தமிழோவியம்
திரைவிமர்சனம் : அரசாட்சி
- மீனா

·பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜி.எம் மாக பணிபுரியும் அர்ஜுன் வேலை விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர் - தனக்குக் கீழே பணிபுரிவது தன் முதலாளி மகள் (லாரா தத்தா) என்று தெரிந்தும் அவர் தவறு செய்யும்போது கன்னத்தில் அறையும் அளவிற்கு. கண்டிப்பான ஜட்ஜ் பி.வாசுவின் மகன் அர்ஜுன். குற்றவாளி ஒருவனால் வாசுவும் அவர் மனைவியும் கொல்லப்படுகிறார்கள். மகளின் கதி என்னவென்று தெரியாத நிலையில் உயிர் தப்பியவர் அர்ஜுன் மட்டுமே. கொலைசெய்தவர்கள் வக்கில் தேவனின் வாதத்தால் விடுதலை பெறுகிறார்கள். அதிலிருந்து குற்றவாளிகளுக்கு உதவி செய்யும் வக்கில்கள் அனைவரையும் வெறுக்கிறார் அர்ஜுன்.

தகப்பன் கண் எதிரிலேயே மகனைக் கொல்லும் ஒரு கொலைகாரனை வக்கில் ஆனந்தராஜ் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். அடுத்த காட்சியில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் அர்ஜுன் அடிக்கும் ஒரு பந்து வக்கில் ஆனந்தராஜ் மண்டையில் பட்டு ஆள் காலி. எதேச்சையாக நடந்த சம்பவம் இது என்று எண்ணி போலீஸ் கேசை மூடிவிடுகிறது. ஆனால் அநியாயத்திற்கு துணை போன காரணத்திற்காகவே அவனை நான்
கொன்றேன் என்று அர்ஜுன் லாராவின் நண்பண் கரணிடம் கூறும்போது தான் படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. கரணுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தன் வாதத்தால் மறைத்த சரண்ராஜைக் கண்டு குமுறும் அர்ஜுன் பொம்மை மாஸ்க் அணிந்து கூட்டத்தில் அவரைப் போட்டுத் தள்ளுகிறார். இதைப் போலவே போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் வக்கில் தேவனையும் தந்திரமாக கொல்லுகிறார்.

அர்ஜுன் செய்யும் தொடர் கொலைகளால் பயப்படும் வக்கில்கள் அனைவரும் ஆஜராக மறுக்கும் மணிவண்ணன் மகன் வழக்கில் ஆஜராக டெல்லியிலிருந்து வருகிறார் ரகுவரன். அவரையும் கொல்ல அர்ஜுன் தயாராகும்போது காணாமல் போன அர்ஜுனின் தங்கை ரகுவரன் மனைவியாக சென்னைக்கு வருகிறார். தங்கை கணவர் என்பதால் ரகுவரனைக் கொல்லாமல் விட்டுவிட்டாரா இல்லையா? அர்ஜுன் தான் வக்கில்களைக் கொன்ற கொலைகாரன் என்ற உண்மையை போலீஸ் கண்டுபிடிக்கிறதா இல்லையா? போன்றவைகளே மீதிக் கதை.

இந்தியன், ரமணா படங்களின் கலவைப் போலத் தோன்றினாலும் திரைக்கதையை கொஞ்சம் வித்தியாசமாக அமைத்திருக்கிறார் இயக்குனர் மகாராஜன். தேவன் மற்றும் சரண்ராஜை அர்ஜுன் கொல்லும் விதம் புதிது. அர்ஜுன் வழக்கம்போல சண்டைக் காட்சிகளில் அற்புதமாய் ஜொலித்திருக்கிறார். தங்கை கணவர் என்பதால் ரகுவரனைக் கொல்லத் தயங்கும் காட்சிகளில் அர்ஜுனின் நடிப்பு ஓக்கே ரகம்.

லாரா தத்தா - கதாநாயகி. வழக்கமான சினிமா மரபுப்படி பொம்மை போல வந்து போகிறார். மற்றபடி குறிப்பிடும்படி ஒன்றுமே இல்லை. உலக அழகி ஐஸ்வர்யாவிற்கு ஜீன்ஸில் அப்பாவாக வந்ததைப் போலவே இந்த உலக அழகிக்கும் எஸ்.வி.சேகர் அப்பாவாக வருகிறார். ஆனால் சேகருக்கு 2 சீனுக்கு மேல் காட்சிகளே இல்லை. ராணுவ மேஜராக கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கும்படியான கேரக்டர் நாசர். கொலைகாரனை நேரில் பார்த்த ஒரே சாட்சியான நாசரைப் பார்க்க யார் யார் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக போலீஸ் அதிகாரி அஜய் ரத்னம் - நாசருக்கு மைக்ரோபோன் வைத்த மைக்கை கொடுப்பதும் அதை நாசர் அவருக்கே திருப்பி அனுப்புவதும் சூப்பர்....

எப்போதும் வில்லனாகவே வரும் மன்சூர்அலிகான் இதில் இந்தியா கணேசன் என்ற பெயரில் வித்தியாசமான போலீஸ் அதிகாரியாக வந்து கலக்குகிறார். காமெடி காட்சிகளில் விவேக்கை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது இவரது நடிப்பு. விவேக்கிற்கு பெரிய அளவில் வேலை ஒன்றும் இல்லை.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2 பாடல்கள் கேட்கும்படி உள்ளன. சரவணனின் அருமையான ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். படம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்பு இல்லை என்பது உண்மை. அருமையான கதை, பாய்ந்து பாய்ந்து சண்டை போட அர்ஜுன், ஏகப்பட்ட வில்லன்களின் அணிவகுப்பு என்று இருந்தும் படம் என்னவோ சட்டென்று பாதியிலேயே முடிந்ததைப் போன்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை. சாரி மகாராஜன்!!
      

Copyright © 2005 Tamiloviam.com - Authors