) பாங்கிற்குச் சென்றார். அங்கு ஏடீஎமில் பணமெடுக்க நினைத்தார். ஆனால், அவருக்குத் தன் எண் (pin number) மறந்துவிட்டது. அங்கிருந்த வங்கியில் கேட்டிருக்கிறார். $5 செலுத்தினால், கண்டுபிடித்துச்
சொல்வதாகக்கூறியிருக்கிறார். அதற்கு எப்போதாவது உபயோகிப்பதால் எண் மறந்துவிட்டது என்றிருக்கிறார் சோ ஸ்வீ கியாட். உடனே அந்த  வங்கி ஊழியர் சேண்டி ஹா என்பவர் அவருக்குப் புதிதாக ஒரு ஏடிஎம் அட்டைக்கு ஏற்பாடுசெய்து உடனே கொடுத்திருக்கிறார்.

ஆகஸ்ட் 4 ஆம் தேதியன்று நான்கு பேர் கொண்ட வேன் ஒன்று விரைவுச்சாலையில் நட்டநடு இரவில் நின்றுவிட்டது. தவறுதலாக வேனுக்கு பெட்ரோல் போடுவதற்கு பதில் டீசல் போட்டுவிட்டிருந்தனர் (இப்படிக்கூட நடக்குமா என்ன?! ). அவ்வழியே சென்ற டாக்ஸி ஓட்டுனர் ஒருவரும் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் உடனே உதவிக்கு வந்தனர். டாக்ஸி ஓட்டுனர் தன் இரவுச் சவாரிக்குப் போகும் வழியில் நிறுத்தி ஆலோசனையும் கூறி உதவியிருக்கிறார். டீசலை முழுவதும் வெளியே எடுத்துவிடச்சொன்னார். அதற்கு ஏற்ற ஸ்பானர் மோட்டார்சைக்கிள் ஆசாமியிடம் இருந்தது. டீசலை வெளியேற்றிவிட்டு, கொஞ்ச தூரத்திலிருந்து வாங்கி வந்த பெட்ரோலால் நிரப்பி வேன் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி செல்வி, ஜோய் க்ளெமெண்டி எம் ஆர் டியிலிருந்து வெளியாகிக்கொண்டிருந்தவர் திடீரென்று மயக்கமடைந்தார். கண்விழித்துப்பார்த்தபோது அவர் அங்கிருந்த ஊழியர்கள் அறையில் அஸ்லினா தின் என்ற ஊழியர் அருகில் இருந்திருக்கிறார். அவருக்குச் சூடாக 'மைலோ' பருகக்கொடுத்திருக்கிறார் அஸ்லினா. அவரை ஆசுவாசப்படுத்தி பின் வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார்.

1980-90 களை ஒப்புநோக்க சிங்கப்பூரில் மழை குறைந்தேயிருக்கிறது. இருந்தாலும், இன்னமும் அவ்வப்போது பெய்யவே செய்கிறது. இந்த நல்ல உள்ளங்கள் இருப்பதனால் தானோ ! நல்லுள்ளங்களுக்கு அளிப்போம் வண்ணப்பூக்களுடன் கூடிய வாழ்த்துக்களை !

Copyright © 2005 Tamiloviam.com - Authors