தமிழோவியம்
திரையோவியம் : பிளைட் 172 டி.வி.டி - வி.சி.டி வெளியீட்டு விழா
- என்.டி. ராஜன்

பிளைட் 172 டி.வி.டி  - வி.சி.டி வெளியீட்டு விழா

மெளலி இயக்கி நடித்த பிளைட் 172 நாடகத்தின் வெளியீட்டு விழா கமல் தலைமையில் கடந்த செவ்வாய் அன்று நாரத கான சபாவில் நடைபெற்றது. இவ்விழாவில் நாகேஷ், பார்த்திபன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர் மற்றும் மனோராமா உள்ளிட்ட பல கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்ற மெளலி, இந்நாடகம் 35 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது என்றும் இந்நாடகத்தை முதன் முதலில் அரங்கேற்ற உதவிய மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதிக்கு தன்னுடைய மனமார்ந்த நன்றிகளை என்றும் தெரிவிக்க கடமைப்பட்டவன் என்றும் குறிப்பிட்டார். இந்த நாடகத்தின் டி.வி.டி - வி.சி.டி பிரதிகளின் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் கேன்சர் நோயாளிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். விழாவில் பேசிய நாகேஷ¤ம் மனோரமாவும் தங்கள் நாடக அனுபவங்களை நினைவுகூர்ந்தார்கள். பிளைட் 172 நாடகத்தில் நடித்த ஏ.ஆர்.எஸ் மற்றும் நீலு உள்ளிட்ட கலைஞர்கள் விழாவில் பங்கேற்றார்கள்.


செளக்கார் ஜானகிக்கு சிவாஜி நினைவு விருது

செளக்கார் ஜானகி, காகா ராதாகிருஷ்ணன், பழம்பெரும் இயக்குனர் கே.சங்கர் மற்றும் சண்டை பயிற்சியாளர் ஏ.டி.வெங்கடேசன் முதலானோர் இந்த வருட சிவாஜி நினைவு விருதைப் பெறுகிறார்கள். இத்தகவலை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த சிவாஜியின் புதல்வர் ராம் குமார், தமிழ் திரைப்படத்துறைக்காக ஆற்றிய சேவைகளுக்காக இவர்களுக்கு இந்த் விருது வழங்கப்படுவதாகக் கூறினார். அக்டோபர் 1 ஆம் தேதி நடக்க இருக்கும் சிவாஜியின் 77வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் தத், நீதிபதி சொக்கலிங்கம் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் விருதுகளை வழங்கி விழாவைச் சிறப்பிப்பார்கள் என்று ராம் குமார் தெரிவித்தார்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors