தமிழோவியம்
தராசு : மீடியாக்களின் பொறுப்பற்ற செயல்கள்
- மீனா

govindaமும்பை பட உலகம் மற்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நிகழ்வு - பிரபல இந்தி நடிகர் மற்றும் மும்பை எம்.பியான கோவிந்தாவுடன் கடத்தல்காரன் தாவுது இப்ராகிம் இருக்கும் காட்சி. போதாத குறைக்கு தாவுதின் கூட்டாளிகளான நூரா, அபுசலீம், சோட்டாசகில், அனிஸ் போன்ற கடத்தல்காரர்களும் கோவிந்தா மற்றும் தாவுதுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கிறார்கள். இது இந்தியா டி.வி சேனலில் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த வீடியோ எங்கே எப்போது படம் பிடிக்கப்பட்டது, இது இவர்கள் கைக்கு எப்படி கிடைத்தது போன்ற விபரங்கள் ஒன்றுமே சம்மந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பாக ஆதாரமற்ற வகையில் வெளியிடப்பட்ட சல்மான் ஐஸ்வர்யாவை மிரட்டும் டேப் - அது உண்மையா பொய்யா என்று கண்டுபிடிக்கும் முன்பாகவே டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் சல்மானுக்கு எதிராக பெரும் கலவரம் தோன்றக் காரணமாக அமைந்தது. இந்த விவகாரத்தால் அப்போது வெளியான சல்மானின் படம் வெளியிடப்பட்டிருந்த ஒரு தியேட்டருக்கு வன்முறையாளர்கள் தீ வைத்த சம்பவம் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஏராளமான கலவரங்கள் வெடித்தன. ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையால் "அந்த டேப்பில் இருந்த குரல் சல்மான் மற்றும் ஐஸ்வர்யாவுடையது கிடையாது.. இது யாரோ விஷமிகள் செய்த வேலை" என்று அறிக்கை வெளியான பிறகுதான் நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது என்றாலும் ஆதாரமற்ற அந்த வதந்தியால் ஏற்பட்ட நஷ்டங்கள் எத்தனை கோடி? அந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு பதில் சொல்வார் யார்?

பத்திரிக்கை உள்ளிட்ட மீடியாக்களின் வேலை பல புதைந்து கிடக்கும் ரகசியங்களை அம்பலமாக்குவதுதான் - என்றாலும் தாங்கள் கண்டறியும் விஷயங்களின் நம்பகத்தன்மை எவ்வளவு என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தற்போது பலரும் முன்வருவதே இல்லை என்பது வருந்தத்தக்க உண்மை. வெறும் தங்கள் பரபரப்பிற்காக இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஒரு சென்சேஷனை ஏற்படுத்தவே இத்தகைய மீடியாவைச் சேர்ந்தவர்கள் பாடுபடுகிறார்களே தவிர தாங்கள் வெளியிடும் பொய்யான செய்திகளால் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றி இவர்கள் நினைத்துப் பார்க்க தவறுவதுதான் இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம்.

ஆகவே பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி அன்பர்களே!! புதைந்து கிடக்கும் ரகசியங்களை அம்பலமாக்கும் உங்கள் பணி தொடரட்டும். ஆனாலும் கிடைக்கும் ஒரு சில விஷயங்களை மக்கள் மத்தில் போட்டு அம்பலமாக்குவதற்கு முன்பாக அதில் சிறிதளவாது உண்மை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதங்களுக்கு நீங்களும் பொறுப்பாளிகளாவீர்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors