தமிழோவியம்
முன்னுரை : என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்
- மாலன்

என். சொக்கன் எழுதிய 'என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்' சிறுகதைத் தொகுப்புக்கு, திரு. மாலன் அவர்களின் முன்னுரை :

நூல் வெளியீடு : 'கிழக்கு பதிப்பகம்' - 160 பக்கங்கள் - ரூ 60/-

எழுபதுகளின் துவக்கத்தில் இலக்கிய இதழ் ஒன்றின் அலுவலகத்தில் ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு ஏற்பாடாகியிருந்தது. நானும் என் நண்பர்கள் இருவரும் அந்தக் கூட்டத்திற்குப் போயிருந்தோம். தமிழில்  புதுக்கவிதை முயற்சிகள் வேர் பிடிக்கத் துவங்கியிருந்த நேரம் அது.

அந்தப் பத்திரிகை ஆசிரியர் அப்போது புதுக்கவிதை முயற்சிகளை அவ்வளவு உற்சாகமாக ஆதரிக்கவில்லை. இலக்கணம் தெரியாதவர்கள், தமிழின் பழந்தமிழ் இலக்கியங்களை அறியாதவர்கள் புதுக்கவிதை என்ற பெயரில் 'எதையோ' எழுதி பெயர் தேடிக் கொள்ள முயலுகிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவலாக இருந்தது.

கூட்டம் துவங்குவதற்கு முன், அந்த ஆசிரியரை சந்தித்து எங்களை அறிமுகப்படுத்திக் கொண்டோம். எங்கள் பெயரையும், அந்த மாதம் இன்னொரு இலக்கிய இதழில் ( புதுக்கவிதைகளை ஊக்குவிக்கிற இதழ் அது) எங்கள் படைப்புக்கள் வெளிவந்திருப்பதையும் சொன்னோம்.

" என்ன பண்றீங்க?" என்று விசாரித்தார் ஆசிரியர்.

சற்றே மிடுக்காக, "கவிதைகள் எழுதுகிறோம்" என்று சொன்னோம்

" அது சரி. என்ன வேலை பண்றீங்க?" என்றார் அவர்.

" ஸ்பென்சர் மருந்துத் தொழிற்சாலையில் வேலை செய்கிறேன் " என்றேன்.

"நீங்க?"

"ஒரு டிராக்டர் தொழிற்சாலையில் இருக்கிறேன். இவன் ஒரு ரப்பர் தொழிற்சாலையில் இருக்கான்" என்று தன்னையும் தன் நண்பனையும் அறிமுகம் செய்தான் என் நண்பன்.

"·பாக்டரியில் வேலை செய்கிறவர்கள் எல்லாம் இப்போது கவிதை எழுதுகிறார்கள்" என்றார் ஆசிரியர் புன்னகையுடன், தன் அருகில் இருந்த இன்னொரு இலக்கியவாதியிடம். அந்த இலக்கியவாதி சற்று வாய்விட்டே சிரித்தார்.

கவிதை, இலக்கியம் எல்லாம் பள்ளி / கல்லூரி ஆசிரியர்கள், மொழி அறிஞர்கள், இலக்கியத்தைப் பாடமாக Maalanஎடுத்துப் படித்தவர்கள், எழுத்தையே ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள், பத்திரிகையில் வேலை செய்கிறவர்கள், பதிப்புத் துறையில் இருப்பவர்கள், வக்கீல்கள் செய்கிற காரியம். இயந்திரங்களோடு நாளின் பெரும்பகுதியை செலவிடுகிறவர்களுக்கு அது அப்பாற்பட்டது, அதிக பட்சம் அவர்கள் நல்ல வாசகர்களாக இருக்கலாம் என்கிற அபிப்பிராயம்தான் நீண்ட காலம் தமிழில் இருந்து வந்திருக்கிறது. தமிழ் போன்ற நெடிய பாரம்பரியம் கொண்ட மொழியில் இது இயல்பானது.

ஆனால் இன்று இயந்திரத்தின் மூலமாக- அதாவது கணினியைக் கொண்டு எழுதுகிற- ஒரு புதிய தலைமுறையே உருவாகியிருக்கிறது. அவர்களில் சிலர் அந்த இயந்திரத்தின் இதயத்தையே வடிவமைக்கிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் இலக்கியத்தையோ மொழியையோ பாடமாக எடுத்துப் படித்தவர்கள் அல்ல. இலக்கியத்தின், கவிதையின் மீது ஏற்பட்ட ருசியினால் அவற்றை இயந்திரத்திற்குள் கொண்டு வந்தவர்கள்.

