தமிழோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ் : அமெரிக்க தேர்தல்
- ஆனந்த் சங்கரன்

நம் நாட்டில் தான் தேர்தல் என்றால் மக்கள் அக்கரையே காட்டுவதில்லை.. தேர்தல் நடக்கும் நாளன்று விடுமுறை எல்லாம் அளித்து என்ன பிரயோஜனம்? ஓட்டுப் போட வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்குள் காவிரியையே தமிழகத்திற்கு கொண்டுவந்துவிடலாம்.. அரசியல்வாதிகள் எல்லாம் ஒருவர் மீது புழுதி என்ன சேற்றையே வாரித் தூற்றுகிறார்கள்.. ஆனால் மேலை நாடுகளில் எல்லாம் தேர்தல் எப்படி நடக்கும் தெரியுமா? அதுவும் முக்கியமாக அமெரிக்காவில் தேர்தல் எல்லாம் எப்படி நடக்கும் தெரியுமா? மக்கள் எல்லாம் பயங்கர பொறுப்பாக தேர்தலன்று வரிசையில் நின்று ஒழுங்காக ஓட்டுப்போடுவார்கள் தெரியுமா? முக்கியமாக வேட்பாளர்கள் எல்லாம் அசிங்கமாக பேசவே மாட்டார்கள்.. தங்களைப் பற்றி, தாங்கள் ஜெயித்தால் என்ன செய்வோம் என்பதைப் பற்றி மட்டும்தான் பேசுவார்கள் தெரியுமா?

இதைப் போன்ற ஏகப்பட்ட விஷயங்களை இந்தியாவில் இருந்த போது பத்திரிக்கை மற்றும் அமெரிக்க விஜயம் செய்த நண்பர்கள் - உறவினர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்பாக என்னுடைய அலுவலக விஷயமாக அமெரிக்க விஜயம் செய்த நான் அப்போதிலிருந்து இப்போது வரை தேர்தல் குறித்த அமெரிக்கர்களது கண்ணோட்டம் பற்றி கண்ட, கேட்ட பார்த்த உண்மைகள் அதிர்ச்சிகரமானதாகவே இருந்தன.

Richard J. Codey, Acting Governor of New Jerseyநியூஜெர்சி மாநில கவர்னர் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே பாக்கியுள்ள இந்நிலையிலும் பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களுக்கு கவர்னர் தேர்தலுக்காக யார் யார் நிற்கிறார்கள் என்ற விவரமே தெரியவில்லை என்று கூறி குறைபட்டுக்கொண்டது ஒரு உள்ளூர் ரேடியோ நிறுவன. அதை நிரூபிக்கும் வகையில் என்னுடைய அலுவலகத்தில் இருந்த அமெரிக்கர்களில் பலரும் யார் யார் எந்தெந்த கட்சி சார்பில் தேர்தலில் நிற்கிறார்கள் என்ற அடிப்படை விவரமே தங்களுக்குத் தெரியாது என்றும், அதைப் பற்றி தெரிந்து ஆகப்போவதென்ன. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம்முடைய அடிப்படை பிரச்சனைகளான இன்ஷ்யூரன்ஸ், வரிவிதிப்பு கட்டணங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படவே மாட்டார்கள்.. என்று கூறினார்கள். அப்போது நீங்கள் போய் ஓட்டுப்போடப்போவதில்லையா என்ற என் கேள்விக்கு பதிலாக "அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம். அப்படியே ஓட்டுப் போடாவிட்டாலும் ஒன்றும் குறைந்து விடமாட்டோம்." என்று ஒரே போடாக போட்டார்கள்.

இதுவே எனக்கு பெரிய அதிர்ச்சி என்றால் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் சக வேட்பாளர்களைப் பற்றி குறை கூறிச் செய்யும் விளம்பரங்கள் எல்லாம் நம் உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு தாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று கட்டியம் கூறும் விதமாகவே அமைந்திருந்தது. அந்த அளவிற்கு ஒருவர் மீது ஒருவர் சேறு என்ன சாக்கடையையே வாரித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மொத்தத்தில் அமெரிக்காவில் தேர்தல் எல்லாம் பயங்கர ஒழுங்காக - முறையாக நடந்து கொண்டிருக்கிறது, மக்கள் எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமைகளை ஒழுங்காகச் செய்கிறார்கள் என்ற என் எண்ணதில் பெரிய கல்லைத் தூக்கிப்போடும் விதமாக அமைந்தது இச்சம்பவங்கள். ரொம்பவுமே முன்னேறிய நாடு என்பதால் ஏதோ சில விஷயங்கள் ஒழுங்காக நடக்கிறது. மற்றபடி இக்கரைக்கு அக்கரை பச்சை என்று பெரியவர்கள் சொன்னது எவ்வளவு உண்மை என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors