தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : நாணம்தான் பெண்களுக்குக் காவல்
- என். சொக்கன்

பாடல் 47

கனவில் சந்திக்கும் காதலர்கள், அப்படி என்னதான் செய்வார்கள் ?

நேரில் சந்திக்கையில் என்னவெல்லாம் செய்வார்களோ, அதே காட்சிகளைதான், கனவில், இன்னும் சற்று அதீத சுதந்திரத்துடன் அரங்கேற்றுகிறார்கள் காதலர்கள் - ஒருவரையொருவர் விழுங்கிவிடுவதுபோன்ற பார்வைகள், ஆசை ததும்பும் வார்த்தைகள், அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாதபோது சில திருட்டு முத்தங்கள், முரட்டு அணைப்புகள், செல்லச் சிணுங்கல்கள், இத்யாதி.

இந்தப் பாடலில் வரும் காதலி, தன் காதலனாகிய சோழனைக் கனவில் காண்கிறாள் - நிஜ வாழ்க்கையில் அவள் ஒரு சாதாரணப் பெண், அவனோ பெரிய அரசன், இவள் அவனை நினைத்து உருகுகிறாள், ஆனால் அவனோ, இவள் யாரென்றே தெரியாதவனாய் இருக்கிறான் !

அப்படியென்றால், அவர்கள் கனவில் சந்திப்பதுதான் பொருத்தம் - யதார்த்த வாழ்க்கையின் இந்தத் தொந்தரவுகள் எதுவும் இல்லாத கனவு உலகத்திலேனும், அவள் தன் காதலனோடு மகிழ்ச்சியாய் இருக்கலாமே.

ஆனால், இதுபற்றி நாம் அவளிடம் விசாரிக்கிறபோது, அவள் முகத்தில் வருத்தத்தைதான் பார்க்கிறோம்.

'ஏம்மா ? என்னாச்சு ? கனவில் உன் சோழன் வரவில்லையா ?', என்று விசாரிக்கிறோம்.

'வந்தான்.', என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்கிறாள் அவள். குரலில் கொஞ்சமும் உயிர்ப்பில்லை, ஆர்வமில்லை.

காவிரி நீர் பாயும் வளமான சோழ நாடு, அங்கே தென்னை மரங்கள் நன்றாக உயர்ந்து வளர்கின்றன, அந்தத் தென்னை மரங்களின் பாளைகளில், தேனீக்கள் தேனைச் சேமித்துவைக்கின்றன - செழிப்பான அந்த நாட்டின் தலைவனாகிய, இவளது காதலன் சோழன், இவளுடைய கனவில் வந்திருக்கிறான், பிறகு ஏன் இவள் இத்தனை வருத்தமாய் உட்கார்ந்திருக்கிறாள் ?

'என்னாச்சு பெண்ணே ? அவன் உன்னோடு பேச மறுத்துவிட்டானா ? கனவில்கூட உன்னைச் சந்திக்க விருப்பமில்லையா அவனுக்கு ?'

'அதெல்லாம் இல்லை, அவன்மேல் எந்தத் தவறும் கிடையாது., நான்தான் பைத்தியக்காரத்தனமாக ஒரு காரியம் செய்துதொலைத்துவிட்டேன்.', என்கிறாள் அவள்.

'அப்படி என்னம்மா செய்தாய் ? எதைத் தொலைத்தாய் ?'

'அவன்மேல் பொய்க் கோபம் கொண்டேன், அந்த ஊடலால், அவனையே தொலைத்துவிட்டேன் !', என்று கண்ணீருடன் சொல்கிறாள் அவள், 'அவன் என் கனவில் வந்தபோது, அவனுடன் சரியாக முகம்கொடுத்துப் பேசாமல், கோபம்கொண்டதுபோன்ற பாவனையில் திரும்பி அமர்ந்திருந்தேன், அப்போதுதான், அவன் என்னுடைய ஊடலைத் தணித்து, என்னை அணைத்துக்கொள்வான் என்று எண்ணினேன், ஆனால் அவன், நான் நிஜமாகவே அவன்மேல் கோபம்கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டு, என்னிடம் பேசாமலே விலகிச் சென்றுவிட்டான்.'

நெருங்கிய காதலர்களுக்கிடையே, 'ஊடல்' என்னும் பொய்க்கோபம் அவசியம் தேவை என்று திருவள்ளுவர் சொல்கிறார், 'ஆனால், அந்த ஊடலின் அளவு அதிகமாகிவிடக்கூடாது', என்றும் அவர் எச்சரிக்கிறார்.

'ஆமாம்., எனக்குதான் அது புரியவில்லை.', என்று ஒப்புக்கொள்கிறாள் அவள், 'என் காதலன் சோழனுடன் அளவுக்குமீறி ஊடல் கொண்டேன், அதனால், அவனுடனான கனவுக் கூடலின் இன்பத்தை இழந்துவிட்டேன்.', என்று பெருமூச்சுடன் சொல்லிமுடிக்கிறாள்.

அடுத்தமுறை, உங்கள் காதலியிடம் / காதலனிடம் பொய்க் கோபம் கொள்கிறபோது, இந்தப் பாடலை நினைத்துக்கொண்டு, கொஞ்சம் கவனமாயிருங்கள் - அளவுக்கு மிஞ்சினால், ஊடலும் நஞ்சு !


ஊடல் எனஒன்று தோன்றி அலர்உறூஉம்
கூடல் இழந்தேன் கொடிஅன்னாய் நீள்தெங்கின்
பாளையில் தேன்தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுள் பெற்று.

(அலர்உறூஉம் - பழிச்சொல் உண்டாகும்
கொடிஅன்னாய் - கொடி போன்றவளே (அழைப்பு)
தெங்கு - தென்னை
தொடுக்கும் - சேர்த்துவைக்கும்
புனல் - தண்ணீர்
கண்படை - கண் மூடித் தூங்குதல்)


பாடல் 48

பெருநகரங்களில், கடுமையான கோடைக்காலம் வரும்போதுதான், இலவச இணைப்பாக தண்ணீர்க் கஷ்டமும் கூடவே வரும் - இதுபோல வேண்டாத விருந்தாளிகளால் உண்டாகிற தொல்லைகள் கொஞ்சநஞ்சமில்லை.

உதாரணமாக, பெண்களின் இளமைப் பருவத்தை எடுத்துக்கொள்ளுங்கள் - காதலன் ஒருவனைச் சந்தித்து, அவனிடம் இதயத்தைப் பறிகொடுத்து, 'இனி எல்லாம் அவனே.', என்று அவனோடு ஒன்றாய்க் கலந்து மகிழவேண்டிய இனிமையான இந்தப் பருவத்தில்தான், பாழாய்ப்போன இந்த வெட்கமும் கூடவே வருகிறது.

'நாணம்தான் பெண்களுக்குக் காவல்.', என்கிற பழமொழிகளெல்லாம் சரிதான்., ஆனால், மனம் கவர்ந்த ஒருவனிடம் காதல் கொள்ளும் சமயங்களில், இந்த நாணத்தால் உண்டாகும் அவஸ்தைகளையும் கொஞ்சம் யோசித்துப்பார்க்கவேண்டும்.

உதாரணமாக - இந்தப் பெண், அழகிய தோள்களை உடைய சோழன் கிள்ளியிடம் காதல்வயப்பட்டிருக்கிறாள்.

அவன் வீதி உலா வரும் நேரம், அவனைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் முன்னே தள்ள, வாசலை நோக்கி ஓடுகிறாள் அவள், ஆனால், அங்கே சென்றதும், அவனை நிமிர்ந்து பார்க்கமுடியாதபடி, வெட்கம் அவளைத் தடுக்கிறது, சட்டென்று வீட்டினுள் திரும்பிவிடுகிறாள்.

சிறிது நேரத்துக்குப்பின், காதலால் மனதை திடப்படுத்திக்கொண்டு, மீண்டும் வெளியே ஓடுகிறாள், அவன் வரும் பாதையின் அருகே சென்றதும், மறுபடி வெட்கம் உயிரைக் கொல்ல, அவளுடைய தலை தானாய்க் கவிழ்ந்துகொள்ள, அங்கேயே நாணி நிற்கிறாள் அவள்.

இப்படி, ஒருபக்கம் காதலும், மறுபக்கம் நாணமும் அவளைப் பிடித்திழுக்க, இவற்றில் எந்தப் பக்கம் செல்வது என்று தீர்மானிக்கமுடியாதவளாய் அவள் திகைத்து நிற்கிறாள்.

அப்போதைய அவளுடைய நிலைக்கு, ஒரு அழகான உவமை சொல்கிறார் புலவர் - 'இருதலைக் கொள்ளி எறும்பு'.

அதாவது, ஒரு சிறு எறும்பு, நீளமான மூங்கில் குழாய் ஒன்றினுள் சிக்கிக்கொள்கிறது. சிறிது நேரத்தில், அந்தக் குழாயின் ஒரு பக்கத்தில் தீப்பிடித்துவிடுகிறது, இதை உணர்ந்ததும், சட்டென்று மறுபுறமாய்த் தப்பி ஓட நினைக்கிறது எறும்பு - ஆனால் பாவம், அந்தப் பக்கத்திலும் தீப்பிடித்திருக்கிறது.

'ஐயோ, இரண்டு பக்கமும் நெருப்பு எரிகிறதே, உடல் தகிக்கிறதே, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஏதேனும் ஒரு நெருப்பு என்னை நெருங்கிக் கொன்றுவிடுமே, இப்போது நான் எந்தப் பக்கமாய்த் தப்பி ஓடுவேன் ?', என்று அந்த எறும்பு தவிப்பதைப்போல, காதலுக்கும், நாணத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட இந்தப் பெண் வருந்திப் புலம்புகிறாள்.

இந்த நிலையைதான், கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் எழுதினார் -

'வா என்றது உருவம், நீ போ என்றது நாணம்,
கண் கொண்டது மயக்கம், இரு கால் கொண்டது தயக்கம் !'


நாண்ஒருபால் வாங்க நலன்ஒருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோள் கிள்ளிக்குஎன் கண்கவற்ற யாமத்து
இருதலைக் கொள்ளியின் உள்எறும்பு போலத்
திரிதரும் பேரும்என் நெஞ்சு.

(நாண் - வெட்கம்
ஒருபால் - ஒருபக்கம்
நெகிழ்ப்ப - நெகிழ்ச்சியடையச்செய்ய
காமருதோள் - அழகான தோள்
கவற்ற - வருத்தம் / கவலை உண்டாக்க
திரிதரும் - அலைந்து / சுழன்று / திணறி ஓடும்
பேரும் - பின்வாங்கும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors