தமிழோவியம்
ஜோதிட விளக்கங்கள் : ஜோதிடத்தின் எல்லைகள்
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

சில நாட்களுக்கு முன்பு நாம் நட்சத்திர அபவாதங்களைப் பற்றி எழுதியிருந்தோம்.  அதைப் படித்து விட்டு பெரியார் தாசன் என்பவர் " ஜோதிடம் என்பது முட்டாள்களின் வேலை  என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார். தெரியுமா உங்களுக்கு" என்று நமக்குக் கேள்வி எழுப்பியிருந்தார்.

Vivekanandhaவிவேகானந்தரின் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள அவர், அன்னாருடைய ஆன்மீகக் கருத்துக்களையும் ஒத்துக் கொள்வாறா ? எனத் தெரியவில்லை. அவர்தான் பதில் சொல்ல வேண்டும். விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடனாக வருவதற்கு முன்பு நரேந்திரன் என்ற பெயருடையவராக இருந்தார். அப்போது அவர் கடவுள் நம்பிக்கையற்றவராக இருந்தார். பின்புதான் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனாக மாறினார். ஜோதிடத்தைப் பற்றிய கருத்து அவர் ஆன்மீக வாதியாக மாறியபிறகு கூறப்பட்டதா? இல்லை அதற்கு முன்பு கூறப்பட்டதா ? எனத் தெரியவில்லை.

நமது சம காலத்தில் வாழ்ந்தவர் கண்ணதாசன்.  அவர் கடவுள் நம்பிக்கையற்றவராக வாழ்ந்து நமது இதிகாசங்களைப் பற்றி இழிவாகப் பேசியிருக்கிறார்.  காலப்போக்கில் அவர் ஆன்மீகவாதியாக மாறி தான் கண்ணனுடய தாசன் என்றே கூறியிருக்கிறார். அப்படியானால் அவருடைய பழைய எண்ணங்களும், சிந்தனைகளும் மாறிவிட்டன என்றுதானே பொருள்.

ஜோதிடத்தில் உண்மையில்லை என்று கூறுவோர் முதலில் ஜோதிடத்தை நன்றாகப் படித்துவிட்டு அனுபவப்பட்ட பின்புதான் கருத்துக் கூற முன்வரவேண்டும்.  அது இல்லாது கூறுவோர் கருத்தில் உண்மையில்லை.

ஜோதிடத்தில் பல உண்மைகள் இருப்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து இருக்கிறேன். இது என்னுடைய சுமார் 30 ஆண்டுகால அனுபவம். சிலசமயங்களில் பலன் சரியாக வருவது இல்லையே! தவறிவிடுகின்றனவே ! அதற்குக் காரணம் என்ன?

1. கணிதத்தில் "approximation"  எனக் கூறுவார்கள். அந்த " approximation" ஜாதகத்திலும் உண்டு. நீங்கள் பிறந்த ஊர் ஏதாவது ஒரு சிற்றூராக இருக்கக் கூடும். அதனுடைய தீர்க்கரேகைகள், அட்ச ரேகைகள் சரியாகக் கிடைக்காது.  அந்த சிற்றூருக்கு அருகில் உள்ள ஒருபெரிய ஊரின் தீர்க்க, அட்ச ரேகைகளை எடுத்துக் கொண்டு ஜாதக கணிதம் செய்வார்கள். இங்கு பிறந்த ஊர்  "approximation"  வகையைச் சேர்ந்ததாகிறது. அதேபோல் பிறந்த நேரம் துல்லியமாகத் தெரியாமல் தோராயமாக எடுத்துக் கொண்டு கணிதம் செய்கிறார்கள்.  ஜாதகத்தில் லக்கின கணிதம் செய்யும்போது ஒவ்வொரு ராசியின் அளவும் துல்லியமாக எடுத்துக் கொள்ளப் படாமல் இருக்கிறது. ஆகாயத்தில் 12 ராசிகளும் துல்லியமாக கான்க்ரீட் சுவர்களால் எழுப்பப் பட்டு வரைமுறை யாரும் செய்யவில்லை; சிலசமயங்களில் கிரகங்கள் இருக்கும் ராசிகள், நட்சத்திரங்கள் துல்லியமாகக் குறிக்கப் படாமல் போகின்றன. இந்த "approximation" னால்
பல தவறுகளுக்கு வாய்ப்புக்கள் அதிகம்.

அதைத்தவிர சில ஜோதிடர்களிடம் உள்ள குறைபாடுகளும் தவறுதலுக்குக் காரணம் ஆகின்றன.

ஜோதிடத்திலும் மற்றதுறைகளைப்போல் ஒருவரையறை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து சரியான பலன்களைக் கூறலாம். எல்லாவற்றையும் என்னால் கூறிவிடமுடியும் எனக்கூறுவது மடமைதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors