தமிழோவியம்
திரைவிமர்சனம் : கஜினி
- மீனா

Gajiniரமணாவில் அசத்திய முருகதாஸ் மீண்டும் ஒரு வித்தியாசமான கதையைக் கையிலெடுத்து அசத்த வந்திருக்கிறார் கஜினி மூலம். முதல் காட்சியிலேயே சூர்யாவின் அறிமுகம் அசத்தல். யாரோ ஒருவரை கொலை செய்கிறார். அதை போட்டோவும் எடுத்து வைத்துக் கொள்கிறார். போதாத குறைக்கு உடம்பு முழுவது ஏதேதோ விஷயங்களைப் பச்சைக் குத்தி வைத்துக்கொள்கிறார். சூர்யா யார்? ஏன் இவ்வாறு செய்கிறார் என்பது தான் கதை.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான சஞ்சய் ராமசாமி(சூர்யா)யை முன்பின் பார்த்திராத நிலையில் தன்னுடைய காதலர் என்று புருடா விடுகிறார் விளம்பர மாடல் அசின். ஒரு வார இதழ் நிருபருக்கு ரொம்பவும் விலாவாரியாக அசின் தனக்கும் சஞ்சய் ராமசாமிக்கும் காதல் மலர்ந்தது எப்படி என்பதைப் பற்றிக் கொடுக்கும் பேட்டியைப் படித்து ஆத்திரமடையும் சூர்யா அசினைக் கண்டிப்பதற்காக வரும் இடத்தில் அசினின் மற்றவர்களுக்கு உதவும் குணத்தைப் பார்த்துக் காதல் கொள்கிறார். தான் தான் சஞ்சய் ராம்சாமி என்பதைக் கூறாமல் சாதாரண ஒரு ஆளாக அசினிடம் காதல் கொள்கிறார்.

ஒரு கட்டத்தில் சில பெண்களை கடத்தல்காரர்களிடமிருந்து அசின் காப்பாற்றப்போக அதன் காரணமாக எற்படும் மோதலில் அசின் கொல்லப்படுகிறார். மண்டையில் பலமாகத் தாக்கப்படும் சூர்யா நினைவிழக்கிறார். 15 நிமிடங்களுக்கு மேல் எதுவும் நினைவிருக்காது என்னும் Short Term Memory Lose வியாதியால் பாதிக்கப்படுகிறார். ஆனாலும் தன் காதலியைக் கொன்றவர்கள் ஒவ்வொருவரையும் போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு அவர்களைப் பழிவாங்க ஆரம்பிக்கிறார். மருத்துவ கல்லூரி மாணவியான நயன்தாரா முதலில் சூர்யாவை கொலைகாரன் என்று நினைத்து உண்மைக் கொலைகாரர்களிடம் காட்டிக்கொடுக்கிறார். பிறகு உண்மையை உணர்ந்து சூர்யா வில்லன்களைப் பழிவாங்க உதவுகிறார். எடுத்த சபதத்தில் சூர்யா தன் குறைகளையும் மீறி எவ்வாறு வெற்றி பெருகிறார் என்பதே மீதிக் கதை.

சஞ்சய் ராமசாமியாக அட்டகாசமாகப் பொருந்தியிருக்கிறார் சூர்யா. பணக்கார வேடமாகட்டும், மொட்டை தலை மனநோயாளியாகட்டும், படத்திற்குப் படம் அவர் காட்டும் வேறுபாடுகள் பிரமிக்க வைக்கின்றன. அசின் தான் யார் என்ற உண்மைத் தெரியாமலேயே தன்னைக் காதலிப்பதை உள்ளூர ரசித்துக்கொண்டே அப்பாவியாக அசின் முன்பாக வளைய வருவது சூப்பர். வில்லன்களைப் பந்தாடும் காட்சியில் அவர் காட்டும் துடிப்பும் வேகமும் அருமை.

சூர்யாவிற்கு சற்றும் குறைவில்லாத பாத்திரம் அசினுக்கு. நாயகி என்றாலே வெறுமெனே நாலு பாட்டிற்கு ஆடிச் செல்பவர் என்பதை மாற்றியமைத்து அசினுக்கு நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர். சஞ்சய் ராமசாமியைக் காதலிக்கும் பந்தா பார்ட்டியாக அவர் அடிக்கும் லூட்டிகள் அப்பப்பா... அவருடைய இறுதிக் காட்சிகள் மனதை நெகிழ வைக்கின்றன. நயன்தாரா ஒப்புக்கு வருகிறார். ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். கடனே என்று கொடுத்த நாலு வசனத்தைப் பேசிவிட்டுச் செல்கிறார். மற்றபடி அவருடைய நடிப்பைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை. அதைப் போலவே வில்லனாக பிரதீப். ஒருவர் செய்யும் டார்ச்சரையே சமாளிக்க முடியாமல் திணறும் போது சில நிமிடங்கள் பிரதீப் டபுள் ஆக்ஷனில் வேறு வந்து படுத்துகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. கதையில் நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் ஒரு ஆங்கிலப் படம் என்றாலும் அதை தமிழில் வெகு வித்தியாசமாக கையாண்டிருக்கிறார் முருகதாஸ். கதையில் சிலபல குறைகள் இருந்தாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டுசென்ற திரைக்கதை அமைப்பிற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம். மொத்தத்தில் இந்தக் கஜினி பலமுறை படையெடுக்காமல் முதல் முயற்சியிலேயே வெற்றி பெருவது நிச்சயம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors