தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : கடைசி பிறந்த நாள்
- ஜெ. ரஜினி ராம்கி

'...பிறந்த நாளை முன்னிட்டு இன்று முழுவதும் நிறையபேர் வாழ்த்து கூறுவதற்காக வந்திருந்தார்கள். உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான தந்திகளும் வந்திருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் பதில் எழுதுவது என்பது முடியாத காரியம்.  ஆனால், வாழ்த்து சொல்வதற்கு எங்கே இடமிருக்கிறது? துக்கச்செய்தி அனுப்பினால் அல்லவா பொருத்தமாக இருந்திருக்கும் என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். என் மனதில் வேதனையை தவிர இன்று வேறு எதுவும் இல்லை. என்னுடைய குரலோ தனித்த குரலாக ஒலிக்கிறது. என்னுடைய குரலை யாரும் காதில் வாங்குவதுபோல் தெரியவில்லை...'

பிறந்த நாள் பல கண்ட அந்த முதியவரின் புலம்பலுக்கு காரணம் இருந்தது. முப்பதாண்டுகளாக இந்து - முஸ்லீம் ஓற்றுமைக்காக குரல் கொடுத்தவரை உதாசீனப்படுத்தி விட்டு இந்திய யூனியனில் முஸ்லீம்களை அனுமதிக்கக் கூடாது என்கிற பிரிவினைவாத குரல்களுக்கு முக்கியத்துவம் கிடைத்துக்கொண்டிருந்த நேரம். பிரிவினை, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிட்டதாக மனச்சோர்வுடன் அவர் உதிர்த்த வார்த்தைகள்தான் அவை. 

'நான் 125 வயது வரை உயிரோடிருக்கவேண்டும் என்கிறார்கள். நீண்ட நாள் உயிர் வாழும் ஆசையெல்லாம் எனக்கு போய்விட்டது. என்மீது செலுத்தப்படும் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் கொஞ்சமும் தகுதியில்லாதவனாக ஆகிவிட்டேன். மது துவேஷமும், உயிர்க்கொலைகளும் அதிகமாகிவிட்ட நேரத்தில் என்னால் உயிர் வாழ முடியாது'  (ஹரிஜன், 12.10.1947)

இந்தியாவின் ஆதர்ஷ புருஷனாக இருந்து அகிம்சை என்னும் ஆயுதத்தின் துணைகொண்டு அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை முழுமையான ஜனநாயக தேசமாக நிர்மாணித்த அந்த தேச தந்தையின் கடைசித் தருணங்களை ஆண்டவன் நிம்மதியாக வைத்திருக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

'125 வயது வரை வாழ வேண்டும் என்று  ஆசைப்படாமல் இருப்பதோ, இப்போழுதே செத்துவிட வேண்டும் என்று விரும்பாலமலிருப்பதோ சிறந்த லட்சியம் என்பதில் சந்தேகமில்லை. எல்லாவற்றையும் கடவுளின் இஷ்டத்திற்கு ஒப்படைத்துவிட்டு சும்மா இருக்கவேண்டியதே என்னுடைய நிலையாக இருக்கவேண்டும். லட்சியம் நிதர்சனமாகிவிடும்போது, அது லட்சியமாக இல்லாது போகிறது. முடிந்தவரையில் அதை நெருங்க முயற்சிப்பது ஒன்றே நம்மால் செய்ய முடிந்தது.

125 வயது வரையில் வாழு விரும்புகிறேன் என்று பகிரங்கமாக சொல்லும் அதிக பிரசங்கித்தனம் எனக்கு இருந்தது என்றால், சமூக சூழல் மாறுபடும்போது அந்த ஆசையை பகிரங்கமாக விட்டுவிடும் பணிவும் எனக்கு இருந்தாகவேண்டும். மனிதன் தன்னை முஸ்லீம் என்றோ ஹிந்து என்றோ சொல்லிக் கொள்ள துணிந்து விட்டது மட்டுமல்லாமல், மிருகமாகவும் மாறி அரங்கேற்றிவரும் படுகொலைகளை தடுக்க எதுவும் செய்ய கையாலாகதாதவனாக பார்த்துக்கொண்டிருப்பதை விட துயரக்கடலிலிருந்து என்னைக் கொண்டு போய்விடுமாறே எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளான அந்த ஆண்டவனை நான் வேண்டிக்கொள்கிற§ன். ஆண்டவனுக்கு என் மீது கோபமிருந்தால் என்னை இந்த பூமியில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு வைத்திருப்பான்'.

Copyright © 2005 Tamiloviam.com - Authors