தமிழோவியம்
தராசு : இப்தார் விருந்து
- மீனா

நாளை முதல் ரம்ஜான் நோன்பு துவங்குகிறது. நோன்பு ஆரம்பித்டவுடனேயே நம் அரசியல் தலைவர்கள் செய்யும் முதல் காரியம் ஒரு பெரிய லிஸ்ட் போட ஆரம்பிப்பதுதான். யார் யார் எப்போது விருந்து கொடுப்பது, அதற்கு யாரைக் கூப்பிடுவது, அந்த விருந்தில் எவர் மண்டையை உருட்டுவது போன்றவைகள் தான். தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் அனைவரும் செய்யும் ஒரு வழக்கமான வேலைதான் இது. நோன்புத் துறத்தல் என்பது ஒரு புனிதச் சடங்கு. நாள் முழுவதும் ஒரு வாய் தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருக்கும் அன்பர்கள், நோன்புக் கஞ்சியைக் குடித்து அன்றைய நோன்பை முடிப்பார்கள். ஆனால் நம் தலைவர்கள் விரதம் இருக்கும் பகுதியை விட்டுவிட்டு சாப்பிடும் பகுதிக்கு மட்டும் நேராக வந்துவிடுவார்கள். எல்லா வருடமும் இதே கதைதான். காட்சிகளில் மாற்றமே கிடையாது.

எல்லாவற்றிலும் வித்தியாசமாக சிந்திக்கும் நம் ஜனாதிபதி இந்த வழக்கத்திற்கு சென்ற வருடம் ஒரு செக் வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் யாருக்கும் விருந்து கிடையாது - அந்தப் பணத்தை ஆதரவற்றவர்களுக்கு வழங்கப் போகிறேன் என்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதை முன் மாதிரியாகக் கொண்டு இந்த வருடம் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தான் யாருக்கும் இப்தார் விருந்து அளிக்கப்போவதில்லை - அந்தப் பணத்தை அனாதைக் குழந்தைகள் வளர்சிக்கு செலவிடப்போகிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டுளார். என்ன அருமையான அறிவிப்பு இது... இதற்காக அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

வசதியுள்ளவர்கள் ஒப்புக்கு இப்தார் விருந்து என்ற பெயரில் கூடி மகிழ்வதை விட, பசித்திருக்கும் பத்து பேருக்கு உணவு படைப்பதைத் தான் உண்மையான ரம்ஜான் விருந்தின் நோக்கமாகக் கருதவேண்டும். மேலும் ரம்ஜான் விழாவே ஈகைத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகிறது. நமது தலைவர்கள் நோன்புக் கஞ்சி குடிப்பதோடு மட்டுமல்லாது தங்களால் தான தருமங்களைச் செய்ய முன்வரவேண்டும். அவ்வளவு இல்லையென்றாலும் தாங்கள் வழங்கும் ஒரு நாள் இப்தார் விருந்திற்காக செலவளிக்கும் பணத்தையாவது ஏழைகளுக்குக் கொடுக்க முன்வரவேண்டும். மிக முக்கியமாக நோன்புக் கஞ்சி குடிப்பதைப் போல போஸ் கொடுக்கும் தலைவர்கள் எல்லாம் சிறுபான்மை மக்களின் காவலர்கள் கிடையாது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அனைவருக்கும் நல்லறிவை அந்த இறைவன் வழங்குவாராக!!

Copyright © 2005 Tamiloviam.com - Authors