தமிழோவியம்
தராசு : கில்லாடி கிரிமினல்கள்
- மீனா

தேர்தல்களில் கிரிமினல்கள் போட்டியிடுவதைத் தடுப்பதற்காகவே உச்சநீதிமன்றம் சமீபத்தில் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், தலைமறைவு குற்றவாளிகள் போன்றவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்தே எடுக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு உத்திரவிட்டது. கோர்ட் உத்திரவைத் தொடர்ந்து இவர்களது பெயர்களும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

Rabri devi & Laloo Prasadஇந்நிலையில் தற்போது நடக்க இருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண்வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இக்கிரிமினல்களின் மனைவிகள். என்னதான் லாலு தொடங்கிவைத்த சம்பிரதாயமாக இது இருந்தாலும் தற்போது அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் (கிரிமினல்களும்) இம்முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தேர்தலில் ஜெயித்து மனைவிமார்கள் பெயரில் ஏதாவது ஒரு மந்திரிப் பதவியைப் பெற்று நிழல் (நிஜ) மந்திரிகளாக தாங்கள் உலாவரலாம் என்பதைத் தவிர இக்கணவான்கள் தங்கள் துணைவிகளை தேர்தலில் போட்டியிட அனுமதித்ததற்கு வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

பீகாரில் ரப்ரி முதல்வராக இருந்தபோது நிஜத்தில் யார் ஆட்சி அங்கே நடைபெற்றது என்பதை ஒரு குழந்தை கூட சொல்லும். ஏதோ தான் உண்டு, தன் அன்றாட வேலையுண்டு, தன் குடும்பம், குழந்தைகள் என்று இருக்கும் இக்குடும்பப் பெண்களை தங்கள் அரசியல் வேட்கையைத் தணித்துக் கொள்ளப் பயன்படுத்தும் இத்தகைய கிரிமினல்களைப் பற்றி என்ன சொல்ல? இத்தகைய பெண்களில் எத்தனைப் பேருக்கு நிஜத்தில் அரசியல் ஆர்வம் இருக்குமோ - எத்தனைப் பேர் சூழ்நிலைக் கைதிகளாக அரசியலுக்கு இழுத்து வரப்படுகிறார்களோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

வேட்பாளர்களாக களம் இறங்கும் இப்பெண்களின் கதையே இப்படி என்றால் இவர்களை நம்பி ஓட்டுப் போட்டுவிட்டு, அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை இந்த முறையாவது கொஞ்சமாவது நிறைவேற்றுவார்களா என்று ஏங்கி காத்துக்கொண்டிருக்கும் அப்பாவி பொதுஜனத்தின் கதி? மொத்தத்தில் தங்களுக்கு தேவையான வகையில் சட்டத்தில் ஓட்டை போட முயல்வதிலும், முற்றிலுமாக அது முடியாமல் போகும் பட்சத்தில் குறுக்கு வழிகள் மூலம் சட்டதிற்கு கல்தா கொடுப்பதிலும் நம் அரசியல்வாதிகள் ஆராய்சிகள் பல செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள். அதற்கான ஒரு சின்ன சாம்பிள் தான் மனைவியைத் தேர்தலில் நிற்கவைத்து வெற்றி பெற வைக்கும் டெக்னிக். வாழ்க ஜனநாயகம்.

 

Copyright © 2005 Tamiloviam.com - Authors