தமிழ் இன்று செழுமை பெறுவது இவர்களால்தான். எதிர்காலத்தில் தமிழ் மொழியின் பலம் அதிகரிப்பது, வளர்ச்சி, வேகம் பெறுவது எல்லாம் இவர்கள் கையில் இருக்கிறது. இணையத்தில் தமிழ் புழங்க ஆரம்பித்த பிறகு அது ஓர் உலக மொழியாக உருப்பெறத் துவங்கிவிட்டது. இங்கிலாந்தில் இருக்கும் முருகன் பாரதியைப் படிக்கும் போது கிடைத்த ஒரு புதிய ஒளியை பரவசத்தோடு இணையத்தில் பதிவு செய்கிறார். அடுத்த பத்து நிமிடங்களில்  தாய்லாந்திலிருந்து ஆனந்த் அந்தக் கவிதைக்குப் பின் உள்ள வரலாற்றுக் குறிப்பை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.  மந்தவெளியிலிருந்து பிரகாஷ் அதற்கு ஒரு புது விளக்கம் தருகிறார். கனாடாவிலிருந்து புகாரி அந்த விளக்கம் குறித்து ஒரு சந்தேகம் கிளப்புகிறார். அமெரிக்காவில் இருந்து பாலாஜி எல்லா கடிதங்களையும் கிண்டலடித்து ஒரு புதிய கோணத்தை முன் வைக்கிறார்.

சட்டென்று, ஒரு சில நொடிகளில் இணையம், ஒரு சுவாரஸ்யமான இலக்கிய அரங்காக மாறி விடுகிறது தங்களுடைய வாசிப்பு, அனுபவம், ருசிகள், சந்தேகங்கள், பயங்கள், சமயங்களில் கோபங்கள், சாதனைகள், கையாலாகாத்தனத்தால் எழுந்த விரக்திகள் எல்லாவற்றையும் கொண்டு இந்த இளைஞர்கள் இணையத்தையும், தங்கள் எழுத்தையும் செழுமைப்படுத்திக் கொள்கிறார்கள். இன்று வாரப்பத்திரிகை வாசித்து எழுத வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அருகி வருகிறதோ என்று எனக்கு சந்தேகம் உண்டு. ஆனால் தமிழின் எதிர் காலம் குறித்து எனக்குக் கவலைகள் இல்லை. ஏனெனில் ஆரோக்கியமான எழுத்தாளர் படையொன்று இணையத்தில் உருவாகி வருகிறது. (ஆரோக்கியமான என்பது அடிக்கோடு இட வேண்டிய வார்த்தை. இவர்கள் இலக்கிய சிற்றேடுகளின் நாயே பேயே பூசல்களில் சிக்கிக் கொண்டு விடாதவர்கள்) இந்த எழுத்தாளர்கள் உலகெங்கும் தமிழை எடுத்துச் செல்வார்கள்.

அந்த எழுத்தாளர்களில் சொக்கன் முக்கியமானவர்.

சொக்கனின் முதல் சிறுகதைத் தொகுப்பான பச்சைப் பார்க்கர் பேனாவை சில மாதங்களுக்கு முன் படிக்க நேர்ந்த போது எனக்குள் இந்த எண்ணம்தான் எழுந்தது. இந்தக் கதைகளைப் படித்த போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது.

சிறுகதை எழுதுவதற்கு என்ன தேவை? இலக்கிய ஆர்வமா? மொழித் திறனா? படைப்பாற்றலா? கதை சொல்லும் ஆசையா? கலையுணர்வா? சுயகாதலா? புகழுக்கான தாகமா? காசு பார்க்கலாம் என்ற நப்பாசையா? என்றென்றும் சாகாமல் இருப்பதற்கான ஏக்கமா?

இவையெல்லாம், அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றேனும் இருப்பதால்தான் அநேகம் பேர் எழுத வருகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இவற்றைத் தாண்டி இன்னொரு முக்கியமான பண்பு எழுதுகிறவனுக்கு வேண்டும். அது: சக மனிதர்கள் மீது பரிவு.

எழுத்தாளன் என்பவன் எல்லா மனிதர்களின் துன்பத்திலும் பங்கேற்று, அவர்களது சோகங்களையும், காயங்களையும் மனதிலும், அவர்களைத் தோளிலும் தூக்கிச் சுமந்து கொண்டு மலையேற வேண்டும் என்று நான் உபதேசம் செய்ய முற்படவில்லை. ஆனால் இலக்கியம் என்பது வெயிலில் வந்தவனுக்குத் தண்ணீர்
தருவதைப் போல, மழையில் வந்தவனுக்குத் துணி தருவது போல, ஒரு எளிய பரோபகாரம். வாழ்க்கை நெருக்கடியில் மூச்சுத் திணறிக் கொண்டு இருப்பவனுக்கு நம்பிக்கை கொடுக்க நம்மிடம் வாய்த்திருக்கும் சாதனம் இலக்கியம்.

வாழ்க்கை நெருக்கடி என்பது  ஒரு பிரம்மாண்டமான வார்த்தை. வரவுக்கும் செலவுக்கும் இடையே ஏற்பட்டுவிட்ட  இடைவெளியில் எழுந்து வர முடியாமல் சறுக்கி விழுந்து விட்டவர்களைச் சொல்லுவதாகத்தான் முதலில் தோன்றும். ஆனால் காசு பணங்களுக்கு அப்பால் நம் எல்லோரையுமே ஏதோ ஒரு வித அநிச்சயமும், அலுப்பும், சோர்வும் சூழ்ந்திருக்கிறது.

கல்லுரிப் படிப்பை முடித்த ஆறு மாதத்திற்குள், அப்பா ரிட்டையர் ஆனபோது வாங்கிய சம்பளத்தைவிட அதிமாக சம்பளம், வீட்டு வசதிக்கடன், வாகனக் கடன், கை நிறைய இன்கிரீமெண்ட், போனஸ், என்று போய்க் கொண்டிருக்கும் கணினி மென் பொருள் உருவாக்கும் வாழ்க்கை, ஒரு மின்னஞ்சல் மூலம் ஆட்டம் காண்பதைச் சொக்கன் கதைகளில் வாசிக்க முடியும். சமையலறைச் சாதனங்கள் நிறைந்த, குடும்ப உறுப்பினர்கள் குறைந்துவிட்ட nuclear குடும்பங்களில் வாழும் குடும்பத் தலைவிகளின் வாழ்க்கையும் இதற்கு சற்றும் குறைந்தது அல்ல என்பதையும் சொக்கன் கதைகள் சொல்கின்றன.

இந்தக் கதைகளும், அதை உயிர்ப்பிக்கும் கதாபாத்திரங்களும் அசாதாரணமானவர்களோ, அபூர்வமானவர்களோ அல்ல. அவர்களை நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம். இதைப் போன்ற கதைகள் நம் வாழ்வில் இருந்துதான் தோன்றுகின்றன. ஆனால் அந்த வாழ்க்கையை கசப்போ, காழ்ப்போ இல்லாமல் பார்க்க  கூர்த்த, ஆனால் முதிர்ச்சி கொண்ட, ஒரு கவனம் வேண்டும்; அதைப் பசப்போ, பாவனையோ இல்லாமல் எழுதத் தனித் திறம் வேண்டும். வாழ்க்கையை ஒரு தத்துவமாகவோ, சித்தாந்தமாகவோ செய்து விடாமல் வாழ்க்கையாகவே சொல்ல சென் பெளத்தனைப் போல ஒரு மனம் வேண்டும்

இதெல்லாம் சொக்கனுக்கு வாய்த்திருக்கிறது. அவரது ஒரு கதையில் வரும் நடைபாதை ஓவியன் வண்ணங்களை இறைப்பதைப் போல, கதைகளில் ஏராளமான தகவல்களை விவரித்துக் கொண்டே போகும் நடை இவருடையது. கதையிலிருந்து கதையை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை வாழ்க்கையைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்ற நவீன இலக்கியத்தின் அணுகுமுறையும் இருக்கிறது. இவையெல்லாம் பாராட்டத் தக்கதுதான். ஆனால் இவை கதை ஆழப்படுவதை பாதித்துவிடும் ஆபத்து இருக்கிறது. காலம் செல்லச் செல்ல சொக்கன் இதை உணர்ந்து கொள்வார்.

இன்றைய இலக்கியம் சமூகத்திலிருந்து தனது விதைகளைப் பெறுவது போலவே, அறிவியலில் இருந்தும் பெறுவதற்கான சாத்தியங்கள் கொண்டது. எண்பதுகளுக்குப் பிறகு இங்கு வேகம் பெற்ற அறிவியல்/ தொழில் நுட்பக் கல்வி, தொண்ணூறுகளின் மத்தியில் விரிவுகாணத் துவங்கிய கணினிப் பயன்பாடு, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, ஒரு காலத்தில் மத்திய தர வர்க்கத்திற்குக் கனவாக விளங்கிய அயல்நாட்டுப் பயணம், வாழ்க்கை இவையெல்லாம் தமிழில் அறிவியல் கதைகளுக்கான வாய்ப்பை அதிகரித்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. சொக்கனைப் போல அறிவியலின் கனிகளை நுகர்ந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை அறிவியல் புனைகதைகளை எழுத முற்பட்டுத் தமிழ் இலக்கியத்தின் விளிம்புகளை விரிவாக்க முன் வர வேண்டும்.

இந்தத் தொகுப்பிற்காகவும், இனி வரவிருக்கும் அவரது நூல்களுக்காகவும் சொக்கனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
மாலன்

Copyright © 2005 Tamiloviam.com - Authors