தமிழோவியம்
தராசு : பொருந்தாத கூட்டணிகள்
- மீனா

எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருப்பது தான் பதவி ஆசை. ஆனாலும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு இருந்தது பேராசை. கர்நாடகாவில், பா.ஜ., வுடன் 20-20 என்ற பதவி ஒப்பந்தம் போட்ட, மதச்சார் பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் மகனான குமாரசாமி ஏற்கனவே வாக்களித்த படி பா.ஜனதாவிற்கு ஆட்சி அதிகாரத்தை விட்டுக்கொடுத்திருந்தால் இப்போது நேர்திருக்கும் ஆட்சிக்கலைப்பு போன்ற கூத்துகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும். ஆனால் பேராசை யாரை விட்டது? பா.ஜ.,வுக்கு பதவியை விட்டுத் தர மாட்டேன் என்று அடம் பிடித்தவர் காங்கிரஸ¤டன் எப்படியாவது கூட்டணி வைத்து  பதவியை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று போட்ட கணக்கு பிசகிவிட - நடந்தது ஆட்சிக்கலைப்பு..

இன்றைய அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தங்களது அடிப்படைக் கொள்கைகளை மறந்து, தங்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஆட்சிக் கட்டிலில் அமர்வது என்பது வழக்கத்தில் இருக்கிறது. இதைத்தான் கர்நாடக-தமிழக-மத்திய அரசுகளில் நிலவி வரும் குழப்பங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

தமிழக அரசைப் பொறுத்தவரை கூட இருந்துகொண்டே எதிர்கட்சிகள் கொடுக்கும் குடைச்சலை விட அதிக அளவில் குடைச்சல் கொடுத்துவருகிறார் பா.ம.க தலைவர் ராமதாஸ். போதாத குறைக்கு வலுவான எதிர்கட்சியான அ.தி.மு.க. வும் வளர்ந்து வரும் கட்சியான விஜயகாந்தின் தே.மு.தி.கவும் தி.மு.க அரசை கடுமையாக சாடி வருகிறது.

மத்திய அரசைப் பொறுத்தமட்டில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இடதுசாரிகளின் நிலை என்ன என்பது அவர்களுக்கே தெரியவில்லை. அந்த அளவிற்கு குழப்பம் நிலவுகிறது அவர்கள் முகாமில். போதாத குறைக்கு கருணாநிதி பற்ற வைத்த ராமர் எதிர்ப்பு விவகாரம். ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த காங்கிரஸ் தயாராக இருக்கிறதோ இல்லையோ - காங்கிரஸ¤க்கு ஆதரவளித்துவரும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை நடத்த ஆவலாக உள்ளனர்.

அகில இந்திய அளவில் அரசியல்வாதிகள் நடத்தும் இத்தகைய நாடகத்தால் தேவையற்ற தேர்தல் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. மீண்டும் தேர்தல் என்கிற போது மக்களின் வரிப் பணம் தான் கோடிக்கணக்கில் விரயமாகிறது.

எனவே இனிவரும் காலங்களிலாவது வாக்காளர்கள் ஓட்டுப் போடச் செல்லும் போது ஒரு நிலையான உறுதியான கட்சிக்கு ஓட்டளித்து அவர்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கிற வகையில் ஆளும் கட்சியை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் அனைவரும் நல்லவர்களாக இல்லாவிட்டாலும் நாட்டுப் பணமாவது அநாவசியமாக விரயமாகாமல் இருக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors