தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஏற்ற தருணம் நோக்கி எடுத்துவை உன்னடியை.
- எஸ்.கே

யாரிடமாவது உதவி கேட்கச் செல்லும்போது கட்டாயம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அந்த நபர் தனியாக இருக்கும்போதுதான் நீங்கள் உங்கள் பிரச்னையை அவருடன் பகிர்ந்துகொண்டு, அவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் உதவி என்ன, அது உங்களுக்கு எவ்வளவு முக்கியம், அதனை அவர் எவ்வாறு செய்ய இயலும் என்பதை விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். யாராவது கூட இருக்கும்போது - முன்னேபின்னே அறியாத அந்நியன், அயலான், காக்கன்போக்கன், வேற்றான், யாராக இருந்தாலும் சரி - பேசத் தொடங்கக்கூடாது. இதே கருத்தினை இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியில் இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். உதவி கேட்பதற்காக மட்டுமின்றி தொழில் நிமித்தமாக முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பாகவோ, அந்தரங்கமான விஷயங்களைப் பற்றியோ முக்கிய ஆலோசனைகளை கேட்கச் சென்றாலும், நீங்கள் சந்திக்கும் நபர் தனியாக இருக்கும்போது கேட்டல் நலம். இதற்கு நான் கூறியிருந்த காரணம் - அருகிலிருக்கும் நபர்கள் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்லி காரியத்தைக் கெடுத்துவிடுவர். அல்லது நீங்கள் அங்கிருந்து வெளியேறியதும் ஏதாவது சொல்லி அந்த முக்கியஸ்தரின் மனத்தை மாற்றி உங்களுக்கு பாதகம் விளைவித்துவிடுவர். மேலும் நீங்கள் விவாதித்த பொருள் உடனிருந்த நபருக்கு ஏதானும் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாக இருக்கலாம். உங்களுக்கு உதவி கிட்டுமானால் அது அவருக்கு பாதகமாக அமையலாம். ஆகையால் தனியே சென்று "காதும்-காது"மாக அணுகுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் இத்தகைய அணுகுமுறைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என்பதை இப்போது விளக்க முற்படுகிறேன். சமூகத்துக்கு முன்னால் வேஷம் போட முனைவது மனித இயல்பு. இல்லாத ஒரு பிம்பத்தை மக்கள் மனதில் புகுத்த இதுபோன்ற வெளித்தோற்றத்தை காண்பிக்க முயல்வர். அதனால்தான் மனிதர்கள் ஒரே விஷயத்தில் தனியாக இருக்கும்போது ஒருவித நிலைப்பாட்டையும், நாலுபேர் முன்னிலையில் அதற்கு மாறான நிலைப்பாட்டையும் எடுக்கிறார்கள். சமூகத்தின் முன் ஒரு இமேஜை காண்பிக்க முயல்வது இயற்கை. நீங்கள் ஒரு உதவிவேண்டி ஒரு பெரிய மனிதர்முன் நிற்கிறீர்கள். அப்போது அந்த அவையில் பலர் இருக்கின்றனர். அங்கு குழுமியுள்ளவர்கள்முன் அந்த பெரிய மனிதர் தன்னை பெருமையாக வெளிக்காண்பிக்க முற்படும் நோக்கில் இருப்பவர் என்றால், உங்களுக்காக இரங்கினால் தான் ஒரு மனவலிமையற்ற, எளிதாக பிறரால் தன்வசப்படுத்தக்கூடியவன் என்று கணக்குப் போட்டுவிடுவார்களோ என்றெண்ணி, மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, அது உங்களுக்கு பாதகமாக அமையக்கூடிய வாய்ப்புள்ளது. இதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. தனியாக இருக்கும்போது, முதலில் முடியாது என்றாலும், பின்னால் மனம் மாறி சாதகமான பதில் கூற ஏது உண்டு. ஆனால் பலர் முன்னிலையில் அடித்துக் கூறப்பட்ட முடிவு "அசலே உறுதி" என்று கட்டமைக்கப்பட்டுவிடும். அதனின்று மாறினால் எங்கே தன் ஆளுமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்றஞ்சி அந்த முடிவையே வலியுறுத்திவிடுவர். அதனால் நீங்கள் பொதுவில் கொணர்ந்து உங்கள் வேண்டுகோளை வைப்பதால் நீங்களே உங்களுக்கு சாதகமில்லாத ஒரு முடிவை இறுக்கி முடிச்சுப் போட்டுவிடும் ஆபத்து உள்ளது.

ஏதாவது பணமோ, பொருளோ ஒரு பொதுக் காரியத்திற்காக வசூல் செய்ய ஒரு பெரிய மனிதரைக் காணச்செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நாலுபேர் முன்னால் தான் பெரிய கொடையாளி என்று காண்பிக்க ஒரு ஒலிம்பிக் கஞ்சன் கூட ஏதாவது பத்துகாசு உண்டியலில் போட வாய்ப்புள்ளது. அல்லது அதற்கு எதிர்மாறாக "தன் மனத்தை இதுபோல் இளைக்க வைக்க முடியாது; தனக்கு இதுபோன்ற விஷயங்களில் தீர்மானமான கொள்கைகள் உண்டு" என்பதுபோல் சித்தரிக்க எண்ணி, "எனக்கு இதுபோல் அதற்கு, இதற்கு என்று வசூல் பண்ணுவது கொஞ்சமும் பிடிக்காது. தினந்தோறும் இதுமாதிரி நாலுபேர் ரசீது பொஸ்தகமும் கையுமா கெளம்பி வந்தூடராங்கப்பா. இவங்க தொல்லை தாங்க முடியல்லை. என்ன நான் சொல்றது? ஹஹ்ஹா!" என்று எகத்தாளமாகக்கூறி கூடிருப்பவர்களைப் பார்ப்பார். அங்கே குழுகியிருக்கும் ஒன்றிரண்டு "லோட்டாக்கள்", "சரியான போடு போட்டீங்க. இதையெல்லாம் தடுக்க ஒரு சட்டமே வேணும்" என்று ஒத்து ஊதுவார். மனித மனமே சூழ்நிலைகளின் கைதிதானே. இந்த அடிப்படை மனப்பாங்குதான் நாம் எடுக்கும் முடிவுகளையும் கட்டுப்படுத்துகிறது. மனிதனின் இந்த உள்ளப்பாங்கை நாம் நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் நம் முயற்சிகளில் வெற்றிகாணலாம்.

இதுபோல் நம் தனிப்பட்ட விண்ணப்பங்களை பொது இடங்களில் கூறுவது சரியா என்ற கேள்வி எழும். அதாவது, ஒரு பார்ட்டியிலோ, இசை நிகழ்ச்சியிலோ, இரயில் நிலையம் அல்லது ஏர்போர்ட்டில் காத்திருக்கும்போதோ ஒருவரை தனிமையில் (இது மிக முக்கியம்) சந்திக்க நேரும்போது உங்கள் கோரிக்கைகளை அவர்முன் வைக்கலாமா என்றால், அவர் அப்போது இருக்கும் மனநிலைப்படி சாதகமாக இருந்தால் தாராளமாக அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசத் தொடங்கலாம். அவர்கள் மனம் இளகி உங்களுக்கு அனுகூலம் கிட்டும் வாய்ப்புள்ளது. "நாளைக்கு ஆபீசில் வந்து பாருங்கள்" எனலாம். அல்லது நீங்கள் சந்திக்கும் இடம் வாஸ்துப்படி உங்கள் கிரகங்களுக்கு இணக்கமாக இருந்தால் அவர் தன் செல்பேசியின் துக்கினியூண்டு பட்டன்களைத் தட்டி அங்கேயே உங்கள் வேண்டுகோள் தொடர்பான ஆணைகளை பிறப்பிக்கலாம்!

இன்னொரு விஷயம். உங்களுக்கு இருக்கும் சில பிரச்னைகளை எடுத்துக்கூறி அதற்கான நிவாரணம் தேடி அதனை அளிக்கக் கூடிய நபரிடம் செல்கிறீர்கள். அவர்கள் மனத்தில் இரக்கம் தோற்றுவிப்பதற்காக உங்கள் குறைகளை விலாவாரியாக நீட்டிமுழக்கி ஓலமிடாதீர்கள். அல்லது அழுத்தி மனதில் படிய வைக்கிறேன் என்று பன்னிப்பன்னி சொன்னதையே திருப்பித் திருப்பி உருட்டாதீர்கள் கேட்பவருக்கு உங்கள்மேல் சலிப்பு வந்துவிடும். அவர்கள் உங்களைத் தவிர்க்க முயல்வர். அப்புறம் "வந்தூட்டான்யா" கேஸ்தான்! உங்கள் பெயரைக் கேட்டாலே ஓடிஒளிவர். மனித மனத்தின் எண்ண ஓட்டங்கள் செல்லும் திசையைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லோருக்கும் பிரச்னைகள் இருக்கும். எல்லோர் மனத்திலும் ஏதாவது கவலைகள், ஏக்கங்கள், ஆற்றாமைகள், இழப்புக்களைப் பற்றிய சிந்தனைகள் போன்றவை மனத்தினுள் அரித்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சாதகமற்ற, நலக்கேடான நிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகளை அவர்கள் தன் மனக்கண்முன் எழாவண்ணம் ஒரு மூலையில் பூட்டிவைத்திருப்பார்கள். நீங்கள் பாடும் புலம்பல்கள் அவர்களுக்கு தன் இழப்புக்களையும் வேறுபல பிரச்னைகளையும் நினைவுக்குக் கொணர்ந்து அவர்கள் மனத்தில் முன்னின்று ஆக்கிரமித்துக் கொள்ளும்படி செய்துவிடும். பிறகு உங்கள்மேல் எரிச்சல் கொண்டு, உங்கள் நினைவே அவர்கள் மனத்தில் கசப்பான உணர்ச்சிகளையும் எதிர்மறையான பிம்பத்தையும் தோற்றுவிக்கும். அதனால் உங்கள் sob story-ஐ சுருக்கமாக கோடி காண்பித்து, சொற்களை அடுத்தவர் முகக்குறிபார்த்து மாற்றியமைத்து நம் கருத்தை முன்வைக்கவேண்டும்.

நான் எடுத்துரைக்கும் கருத்துக்கள் வாழ்வோடு ஒன்றியவை. ஆனால் எதுவும் புதிதல்ல. பல நன்னூற்கள் வாயிலாக நாம் அறிந்தவைதான். பிறர்மனம் செல்லும் போக்கை கருத்தில் கொண்டு நம் செயல்பாட்டை சிறிது மாற்றியமைத்துக் கொண்டால் இவ்வுலகம் நமக்கு ஆட்படும். நம் வாழ்வில் வெற்றியும் மகிழ்வும் கிட்டும் என்பது திண்ணம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors