தமிழோவியம்
கவிதை : தண்ணீர் பஞ்சம்
- லெனின்

Water Problemஈறுகளில் கூட ஈரம் வற்றியதால் தான்
எங்கள் பற்கள் கூட பழுத்து விழுந்தனவே!

ஈரப்பதம் எங்கள் உடம்புகளில் குறைந்ததால்
இரத்தம் கூட கட்டிகளானதே!

பொருத்துப் பொருத்துப் பார்த்து விட்டு,
வயிற்றுக் குழந்தை கூட வெளியில் வந்து
"அம்மா, கொஞ்சம் தண்ணீர் கொடு!" என்றதே!

உதடுகள் காய்ந்ததால் - தரும்
முத்தங்களின் போது கூட, தீப்பொறிப் பறக்கிறதே!

ஊருணி வற்றியதால் - இனி
ஊர் இருக்குமா?

மாசு தண்ணீரில் - இந்த
மானுடம் பிழைக்குமா?

முப்போகம் கண்ட வயல் காய்ந்ததே!
முலை சப்பி களைத்த குழந்தையின் கயல்விழி கூட காய்ந்ததே!

கொம்பு முளைத்த குதிரை,
புல் தின்னும் புலி,
நல்ல தண்ணீர் குடிக்கும் மனிதன்
எங்கள் நகரத்தில் இல்லை!

பக்கெட் தண்ணீரில் பாதி உடம்பை நனைத்து
அதை தூக்கியதால் வந்த வியர்வையில்
மீதி உடம்பையும் நனைத்துப் பழகிக் கொண்டோம்!

இறைவா! உங்களுக்காவது நல்ல நீர் கிடைக்கிறதா?
எங்கே கிடைக்கப் போகிறது?
ஆளானப்பட்ட நாங்களே அல்லல் படும் போது
பாவம் நீங்கள் !
என்ன பாடு படுகிறீர்களோ!

மழையை நம்பி இனி புண்ணியமில்லை!
மேகத்தை நம்பி இனி தாகம் தீரப் பொவதில்லை!

சுத்தப் படுத்தி கடல் நீர் குடிக்க
சுக்கா? மிளகா? செலவு கிளியே! அரசு கொடுக்க!

ஏ விஞ்ஞானமே!
உப்பு நீரை அப்படியே உட்கொள்ள - ஒரு
உடம்பை கண்டு பிடி !

அப்படி கண்டு பிடித்தால்,
அறுநூறு கோடி மக்களின்
புண்ணியம் "இந்தா புடி!"

Copyright © 2005 Tamiloviam.com - Authors