தமிழோவியம்
முச்சந்தி : கிப்ரனின் மிட்டாய்கள்
- என். சொக்கன்

கலீல் கிப்ரனின் கவிதைகளையும், சின்னச் சின்ன பொன்மொழிகளையும் அங்கங்கே வாசித்திருக்கிறேன். பளிச்சென்ற கருத்துகளை, எளிய மொழியில் சொல்லும் அவரது பாணி, நேரடியானது, அதேசமயம் விஷய கனத்தைச் சமரசம் செய்துகொள்ளாதது.

பின்னர், 'கிப்ரன் படைப்புகள்' என்று ஒரு பெரிய புத்தகத்தை வாங்கிப் படிக்கத்தொடங்கியபின், அவரது கதைகளும் மனதைக் கவர்ந்தன.

உண்மையில், அவற்றைக் கதைகள் (Stories) என்று பொதுவாகச் சொல்வதுகூட சரியாகாது, ஆங்கிலத்தில் 'Fables' என்று குறிப்பிடப்படும் வகையிலான சின்னச் சின்ன குறுங்கதைகள். ஒவ்வொன்றையும் அரை அல்லது முக்கால் நிமிடத்தில் படித்துமுடித்துவிடலாம், ஆனால் அத்தனை சுலபத்தில் மனதிலிருந்து இறங்கிவிடாமல் ஒட்டிக்கொள்ளும் கதைகளும், அவை சொல்லும் ஆழமான கருத்துகளும்.

ஒருவிதத்தில் இவற்றை, பெரியவர்களுக்குமான நீதிக் கதைகள் என்று சொல்லலாம். இந்தக் கதைகளில் வெளிப்பட்டிருக்கும் கிப்ரனின் அலாதியான கதை சொல்லும் பாணிக்காகவே, அவருடைய பல நூல்களிலிருந்து நல்ல கதைகளைத் தேடிப் படித்தேன்.

இந்தக் கதைகளிலிருந்து, எனக்கு ரொம்பப் பிடித்தவற்றைமட்டும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். 'மிட்டாய்க் கதைகள்' என்ற தலைப்பில், இந்தத் தொகுப்பை கிழக்கு பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

எனக்கு மிகுந்த மன நிறைவளித்த இந்தக் கதைகளில் ஒன்றைக் கீழே தந்திருக்கிறேன், பல தலைமுறைகளுக்குமுன்னால் எழுதப்பட்ட இந்தக் கதை, இந்தக் காலத்துக்கும் எத்தனை பொருத்தமாக இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.

கதையின் தலைப்பு : போரும், சிறு நாடுகளும்


மலையுச்சியில், ஒரு ஆடும், அதன் சிறு குட்டியும் மேய்ந்துகொண்டிருந்தன.

வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகு, அந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தது, ஏற்கெனவே பயங்கர பசியிலிருந்த அந்தக் கழுகுக்கு, இந்த ஆட்டுக்குட்டியைக் கண்டதும், நாக்கில் எச்சில் ஊறியது !

உடனடியாக, அந்த ஆட்டுக்குட்டியைப் பிடித்துத் தின்றுவிடுகிற எண்ணத்துடன், தரையை நோக்கிப் பாய்ந்தது அந்தக் கழுகு.

இதே நேரத்தில், அங்கு வந்த இன்னொரு பசித்த கழுகும் அதே ஆட்டுக்குட்டியை நோக்கிப் பாய்ந்தது.

இந்தப் புதிய கழுகைக் கண்ட முதல் கழுகு, கோபம் கொண்டு, அதன்மேல் பாய்ந்து சண்டையிடலானது, அவற்றின் ஆக்ரோஷமான கூக்குரல் வானத்தை நிரப்ப, அவை பயங்கரமாகப் போரிட்டன.

இந்தச் சப்தம் கேட்டு, மேலே நிமிர்ந்து பார்த்த ஆடு, இந்தச் சண்டையைக் கண்டு ஆச்சரியப்பட்டது, பின்னர் தன் குட்டியை நோக்கித் திரும்பி, 'மகனே, அத்தனை பெரிய வானம், இந்த இரண்டு பறவைகளுக்குப் போதவில்லையா ? ஏன் இவை இப்படிச் சண்டையிடுகின்றன ?', என்று வேதனைக் குரலில் கேட்டது, 'மகனே, நம் கழுகுச் சகோதரர்கள், இந்தச் சண்டையை நிறுத்தவேண்டும், அவற்றிடையே மீண்டும் அமைதி திரும்பவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள் !'

இதைக் கேட்ட ஆட்டுக்குட்டி, அவ்வாறே மனமுருகிப் பிரார்த்தித்தது !


இப்போது, மீண்டும் கதையின் தலைப்பைப் படியுங்கள் !


வார இறுதியில் பொழுதுபோகாமல் வீட்டின் பழைய பெட்டிகளைத் தோண்டிக்கொண்டிருந்தபோது, சுவாரஸ்யமான ஒரு பைண்ட் புத்தகம் கிடைத்தது. எழுபதுகளில் வெளிவந்த பழைய குமுதம் இதழ்களில், ரா. கி. ரங்கராஜன் வெவ்வேறு பெயர்களில் எழுதிய மூன்று நாவல்களின் தொகுப்பு.

இதுபோன்ற மங்கிய வாசனையடிக்கும் பழைய பைண்ட் புத்தகங்களில், மெனக்கெட்டுக் கிழித்துத் தொகுத்திருக்கும் நாவல்களைவிட, அவற்றின் முன்னே, பின்னே, நடுவே கட்டம் கட்டிய துணுக்குகள்தான் அதிகச் சுவாரஸ்யமாக இருக்கும். அந்தக் கால நகைச்சுவை, சினிமா, பொதுஅறிவு, விளம்பரங்கள், அங்கலாய்ப்புகள்,  ஏமாற்றுகள் என்று எல்லாவற்றுக்கும் சாம்பிள் பார்க்கலாம்.

அந்தவகையில், மேற்படி புத்தகத்தில் சிக்கிய சில சுவாரஸ்யங்கள் :

* 'சினிமா இல்லாமல், உங்களால் பத்து வாரம்கூட குமுதத்தை நடத்தமுடியாது. சவால்', என்று ஒருவர் (அப்போதே) கடிதம் எழுதியிருக்கிறார்.

* பொள்ளாச்சி நா. மகாலிங்கம் இல்லத்தில், விருந்தாளிக்குப் பசியைத் தூண்டும் ஆயுர்வேத சூரணம் ஒன்றைப் பரிமாறுகிறார்களாம் - height of விருந்தோம்பல் !

* எம். ஜி. ஆர். ஆட்சிக்கு வந்த புதிதில் அவர் நடித்துக்கொண்டிருந்த படங்கள் என்ன ஆகும் என்பதுபற்றி ஹேஷ்யக்கட்டுரை ஒன்று வந்திருக்கிறது - அதில் ஸ்ரீதர் எம். ஜி. ஆரை வைத்து மூன்று படங்கள் எடுத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள் (என்ன கஷ்டமோ பாவம் !)

அப்போது எம். ஜி. ஆர். நடித்துக்கொண்டிருந்த ஏழு படங்களில், மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், அண்ணா நீ என் தெய்வம் மூன்றும் வெளிவரும், மற்றவை வெளிவராது என்று சொல்லியிருந்தது உண்மையாகிவிட்டது. முதல் இரண்டு அதே பெயரிலும், மூன்றாவது 'அவசர போலீஸ் 100' என்று பாக்யராஜ் இயக்கத்திலும் வெளிவந்ததே !

இதெல்லாம் ஒருபக்கமிருக்க, ஒரு நேரத்தில் ஏழு படங்களா நடிக்க ஒப்புக்கொண்டார் எம். ஜி. ஆர். ?

* டிவி நிகழ்ச்சிகளை விமர்சனம் செய்து ரா. கி. ரங்கராஜன் வாராவாரம் எழுதியிருக்கிறார் (பெயர் இல்லை, ஆனால் அவர்தான், தெரிகிறது !), அதில் அவ்வை நடராசன் புதுக்கவிதைகள் பெஸிமிஸ்டிக்காக இருப்பதாகக் குற்றம் சாட்டியதாகவும், ஞானக்கூத்தன் அதை எதிர்த்து வாதாடியதாகவும் ஒரு பட்டிமன்றம்பற்றிச் சொல்கிறார், இப்போது தூர்தர்ஷன் டிரங்குப் பெட்டிகளில் தேடினால், அந்த வீடியோ கிடைக்குமா ?

* ஒரு குறும்பு ஜோக் -

'உனக்கும் உன் மனைவிக்கும் கடும் சண்டை என்றாயே'

'ஆமாம் ! நேற்று இரவு 10:20 மணிக்குத்தான் உடன்படுக்கை ஏற்பட்டது !'

- ராசன் கலாமணி


இந்த வாரத் தகவல் :

'அஸ்கா சர்க்கரை' என்று கேள்விப்படுகிறோமே, அப்படியென்றால் என்ன ? அந்தப் பெயர் எப்படி வந்தது ? - இந்தத் தகவல்கள், எஸ். வி. ராமகிருஷ்ணன் எழுதிய 'அது அந்தக் காலம்' என்ற அருமையான கட்டுரைத் தொகுதியில் கிடைத்தது. (உயிர்மை பதிப்பகம் - 120 பக்கங்கள் - ரூ 60/-)

'அஸ்கா என்றால், நிறத்திலிருந்து சத்துவரையான சர்க்கரைக்கே உரிய எல்லா இயல்புகளும் பாழடிக்கப்பட்டு, நாமெல்லோரும் இன்று விழுந்து விழுந்து சாப்பிடுகிறோமே, அந்த வெள்ளையான படிகச் சர்க்கரை', என்று எழுதுகிறார் எஸ். வி. ராமகிருஷ்ணன்.

ஆதிகாலத்தில் சென்னை ராஜதானி முழுவதற்கும் ஒரே ஒரு சர்க்கரை ஆலைதானாம். அந்த ஆலை (தற்போது ஒரிஸாவில் உள்ள) 'அஸ்கா' என்ற ஊரில் இருந்ததாம், ஆகவே, அங்கே தயாராகும் சர்க்கரையை 'அஸ்கா சர்க்கரை' என்று அழைக்கத் தொடங்கினார்கள்போல !


இந்த வார உரையாடல் :

'எங்க வங்க மொழி வகுப்புலகூட கவிதைங்க பாடமா வச்சிருக்காங்க. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் பாருங்களேன் : கே லொய்பே மோர் கொர்ஜ .... கரிபோ தாமி !', என்றாள் பிரகதி

'ஓ ! புரியுது. தாகூர். சரி, அதோட அர்த்தத்தைத் தமிழ்ல சொல்லு பார்க்கலாம்'

பிரகதி தயங்கினாள். மனதிற்குள் மீண்டும் ஒருதடவை கவிதையைச் சொல்லிப்பார்த்துக்கொண்டாள். தொண்டையைச் செருமிக்கொண்டு, 'ஏதோ தோணினபடி சொல்றேன் சார்'

அஸ்தமனச் சூரியன்,
'என் வேலையை யாரு ஏத்துக்குவீங்க ?',
என்று கேட்டது.
வாயடைத்த உலகம் மௌனமானது.
அகல் விளக்கிலிருந்து
பதில் வந்தது.
'மன்னிக்கணும்,
என்னால் முடிஞ்சவரை
நான் ஏத்துக்கறேன்'

- 'உனக்காகவா நான்' நாவலில் திலகவதி
கண்மணி - செப்டம்பர் 15, 2005

Copyright © 2005 Tamiloviam.com - Authors