தமிழோவியம்
கவிதை : இது போதும் எனக்கு
- லெனின்


தெற்கு வாசல் வீடு
தென்றல் காற்று - கயிறு கட்டில்
தலை வைத்து படுக்கத் தாய் மடி
இது போதும் எனக்கு!

தென்னை மரக் கீற்று
கதவு தட்டும் தென்றல் காற்று
எங்கிருந்தோ கேட்கும் அழுகின்ற
குழந்தையை அமைதிப் படுத்தும் தாலாட்டு
இது போதும் எனக்கு!

வீடே மணமணக்கும் விரால் மீன் குழம்பு
எனக்கு மட்டும் அதிகமாய் பார்த்துப் பரிமாரும் அம்மா!
கூடவே பங்கு போட அப்பா, அக்கா, அண்ணன்!
இது போதும் எனக்கு!

அம்மா தரும் ஆசை முத்தம்!
அக்கா குழந்தையின் மழலை சத்தம்!
ஆயா தாத்தாவுடன் போடும் சின்ன யுத்தம்!
இது போதும் எனக்கு!

தாகத்தை தீர்க்க நல்ல தண்ணீர்!
என்றுமே வெளி வராத கண்ணீர்!
பிறருக்காக மட்டுமே சிந்த செந்நீர்!
இது போதும் எனக்கு!

எங்கிருந்தோ கேட்கும் கோயில் மணி!
வெளியில் காலையில் மார்கழி பனி!
வாசலில் கோலமிடும் அம்மா! - அதை
பார்த்து நான் உட்கார்ந்திருப்பேன் சும்மா!
இது போதும் எனக்கு!

பொட்டு வைத்த பெண்ணின் முகம்!
இரட்டை ஜடை போட்ட கூந்தல்!
மனதை மயக்கும் மல்லிகைப் பூ வாசம்!
இவை கொண்ட இந்தியப் பெண்!
இது போதும் எனக்கு!

படிக்காமலே புரியும் வரலாறு!
படிக்க படிக்க புரியும் அறிவியல்!
ரசிக்க ரசிக்க இனிக்கும் தமிழ்!
இது போதும் எனக்கு!

Copyright © 2005 Tamiloviam.com - Authors