தமிழோவியம்
தராசு : லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள்
- மீனா

சென்னையில் ரூ.1,600 லஞ்சம் வாங்கியதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சேலத்தைச் சேர்ந்த 2 மின்சாரப் பணியாளர்களை ரூ.650 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளார்கள். அதிரடியான நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறான நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொண்டால் தான் நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சப் பேய் கொஞ்சமாவது அடங்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை.

தவறு செய்தவர்கள் அனைவரும் தண்டனைக்கு உரியவர்கள். இதில் கருத்து வேறுபாடே கிடையாது. ஆனாலும் சில நெருடல்கள். லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யும் பெரும்பான்மையானோர் வாங்கும் லஞ்சப் பணம் சில நூறுகளிலோ, சில ஆயிரங்களிலோ தான். இவர்களை அதிரடியாக கைது செய்து, அதைப் பத்திரிக்கைகளில் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏன் மேல்மட்ட அதிகார வர்கத்தினரை தொட அஞ்சுகிறார்கள்? சில நூறு ரூபாய் தவறுகளைத் தட்டிக் கேட்கும் அதிகாரிகளின் தைரியம் ஏன் மேல் மட்ட அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கண்டால் காணாமல் போகிறது? கீழ்மட்ட ஆட்களைக் கைது செய்தால் ஒரு பிரச்சனையும் வராது.. கேட்பதற்கு யாரும் வரமாட்டார்கள். ஆனால் அதுவே மேலிடமானால் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும் என்ற பயம் தான் காரணமா?

ஒரு கையெழுத்துப் போட கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் அமைச்சர்கள் தொடங்கி, கார்ப்பரேஷன் குழாய் கனெக்ஷன் கொடுக்க லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கும் வார்ட்டு கவுன்சிலர் வரை அரசியல் சார்ந்த பிரமுகர்களைக் கைது செய்யவோ, அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவோ எப்போதும் தயக்கம் காட்டும் லஞ்ச ஒழிப்புத் துறை - தாங்களும் வேலை செய்கிறோம் என்பதைக் காட்டிக்கொள்ளவே இத்தகைய சின்னச் சின்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

வங்கிகளில் கடன் வாங்கும் ஒரு ஏழை விவசாயிடம் கடனை வசூலிப்பதில் காட்டும் அக்கறையை கோடிக்கணக்கில் கடன் வாங்கியிருக்கும் ஒரு தொழிலதிபரிடம் காட்டத் தயங்குகிறார்கள். கேட்டால் பிரச்சனை வரும் என்ற பயம். அதே கதை தான் லஞ்ச ஒழிப்புத் துறை, நீதித்துறை என்று அனைத்து துறைகளிலும் நடக்கிறது. சாதாரண குடிமகனிடம் கண்டிப்பும் கறாராகவும் நடந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த துறையினரும் மேல்மட்டத்தினரிடமும் அதிகார வர்கத்திடமும் அடக்கியே வாசிக்கிறார்கள்.

என்று லஞ்சம் வாங்கும் குற்றவாளிகள் அனைவர் மீதும் அவர்களது பின்புலத்தைக் கருதாமல் காவல் துறை மற்றும் நீதித் துறை நடவடிக்கை எடுக்கிறதோ அன்று தான் நாட்டில் லஞ்சம் வாங்குவது கொஞ்சமாவது கட்டுக்குள் வரும். தண்டனை பற்றிய பயமே குற்றத்தைத் தடுக்கும் என்ற வாதம் இதற்கு சரியாகப் பொருந்தும். நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வருவார்களா?

 

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors