தமிழோவியம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : "ஒட்டுண்ணிகள்"
- எஸ்.கே

நான் ஒரு நபரை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவரைக் காணலாம். அதுவும் ஒரு அமைச்சர் அல்லது முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கெடுக்கும் விழாக்களில் எல்லோருக்கும் முன்னால் வந்து அந்த முக்கிய புள்ளியின்முன் பெரிய கும்பிடு போட்டு சிரிப்பார். "நேற்றைக்கு உங்கள் டிவி பேட்டி அபாரமாக இருந்தது. எல்லாரும் அசந்து போய்ட்டாங்க!" - இதுபோல் சமயோசிதமாக ஏதாவது சொல்வார். புகழ்ச்சி எந்த இடத்திலிருந்து வந்தாலென்ன என்று அந்த புள்ளியும் அதை சிரிப்புடனும், தலையசைப்புடனும் ஏற்றுக் கொள்வார். நான் குறிப்பிடும் நபர் நன்கு "டீக்காக" டிரெஸ் செய்துகொண்டிருப்பதாலும், அவருடைய நடை, பாவனை, பேச்சு எல்லாம் ஒரு பெரிய மனித தோரணையாக இருப்பதாலும், யாருமே அவரை இன்னார் என்று வினவாமலே கொஞ்சம் இடம் கொடுத்துவிடுவார்கள். ஒரு சுண்டுவிரல் நுழைய இடைவெளி கிடைத்தால் போதுமே நம் நண்பருக்கு, யானையே நுழைத்துவிடுவார்!

இத்தகைய பேர்வழிகளின் முக்கிய ஆயுதம் அவர்களின் வாசாலகமான பேச்சுதான். நேரத்திற்கு ஒத்தாற்போன்ற சொல்லாடல் அவர்களுக்கு கைவந்த கலை. மேலும் அவர்கள் பன்மொழி வல்லுனர்களாக இருப்பார்கள். அப்பட்டமான புகழ்ச்சி (இதில் கவிழாதவர் யார் - இதன் சிகரம் "உங்களுக்கு flattery-ன்னாலே பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும் சார்"!), தேன் சொட்டும் குசல விசாரிப்புகள் போன்றவை இவர்களின் அம்பறாத்தூணியில் இருக்கும் பிற அஸ்திரங்கள். அவர்களது இன்னொரு சிறப்பம்சம் பொது அறிவு. இலக்கியத்திலிருந்து இன்டெர்நெட் வரை எந்தப் பொருளிலும் எல்லாம் தெரிந்த தோரணையில் பேசி அசத்திவிடுவார்கள். அவர்கள் பல படாடோபமான கிளப்புகளிலும், பல அரசு-சாரா பொதுத் தொண்டு நிறுவனங்களிலும் அங்கத்தினராகவோ, செயற்குழு உறுப்பினாராகவோ நிரந்தரமாக இருப்பார்கள் - இன்னொருவர் சிலவில்தான்! பல என்.ஜி.ஓ நிறுவனங்களில் இதுபோன்ற டுபாக்கூர் பேர்வழிகள்தான் நிரம்பியிருப்பார்கள். அவர்களுடைய விசிடிங் கார்டில் பல நிறுவனங்கள் பெயர் இருக்கும். ஆய்ந்து பார்த்தால் அதில் பெரும் பகுதி போகஸாக இருக்கும்.

இதுபோன்ற ஒருவரை நான் பலமுறை பல முக்கிய நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒரு வி.ஐ.பி அருகில் பேசி ஜோக் அடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பெரிய மனிதர் எனக்குத் தெரிந்தவராக இருந்ததால் அவரிடம் சென்று, "சற்றுமுன் உங்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் யார்?" என்று கேட்டதற்கு, "யாரோ திட்டமாகத் தெரியாது, ஆனால் நன்கு அறிமுகமான முக்யஸ்தர் போல் தெரிகிறது. ஏனென்றால் இந்தக் குழுவின் செயலரிடம் மிக நெருக்கமாக இருக்கிறார்" என்றார் விழித்தபடி. ஆனால் அந்த செயலரிடம் என் நண்பருக்கு நெருங்கியவராக காண்பித்துக் கொண்டிருப்பார்! இதுபோல் subtle deception game ஆடிக்கொண்டு வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கும் பலரை நான் கண்டிருக்கிறேன்.

உங்களை ஒரு இலக்காக மனத்தில் குறியிட்டுக்கொண்டபின் அதற்கான சில ஆயத்தப்பணியில் ஈடுபடுவார்கள். முதலில் உங்கள் சொந்த ஊர், இன்னார் மகன் போன்ற விவரங்கள், குடும்பம், குழந்தைகள், நெருங்கிய உறவினர் பற்றிய குறிப்புகள், மற்றும் உங்களுக்கு உள்ள குறைபாடுகள், பலவீனங்கள் ஆகியவைகள் நுட்பமாக ஆராயப்படும். அததுக்கு ஏற்ப வாத்தியங்கள் வாசிக்கப்பட்டு கோழிக்குஞ்சு அமுக்குவதுபோல் அமுக்கப்படுவீர்கள். இதுபோன்ற பேர்வழிகள் கட்டாயம் ஒரு பெண் உதவியாளரை (கொஞ்சம் மூக்கும் முழியுமாக, வழித்து விட்டார்ப்போல்!) வேலைக்கு வைத்திருப்பார்கள். அப்புறம் என்ன, நீங்கள் ஜொள்ஸில் வழுக்கல்தான்! (யார்யார் B.J.P (படா ஜொள்ளு பார்ட்டி) என்று அவர்களிடம் ஒரு பட்டியலே இருக்கும்.)

அவர்களுடைய டெக்னிக்குகள், உங்களால் சரியாக உணரப்பட்டு, அதற்கான தற்காப்பு நடவடிக்கை ஏதும் எடுத்துவிட இயலாத வகையில் இருக்கும். நாலு முக்யஸ்தர்கள்முன் உங்களுக்கு வணக்கம் சொல்லி இரெண்டு வார்த்தை விசாரிப்பார்கள். நீங்கள் புன்னகையுடன் ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த சூழ்நிலை அதுபோல் அமைந்துவிடும். அவரைக் காணாததுபோல் போனால் அங்கிருக்கும் வேறு பலர் உங்கள் அடிப்படை குணங்களை தவறாகக் கணித்துவிட ஏதுவாகும். உங்கள் இலேசான தலையசைப்பு, ஒரிரெண்டு மில்லிமீட்டர் சிரிப்பு, தெரிந்தவர் போன்ற அங்கீகரிப்பு - இவை போதும் அந்த நபருக்கு. உங்கள் உடன் அல்லதுகீழ் பணிபுரிபவரிடம் மறுநாள் சர்வ ஸ்வாதீனமாக அடுக்களை வரை சென்று தனக்கு வேண்டியவற்றை சாதித்து விடுவார். உங்கள் தனி உதவியாளரிடமே வேலை வாங்கிவிடுவார். இதெல்லாம் ஒரு subtle mind game. கடல்வாழ் பிரம்மாண்டமான மிருகமான திமிங்கிலத்தின் தோல்மேல் பல parasites உயிர்வாழ்வதுபோல் உங்களையறியாமலேயே உங்கள் பெயரைச் சொல்லி அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமில்லை உங்களுக்குப் போய்ச்சேரவேண்டிய பங்கு என்று சொல்லி பலரிடம் லஞ்சம் வாங்கிச் சென்றுவிடுவார்கள். இதெல்லாம் வாழ்வில் வெற்றிக்கு நீங்கள் உங்களையறியாமல் அளிக்கும் விலை!

ஆனால் அத்தகைய புல்லுருவிகள் உங்கள் பெயரையும் பதவியையும் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பையும் தன் சுயநலத்திற்காக துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் வெற்றியும் பெருமையும் உங்கள் முயற்சியாலும் உழைப்பாலும் பெற்றது அதை "குந்தினாற்போல்" இன்னொருவர் உறிஞ்சுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலும் அத்தகைய நபர்கள் உங்கள் நற்பெயரைக் கெடுத்துவிடுவர்.

சரி, இவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? சில அடிப்படை விதிகளை தவறாமல் கடைப்பித்தீர்களேயானால் இதுபோன்ற ஒட்டுப்புல்களை அண்டவிடாமல், உங்கள் பெருமைக்குப் பங்கம் வராமல் காப்பாற்றிக்கொள்ளலாம். கொஞ்சம்கூட மன நெகிழ்வுக்கோ, சபலத்திற்கோ இடம் கொடுக்கக்கூடாது.

 1. சில்க் ஜிப்பா, சில்க் வேஷ்டி(சிலர் கதரில் அல்லது "கரை"யில் பவனி வருவதும் உண்டு), செண்ட், மூக்குப்பொடி கலரில் சஃபாரி சூட், சந்தனக் கலரில் சல்வார் சூட், நல்ல கத்திரி வெய்யிலில் அந்துருண்டை வாசத்துடன் "கரேல்' என்று கோட், சூட் - இதுபோன்ற உடையலங்காரத்துடன் ஆரவாரமாக யாராவது உங்களிடம் வந்து ஏதாவது அழைப்பு விடுத்தால் உடனே ஒப்புக் கொள்ளாதீர்கள். அதில் ஏதாவது முள் இருக்கும். உங்களிடம் ஏதாவது காரியம் சாதித்துத் தருவதாக யாரிடமாவது வாக்களித்து, அதில் பெருத்த ஆதாயமடைவதற்கு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். உங்கள் உதவியாளர்கள் மூலம் முழுமையாக ஆராயாமல் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புதல் கொடுக்காதீர்கள்.

 2. உங்களுடன் இருக்கையில், அல்லது உங்களிடம் ஏதேனும் மனு போன்றவற்றை கொடுக்கும்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று யாராவது சொன்னால் தவிர்த்துவிடுங்கள். அந்தப் புகைப்படம் பின்னால் எப்படி வெடிக்கும் என்று உங்களால் அப்போது கணிக்க இயலாது.

 3. ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது திடீரென்று முன்பின் தெரியாத ஒருவருக்கு மாலை அணிவிக்கவோ, ஏதேனும் பொருளை அளிக்கவோ வேண்டினால் தவிர்த்துவிடுங்கள். நீங்கள் தலைமை தாங்கும் அல்லது முக்கிய விருந்தினராக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் முன்கூட்டியே யார்யார் அமர்ந்திருப்பார்கள், யார் பேசுவார்கள், நிகழ்ச்சி நிரலில் வேறு என்னென்ன இருக்கும் என்று அமைப்பாளர்களிடம் தீர விசாரித்துவிடுவது நலம். மேடையில் surprise ஏதும் கொடுக்காதீர்கள் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

 4. சில வில்லங்கமான இடங்களுக்குச் சென்றால் அங்கு நிகழும் தவிசல்கள், சலசலப்புகள் போன்றவற்றில் நீங்களும் இழுக்கப்படும் அபாயம் இருக்கிறது. கொஞ்சம் ஏடாகூடமாகத் தோன்றினால் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். உங்கள் உள்மன எச்சரிக்கைகள்படி நடத்தல் நலம்.(Follow your intuition.)

 5. நன்கு அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து ஏதும் பரிசுப் பொருளை பெற்றுக்கொள்ளாதீர்கள். அவற்றுடன் கண்ணுக்குத் தெரியாமல் சிக்கல் ஒட்டிக் கொண்டிருக்கும்.

 6. உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு யார் என்ன கேட்டாலும் உங்களைக் கலக்காமல் செயலில் இறங்க வேண்டாம் என்று உங்கள் உதவியாளர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களிடம் திட்டவட்டமாக ஆணையிட்டுவிடுங்கள். பெரிய மனிதர்கள் பலர் இதுபோல் செய்வதை நான் கண்டிருக்கிறேன்.

 7. எல்லாவற்றிற்கும் மேல் எப்போதும் விழிப்புடன் இருங்கள்! உங்கள் வெற்றியில் குளிர்காய ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

Eternal vigilance is the price of success and your efforts to sustain it!

Copyright © 2005 Tamiloviam.com - Authors