தமிழோவியம்
தராசு : எது பத்திரிக்கை சுதந்திரம்?
- மீனா

கடந்த 2 நாட்களாக வீரப்பன் விவகாரத்தை ஒவ்வொருவரும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் வேளையில் சில பத்திரிக்கைகளில் வீரப்பனின் மகளைப் பற்றிய உப்பு சப்பில்லாத செய்திகளை அவர்களுடைய புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்கள். வீரப்பன் கொல்லப்பட்ட இரவே தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை எழுப்பி, போட்டோவிற்கு போஸ் கொடுக்கச் செய்து அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். வீரப்பன் விவகாரத்தைப் போட்டாலே பத்திரிக்கை எல்லாம் நிச்சயம் விற்றுவிடும் என்று தெரிந்தும், ஒன்றுமே தெரியாத அந்த அப்பாவிப் பெண்ணின் போட்டோவைப் போட்டது எந்த விதத்தில் நியாயம்?

கடலூரில் ஒரு தனியார் பள்ளியில் படித்துவரும் அந்தப் பெண் யார் என்பது 2 நாட்களுக்கு முன்பு வரை அந்தப் பள்ளியின் முதல்வருக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் இப்போதோ பத்திரிக்கைகளின் உபயத்தால் அந்தப் பெண் யார் என்பது ஊருக்கே தெரியும். இனி தொடர்ந்து அந்தப் பெண் அந்தப் பள்ளியில் படிக்க முடியுமா? படித்தாலும் சக மாணவ மாணவியர் அந்தப் பெண்ணைப் பற்றி எவ்விதம் பேசுவார்கள்? என்பதை எல்லாம் இந்தப் பத்திரிக்கை ஆசிரியர்கள் கொஞ்சமும் யோசிப்பதே கிடையாது. இவர்கள் நோக்கம் - பரபரப்பாக எதையாவது எழுதி பத்திரிக்கை சர்குலேஷனை அதிகரிக்கவேண்டும். அவ்வளவே.. மனித உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்பு கிடையாது.

டயானாவின் மரணத்திற்கு பத்திரிக்கைகளின் இடைவிடாத துரத்தலே காரணம் என்றால் இன்றளவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து எழுதி காசு பார்க்கிறார்கள் சில பத்திரிக்கை அதிபர்கள். பத்திரிக்கை மட்டுமல்லாமல் தற்பொழுது டி.வி போன்ற அனைத்து மீடியாக்களும் பின்விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உண்மை என்ற பெயரில் கண்டவை மற்றும் கேட்டவைகளை அப்படியே போட்டுவிடுகிறார்கள். அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகள் வேறு எங்கே எல்லாம் தாக்கலாம் என்று தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஒரு பெரிய பட்டியலே போட்டார்கள். பார்த்த பலரும் கூறியது - " தீவிரவாதிகளுக்கு இந்த இடமெல்லாம் தெரியவில்லை என்றாலும் இவர்களே சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறதே!" என்பது தான்.

பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, ரேடியோ போன்றவை மிகவும் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு சாதனங்கள். அணு ஆயுதத்திற்கு ஒப்பானவை. இவற்றால் நல்லதும் நடக்கும். கெட்டதும் நடக்கும். ஆகவே இத்தகைய துறையில் உள்ளவர்கள் தங்களது சுயநலத்தை மட்டும் க்ருத்தில் கொள்ளாமல் பொதுநலனை முக்கியமாகக் கருதவேண்டும். கத்தியை விடக் கூர்மையானது பேனா. அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். துன்பத்தில் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரலாம். ஆனால் பல சமூகப் பிரச்சனைகள் காரணமாக மறைந்து வாழும் நிலையில் உள்ள ஒருவரை வெளிச்சம் போட்டு உலகிற்குக் காட்டி அவர்கள் வாழ்க்கையை தர்மசங்கடத்தில் ஆழ்த்திவிடாதீர்கள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors