தமிழோவியம்
சமையல் : இயற்கை உணவு
- ஜெயந்தி நாராயணன்

சமைக்காமலேயே சாப்பிட முடியுமா? ஒரு நாள் முழுதும் சமையலறைக்குள் போக வேண்டாமென்றால் நமக்கு எவ்வளவு குஷி! அடுப்பை மூட்டாமல் சமையலா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? எங்கள் வீட்டில் அப்படித்தான். வாரம் ஒருமுறை இயற்கை உணவுதான். பயன்படுத்தும் பாத்திரங்கள் மிகக்குறைவு. அடுப்பு சூடு படாது. எனவே சமையல் சிரமம் இல்லை. உடலுக்கும் ஆரோக்கியம். மருத்துவர்களும் இயற்கை உணவை உடல் ஆரோக்கியத்திற்கு சிபாரிசு செய்கிறார்கள்.  

நாம் வாரம் ஒருமுறையாவது முழுநேர இயற்கை உணவை உண்பது உடலுக்கு வலுவூட்டும்  என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தி  வருகிறார்கள். நாம் தினமும் காலை முதல் இரவு வரை உண்பதற்கேற்ப பிரித்து எழுதியுள்ளேன்.


காலை உணவு

இயற்கை சூப்

தேவையான பொருட்கள்

கேரட் - 2
பீட்ரூட் - 1
பூசனிக்காய் - 1 துண்டு
பிஞ்சாக உள்ள சிறிய சோளம் - 2
வாழைத்தண்டு - 1 கப் பொடியாக நறுக்கியது
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
புதினா இலைகள் - 5

செய்முறை

கேரட், பீட்ரூட் இவைகளைத் துருவி எடுத்து மிக்ஸியில் நீர் விட்டு அரைக்கவும். இதை வெள்ளைத் துணியில் வடிகட்டி ஜுஸ் எடுத்துக்கொள்ளவும். இதேபோல் பூசனிக்காயைத் துருவி ஜுஸ் எடுக்கவும். வாழைத்தண்டையும் அரைத்து ஜுஸ் எடுத்து பிறகு ஒன்றாகக் கலந்து விடவும். இதில் பிஞ்சான சோளத்தைப் பொடியாக நறுக்கி சேர்த்து அதனுடன் மிளகுத்தூள், ஜீரகத்தூள், எலுமிச்சை சாறு, தேன் இவற்றையும் கலந்துவிடவும். கடைசியாக புதினா இலைகளை தூவி இந்த இயற்கை ஸ¤ப்பை அருந்த மிகவும் சுவையாக இருக்கும். காலையில் நமக்கு இது புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் அளிக்கும்.பகல் நேரத்தில் லஞ்ச்

மிக்ஸ்டு வெஜிடபிள் சாலட்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் புளிப்பானது - 1
கொய்யா - 1
பச்சைதிராட்சை - 50கிராம்
பப்பாளி - 1 துண்டு
பீன்ஸ் - 1/2 கப் பொடியாக நறுக்கியது
கேரட் - 1 (தோல்சீவி துருவிக்கொள்லவும்)
காலி·ளவர் - 1/4 கப் பொடியாக நறுக்கியது
காய்ந்த திராட்சை - 10
வெல்லக்கரைசல் - 1/2 கப்
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை

ஆப்பிள்,கொய்யா,பப்பாளி இவைகளை தோல்,விதை நீக்கி சுத்தம் செய்து சிறிது சிறிதாக துண்டு செய்து அதில் பழம் நிறம் மாறாமல் இருக்க எலுமிச்சை சாற்றைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு இத்துடன் துருவிய கேரட், பீட்ரூட், காலி·ளவர், பீன்ஸ் சேர்க்கவும். பிறகு வெல்லக்கரைசல் (நீர் விட்டு கரைத்து வடிகட்டி வெல்லத்தைக் கரைசல் தயார் செய்யவும்) மிளகுபொடி, தேன் சேர்த்து எல்லாவற்றையும் சிறிய கரண்டியால் நன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். புளிப்பும் இனிப்பும் கலந்த இந்த சாலட் 1 கப் சாப்பிட்டாலே பாதி வயிறு நிரம்பிவிடும்.

அடுத்து நாம் தினமும் ஏதாவது காய்கறி சாப்பிடுவோம் அல்லவா? அதற்குப் பதிலாக இயற்கையான பொரியல் தயாரித்து சாப்பிடலாம்.

(தொடரும்...)

Copyright © 2005 Tamiloviam.com - Authors