தமிழோவியம்
கவிதை : வாழ்க்கை சிகரெட் - காதல் நெருப்பு
- ராசுகுட்டி

 

குளிர்கால இரவது
என் கம்பளி ஜில்லிட்டுக் கிடக்கிறது

கலைந்த என் தூக்கமங்கே
நெளிந்து புரள்கிறது

பரிதாபப்பட்ட முட்டாள் இயற்கையோ
பனிப்போர்வை போர்த்திச் செல்கிறது

நுரையீரலையாவது கதகதப்பூட்டலாமென்று
தேடியதில் கிடைத்தது
தீக்குச்சியில்லா தீப்பெட்டியும்
கன்னித் தன்மையோடு ஓரு சிகரெட்டும்

தீப்பொறியாய் உதிர்ந்த நட்சத்திரமொன்று
என் கை சேரும்முன்னே அணைந்து போயிற்று

நெருப்பின்றி புகையாதே - பனிப்புகை பார்த்தேன்
நிச்சயம் நெருப்பிருக்கும் மேலே

விழுகின்ற வெண்பனி விழுதேறி
விண்ணுச்சி அடைந்தேன் சிகரெட்டோடு

மேகக் கிளைகள் ஒதுக்கினேன்
சில நட்சத்திரப்பூக்கள் உதிர்ந்தன

அதிர்ந்த நீ நிமிர்ந்து பார்த்தாய்
அட, தீப்பொறி தேடிவந்தால், தேவதை

உன் கையில் நிலாக் கண்ணாடி
எனக்கிப்போது இரு நிலவுகள் தெரிந்தன

உச்சிக் கிளையிலிருந்து உன்னருகே குதித்தேன்
பதறிய நீ, உதறியதால் சிதறியது, நிலாக்கண்ணாடி
விண்வெளியெங்கும் நீ, நான் இறைந்து கிடந்தோம்

உதயசூரியனின் சாயமெடுத்து,
பூசிக்கொண்ட உதடசைத்து
என்ன வேண்டுமென்றாய் நீ

என் சிகரெட் பற்ற வைக்க
கொஞ்சம் நெருப்பு வேண்டுமென்றேன்

சிக்கி-முக்கி கல்லாய் உரசிக்கொண்டோம்
தெறித்த பொறியொன்று வெறிகொண்டெரிந்தது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors