தமிழோவியம்
க. கண்டுகொண்டேன் : படாம் : உயிர் கொடுக்கும் கயிறு
- ரமா சங்கரன்

பெண்கள் வாழ்க்கையில்  ஏதேனும் பெரிய சிரமங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகும்போது "எனக்கு ஒரு முழம் கயிறு கொடு. போய் சேருகிறேன்" என்பார்கள். இது வழக்கமாகத் திரைப்படங்களில் நாம் கேட்கும் வசனம் கூட. ஆனால் இதே கயிறு ஒரு சிறிய தீவில் தம் பெண்மையை விற்று வாழும் அபலைப் பெண்களுக்கு தினமும் உயிர் வாழ உதவி செய்கிறது. பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும்  ஈடுபட்டுத்தப்பட்டுள்ள  பெண்கள் வீடுகளின் மாடியில் படாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாலை 530 மணி வரை கீழே வரத் தடை. இவர்களுக்கு ஓய்வு என்று சொல்லப்படுகிறது. அடுக்கு அடுக்கான படுக்கைகள். ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று பெண்கள். பசிக்கும்போது தெருவில் உணவு, காப்பி, டீ, தின்பண்டம் விற்கும் ஆட்களிடமிருந்து தேவையானதை வாங்க கயிற்றை கட்டி அதில் ஒரு டப்பாவுடன் இறக்குவார்கள். பின் மேலே இழுத்துக் கொள்வார்கள். பின் அதிலேயே காசைப்போட்டு மீண்டும் கீழே இறக்குவார்கள். இப்படி கயிற்றின் வழி பகல் முழுதும் பெரும்பாலும் வாழ்க்கை ஓடுகிறது. பெரியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இதுபோன்ற மாடி வீட்டு வாழ்க்கை நடத்தும் பெண்கள் இரவு விடுதிகளிலும் எஸ்கார்ட் சர்வீஸ்களிலும் பார்களிலும் பின் உடலால் உழைக்கிறார்கள்.

இதுபோன்ற மாடியின் கீழே மிகப் பிரபலமான ஹார்டு ராக் க·பே. மேலே பரபரப்பாக இயங்கும் ஒரு மதுபானக் கடை. Lucy's and Banana Bar.  இதை நிர்வகிப்பவர் ஜோன்ஸ் என்னும் ஒரு ஆஸ்திரேலியர். அவருடன் பேசுவது மிக சுலபமாக இருக்கிறது. என் நண்பர் ஒருவர் கொடுத்த தகவல்படி பனானா பாரில் கீழே உள்ள ஹார்டு ராக் க·பேயைவிட கூட்டம் எப்போதும் அதிகம். மிகத்தைரியமாக ஜோன்ஸ் பேசுகிறார். தன்னுடைய பாரில் வேலை செய்யும் பெண்கள் எல்லாம் ஏஜெண்டுகள் மூலம் ஒப்பந்தத்தில் வந்திருக்கிறார்கள். ஒப்பந்தம் பற்றி விவரங்கள் சொல்ல முடியாது என்றார். இவர்கள் குறைந்தது மூன்று மாதங்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஏஜண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 12 -15 சிங்கப்பூர் டாலர்களை சம்பாதித்து தர வேண்டும் என்றும் கூறினார். வேறு ஏதாவது செய்தி வேண்டுமானால் அந்த பெண்களிடமே கேட்கலாம் என்றார்.

அப்படி அவர் சுட்டிக்காட்டிய ஒரு பெண்தான் ஷபியா.  இப்போது ஷபியாவிற்கு வயது 18. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவள் தன் பாட்டியுடன் ஜாவாவில் வசித்து வந்தாள். இவளை பக்கத்து வீட்டு மாமா டிரிஸோனோ படாம் அழைத்துச் சென்று உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவதாகச் சொல்லவே அவருடன் புறப்பட்டு வந்தாள் ஷபியா. நான்கு ஆண்டுகளுக்கு முன்  அவளை இப்படி பொய் சொல்லி அழைத்து வந்து  600 சிங்கப்பூர் டாலருக்கு நைட்கிளப் ஒன்றிற்கு விற்றுவிட்டுச் சென்று விட்டார் அவர். அவள் பச்சிளங்குருத்தாக முதன்முதலில்  அவள் சந்தித்தது ஒரு சீனரை. அவர் படாமில் உள்ள பொழுதுபோக்கு (theme parks) பூங்காக்களுக்கு அழைத்துப் போவதாகச் சொல்லி அவளைத் தன் வசப்படுத்திக் கொண்டார். பகல் முழுதும் சுற்றிக்காட்டி விட்டு பின் இரவில் அவளுடன் பொழுதுபோக்க விரும்பினார். அப்போது அவள் இருந்தது ஒரு "Momma"வின் வசம்.வைந்த மாம்மோக்கள் பொதுவாக கண்டிப்பான பெண்மணிகள். இம்மாதிரியான பெண்களை தம் பாதுகாப்பில் வைத்துக் கொள்பவர்கள்.  தனது பேத்தியின் நிலையை ஊர்காரர் ஒருவர் மூலம் அறிந்து பாட்டி உள்ளூர் போலீசிடம் தெரிவித்தார். இந்தோனீசியாவில் சட்டப்படி பெண்களை விபச்சாரத்திற்கு  விற்பது தவறு. ஆனால் லஞ்சம் கொடுத்தால் சமாளித்து விடலாம். டிரிஸோனாவை கைது செய்தனர் போலீஸார். ஷபியாவின் பாட்டி போலீஸாரின் உதவியோடு அவளை மீட்டார். ஆனால் அடுத்த ஒரு வருடத்தில்  ஷபியா மீண்டும் பாடாம் சென்று ஒரு பாரில்(bar) வேலைக்குச் சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. குடும்பத்தின் வறுமையைப் போக்க இந்த பச்சிளங்குமரி தன் உடலைத்  தினமும் விற்கும் நிலை.

ஷபியாவைப் போல பனானா பாரில் வேலை பார்க்கும் 15 பெண்கள் மேலே மாடியில் கயிற்றின் வழிதான் வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்களை வெளியே விட்டால் இஷ்டப்படி சென்று போதை மருந்து உண்பது, மது அருந்துவது என்று திரிவார்கள். எனவே பகலில் கட்டாய ஓய்வு கொடுப்பதுடன் இரவில் இவர்களை நாடி யாரும் வராவிட்டால் வேலை முடிந்து மேலே அனுப்பி விடுவேன் என்றும் ஜோன்ஸ் தன் செயலை நியாயப்படுத்தினார்.

இப்படி நான்  படாமில் வேலை செய்யும் என் நண்பர் ஒருவரின் உதவியோடு  முதல்தடவையாக படாமைச் சுற்றிப் பார்க்கச் சென்றேன். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். டாக்ஸி எளிதாக கிடைக்கும். சிங்கப்பூர் உலக வர்த்தக மையத்திலிருந்து படாமின் வாட்டர் ·ப்ரண்ட் மையத்திற்கு(Water Front Centre) 17 சிங்கப்பூர் டாலர்கள் கட்டணம். சிங்கப்பூரின் வடகிழக்கே  20கீமீ தொலைவில் அமைந்துள்ளது (நிலவழியாக 35கிமீ தூரம்)  படாம்.  குளிர்சாதன வசதியுடன் கூடிய விரைவுப் படகுகள் அல்லது ·பெர்ரி மூலம் "Two way seaport Tax" உள்பட போய்வர 25 சிங்கப்பூர் டாலர்கள்  செலவாகும். காலையில் சென்றால் இரவு திரும்பி விடலாம். கிட்டத்தட்ட 35 நிமிடப் பயணம். மிகக் கொஞ்சமாகவே டாக்ஸிடிரைவர்கள் ஆங்கிலம் பேசுகின்றனர். "படாமில் தூய்மையான ஹோட்டல் கிடைப்பது கடினம்" என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும் நான்கு நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. கோல்·ப் விளையாட்டிற்கான உல்லாச விடுதிகளும்  உள்ளன.

என் நண்பர் அங்குள்ள பிலிப்ஸ் பாக்டரியில் வேலை செய்பவர். கிட்டத்தட்ட 12000 சதுர மீட்டர் பரப்பில் பிலிப்ஸ் பேக்டரி உள்ளது. சிங்கப்பூரிலிருந்து வாரத்திற்கு மூன்று முறை இங்கு வந்து போகிறார். சிங்கப்பூரின் பன்னாட்டு நிறுவனங்கள் பல இதுபோன்று படாம் தொழில்சதுக்கத்தில் முதலீடுகளை செய்து வருகின்றன. சில  தம் தொழிற்சாலைகளை இங்கு நிறுவியுள்ளன. அண்மையில் படாமில் 200 பொறியாளர்கள் வேண்டும் என பிலிப்ஸ் நிறுவனம் சிங்கப்பூர் பிசினஸ் டைம்ஸ் செய்தித்தாளில் அறிக்கை வெளியிட்டிருந்தது. படாமின் பன்னாட்டு ·பெர்ரி மையம் சுறுசுறுப்பாக இயங்குகிறது. மலேசியாவின் ஜோஹ¥ரிலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் இங்கு ·பெர்ரிகள் வருகின்றன. படாமின் அடிப்படை வசதிகள், பொருளியல் முன்னேற்றத்தில் சிங்கப்பூர், மலேசியாவுடன் இணைந்து இந்தோனீசியா  செயல்பட்டு வருகிறது.  இங்கு நடைபெறும் சமூகக் கேட்டை விளைவிக்கும் சிவப்பு விளக்கு பகுதிகளை அகற்ற தீவிரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று சமூகநல அமைப்புகள் கூறுகின்றன.

படாம் மிகச்சிறந்த நீர்விளையாட்டுகளையும் கோல்ப், கார்ட்டிங், கேசினோவையும் கொண்ட பொழுதுபோக்கு தலமாகவும் இருக்கிறது. Top 100 Mall  என்னும் மிகப் பெரிய ஷாப்பிங் மால் சுவாரஸ்யமாக உல்லது. படாமில் பல உருப்படியான நடவடிக்கைகளும் உண்டு. இங்கு டைவிங் பயிற்சி வழங்க சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற நிறுவனங்களும் பயிற்சியாளர்களும் உள்ளனர்.  ஆனால்  சிங்கப்பூரின் "விளையாட்டுத்தலம்" என கேலியாகவும் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூரின் மூன்றில் ஒருபங்கு பரப்பளவு உடையது படாம். ஆனால் ஐந்து லட்சம் மக்கள் மட்டுமே இங்கு வாழ்கின்றனர். இங்கு வருபவர்களில் 98% ஆசியர்கள் என்று லக்ஸ்மன்.நெட் கூறுகிறது. இவர்களில்  குறிப்பாக வாரஇறுதி நாட்களில் இங்கு வருபவர்கள்  சிங்கப்பூரர்கள்.   உல்லாசத்திற்காகவும் இரவு கேளிக்கைகளை நாடியும் வருபவர்கள். கிட்டத்தட 20000 பெண்கள் இங்கு பலியல்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களில் 9000பேர் தக்க வயதை அடையாத சிறுமிகள்.  இந்தோனீசியாவின் முன்னாள் அதிபரான மெகாவதி கடந்த ஆண்டு தேசிய குழந்தைகள் தினத்தில் பேசும்போது இந்த புள்ளி விவரத்தைக் கூறியதோடு படாமை குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் தடையில்லா வட்டாரம்(Free Zone) என வருத்ததுடன்   கூறியுள்ளார். இவர்களை போலீஸார் அவ்வப்போது மீட்கிறார்கள். ஒருதடவை 64 இரவு விடுதிகளில் ஒரே சமயத்தில் போலீஸார் வலை விரித்தபோது சில ஆயிரம் பிள்ளைகளை மீட்டனர் என்று படாமின் தேசிய குடும்ப நல வாரியத்தைச் சேர்ந்த பெப்ரினா  கூறினார். 
 
திருமதி பெப்ரினா யாஸ்விர்  மூன்று ஆண்டுகளாக படாமில் வாழும் பாலியல் தொழிலர்களுடன் போராடி வருகிறார். அவரைப் பற்றிய விவரங்களை நான் இங்குள்ள  இந்தோனீசிய தூதரகத்திலிருந்து சேகரித்துக் கொண்டேன். ஆங்கிலம் பேசுவதால்  பத்திரிகைகாரர்களுக்கு நிறைய உதவி செய்கிறார். நான் மேலே சொன்ன மாதிரியான அதே கதை- டேவி என்னும் மற்றொரு பெண்ணைப் பற்றியது. டேவியின் படத்துடன் "The Age" பத்திரிகையில் வந்துள்ள செய்தியைக் காட்டினார் பெப்ரினா. வாரத்திற்கு 600 சிங்கப்பூரர்கள் செல்வதாக அச்செய்தி கூறியது.  படாமிற்கு வருகைபுரிவோரில் 80% பயணிகள் சிங்கப்பூரர்கள். எந்த புள்ளிவிவரமுமே சரியானதாக இருக்காது என்றார் அவர்.   

படாம் சென்ற கதையைச் சொல்ல எனக்கு  சங்கடமாக இருந்தது உண்மைதான். ஆனால் படாமைப் பற்றி முழுதும் தெரிந்து கொண்டால்   வித்தியாசமாகவும் விநோதமானதாகவும் நமக்கு இருக்கும்.    படாம் தீவைப் பற்றிச் சொல்ல இரண்டே செய்திகள்தான் உள்ளன. படாம் பூகோள ரீதியாக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வணிகம், சுற்றுலா, தொழில் மையங்கள், அலுவலகக் கட்டிடங்கள், அடுக்குமாடி ஷாப்பிங் மால்கள் என இந்தோனீசியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்ற ஆயத்தாமாகிக் கொண்டிருக்கும் சிறு தீவு. எயிட்ஸ் வேகமாகப் பரவி வரும் தீவு என்பது மற்றொரு செய்தி.  தாய்லாந்தைவிட வேகமாக பரவி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் அந்நிய நாட்டு முதலீடுகளை கவருவதிலும் வேகமாக படாம்  முன்னேறி வருகிறது.  கடந்த ஆண்டு மட்டும் 8 பில்லியனுக்கு மேல் அயல்நாட்டு வணிக முதலீடுகளை கவர்ந்திருக்கிறது படாம்.

சட்டபூர்வமாக இங்கு ரெட் லைட் பகுதிகளை ஒழிப்பது கடினம். ஆனால் தாய்லாந்து மாநாடுகளில் தீர்மானங்கள் இயற்றப்பட்டதைப்போல இந்த பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை சரி செய்யவும் அவர்கள்  கட்டாயமாக இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்களை சட்டத்தின் வழி தண்டிக்கவும் இந்தோனீசியா முயற்சிகளை தீவிரமாக எடுக்க வேண்டும். 1979ஆம் ஆண்டில் ஈரானில் இஸ்லாமிய நிர்வாகமுறை சட்டப்பூர்வமாக்கப்பட்டபோது விபச்சாரம் ஒழிக்கப்பட்டது. டெஹ்ரானின் மத்திய பகுதியில் இருந்த 'நியூ சிட்டி' என்னும் ரெட்லைட் பகுதி அகற்றப்பட்டது. அரசாங்கக் கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டன. ஆனால் குடும்பங்களில் மெதுவாக படரத்தொடங்கிய வேலையின்மை, மதுப்பழக்கம், சமூக ஆதரவின்மை ஆகியவை விபச்சாரத்தை வளர்க்கத்தொடங்கின. இதனால் ஈரானில்  1.7 மில்லியன் அதாவது மொத்தப் பெண்கள் எண்ணிக்கையில் 6% விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக 2002ஆம் ஆண்டில் ஒரு செய்தி (The Independent) குறிப்பிட்டது.  இதற்காக அரசாங்கத்தின் முறைகேடான நிர்வாகத்தையும் பொருளியலையும் அரசியல் நோக்காளர்கள் குறைகூறியுள்ளனர்.

ஆனால் படாமின் சூழல் வேறு. இதன்  பொருளியல் தற்போது ஏற்றம்  கண்டுகொண்டிருக்கும் காலம் இது. வளமையான வாழ்க்கையின் பலனை அனுபவிக்கும் சந்தர்ப்பங்களை மக்கள் பெறும்போது சட்டத்தின் மூலம் சமூகக் கேடுகளை ஒழிக்கலாம். கட்டுக்குள் கொண்டு வரலாம். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். தாங்கள் கண்ட பலத்தை நிரந்தரமாகத் தக்க வைத்துக் கொள்ள சில  பலவீனங்களை கட்டாயமாகக் களைவதை பொருட்படுத்தமாட்டார்கள். சிங்கப்பூர் இதற்கு நல்ல உதாரணம். இதைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறதே  இந்தோனீசியா!

Copyright © 2005 Tamiloviam.com - Authors