தமிழோவியம்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : ஒல்லிக்குச்சி ஒடம்புகாரி,..
- ஜெயந்தி சங்கர்

இப்போதெல்லாம் திரைப்படம், எம்/எ·ப் டீவி போன்ற ஊடகங்களில் வரும் பெண்களைப் பாருங்கள்! பொதுவாகவேகூட அக்கம்பக்கங்களில் கண்ணில் படும் பெண்களில் இளம் பெண்கள் மற்றும் பதின்மவயதுப் பெண்கள் மட்டுமல்லாது மத்தியவயதுப் பெண்களும்கூட கிள்ளியெடுக்கத் துளிச்சதையில்லாமல் ஒல்லிக்குச்சியாக உடம்பை வைத்துக்கொள்வதைத் தான் பார்க்க முடிகிறது. பஞ்சத்தில் அடிபட்டவர்களைப்போல கன்னத்திலும் 'டொக்கு' விழுந்துவிடுகிறது இவர்களுக்கு !

சிங்கப்பூரில் 1.49 m உயரமிருக்கும் ஒரு பெண்மணி தினமும் ஒரே ஒரு தேக்கரண்டி சாதம் சாப்பிட்டுவிட்டு உடனேயே ஒரு பேதி மாத்திரையையும் போட்டுக்கொண்டு விடுவாராம். என்னே விநோதம் ! இவரது எடை முன்பு 42 kg இருந்தது, 27 kg ஆனது. இவர் ஏதோ பதின்மவயதுப் பெண் என்று நினைத்தீர்களானால், அதுதான் இல்லை. இவருக்கு வயது 49. மூன்று 17, 20 மற்றும் 22 வயது இளைஞர்களின் தாய். இளைப்பதற்காகப் பட்டினிகிடத்தல், பிறகு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டு வலுக்கட்டாயமாக வாந்தியெடுத்தல் போன்ற செயல்களில் முப்பதுக்கு மேற்பட்ட வயதுடைய பலபெண்மணிகள் ஈடுபடுகிறார்களாம். இதே வேலையாகச் செய்வார்களோ என்னவோ ! உளவியல் ரீதியான தொடக்கத்தைக் கொண்டுள்ள இந்நோய்க்குப் 'பதின்ம நோய்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

'புலிமியா நெர்வோஸா' என்பது இந்தமாதிரிப் பலமுறை செய்வது. எனிமா உபயோகிப்பது, டையட் மாத்திரைகள் உட்கொள்வது எல்லாமே இதில் அடங்கும். பெரும்பாலும் இந்தப்பிரச்சனையில் மாட்டிக்கொண்டு அவதிப்படுபவர்கள் தங்களின் மேலேயே அவர்களுக்கு ஒரு பாதுகாப்பின்மை உடையவர்களாயிருப்பார்களாம். இவர்களிடம் அதிக மனவுளைச்சல், சுயவிமரிசனம் போன்ற அறிகுறிகள் காணப்படும். புலிமியாவினால் யாரும் சாவதில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால், உண்மை வேறு. குறைந்த போட்டாஸியம் காரணமாகவும் உணவுக்குழாய் சேதத்தின் காரணமாகவும் இவர்களில் அதிகம் பேர் இறக்கிறார்கள்.

இருபது வயதில் இருந்ததைப்போலவே நாற்பது வயதிலும் இருக்கவேண்டிய சமூகக் கட்டாயம் இவர்களுக்கு ஏற்பட்டுவிடுவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். வேலைக்குப்போகும் பெண்கள் என்றில்லை, இல்லத்தரசிகளும் கூட இத்தகைய சாப்பிடும் பிரச்சனைகளில் (eating disorder) மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். ஐந்து வருடத்திற்குமுன் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பெண்மணிகள் மட்டுமே இத்தகைய பிரச்சனைகளால் உடல்நலம் குன்றி மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால், இத்தகைய பெண்களின் எண்ணிக்கை பெருகியபடியிருக்கிறது. ஆதலால், இப்போதெல்லாம் ஒரு மாதத்தில் பத்து முதல் இருபது பெண்மணிகளுக்கு
சிங்கப்பூர் பொதுமருத்துவமனையில் மனோவியல் நிபுணர் லீ ஈ லியான் சிகிச்சையளிக்கிறார். முன்பு இளம்பெண்களுக்கு ஒல்லியாக இருக்கவேண்டுமென்ற ஆசையிருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால், குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு, அவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்போடு வேலைக்கும் போய்க்கொண்டு தங்களை ஒல்லியாக வைத்துக்கொள்ளவும் வேண்டியுள்ள நெருக்கடி மிகவும் அதிகரித்துள்ளது என்கிறார்.

சமீபத்தில் வெளியான நியூயார்க் டைம்ஸ் சஞ்சிகையில் ஓர் ஆய்வறிக்கை வெளியானது. 30 ஆண்டுகளாக பெண் நோயாளிகள் பலரின் கடந்தகால மருத்துவப்பின்னணியை ஆராய்ந்தனர். அப்பெண்களில் 18 % - 20 % பெண்கள் இத்தகைய சாப்பிடும் பிரச்சனைகளில் அவதிப்பட்டு இறந்தது தெரிய வந்திருக்கிறது.

'அனோரெக்ஸியா' அதிகப்பட்டினி கிடத்தலால் ஏற்படும் பிரச்சனை. ஒல்லியான பிறகும் கூட மனத்தளவில் இவர்கள் குண்டாக இருப்பதாகவே நினைக்கிறார்கள். நாளடைவில் உணவுண்ணாமல் மாத்திரை வடிவில் கலோரிச்சத்தை உட்கொள்ளவிரும்புவார்கள். இதன்பின் விளைவுகளால் பாதிக்கப்பட்ட 10-20% பேர் இறக்கிறார்கள். மலச்சிக்கல், மன உளைச்சல், முடியுதிர்தல், தூக்கமின்மை போன்றவற்றில் தொடங்கி சிறுநீரகக்கோளாறு, கல்லீரல் கோளாறு என்று தொடர்ந்து சிலவேளைகளில் 'ஹார்ட் அட்டாக்'கில் கூட முடியுமாம்.

இத்தகைய அபாயகரமான பட்டினிகிடக்கும் போக்கிற்கு உடல் இளைக்கவைக்கும் விளம்பரங்களையே மனோவியல்
வல்லுனர்கள் குறைகூறுகிறார்கள். ஹாங்காங்கின் 56 வயது நடிகை லிசா வாங் போன்றோரை வைத்து எடுக்கப்பட்ட விளம்பரங்கள் பெண்களைப்பெரிதும் ஈர்க்கின்றன. அதுமட்டுமில்லை. '·புல் த்ரோட்டில்' என்ற ஆங்கிலப்படத்தில் 41 வயது டெமி மூரே, இளைய நடிகையான காமரூன் டியாஸ் என்பவரைவிட கவர்ச்சியாக இருக்க அவரது இளைத்த உடலே காரணம் என்று பெரும்பாலான பெண்கள் நம்புகிறார்கள்.

'ஒல்லியாகவேண்டும்', 'குச்சியாகவேண்டும்', 'பென்சிலாகவேண்டும்' என்று மனதில் தீர்மானித்துக்கொண்டு, அதற்காகவே பட்டினி கிடந்து அந்த எண்ணத்தை உதறமுடியாமல், உடலாலும் மனதாலும் பாதிப்படையும் பெண்களில் பலர் மௌனமாகக் கஷ்டப்படுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வாறு பட்டினிகிடந்து வயிறு காய்ந்து உடல் பலகீனமாகும்போது வேறு வழியில்லாமல்தான் இப்பெண்கள் மருத்துவரை அணுகுகிறார்கள். இத்தகைய ஒல்லியாகும் மனப்போக்குடைய எல்லாப்பெண்களையும் மருத்துவ உதவியை நாடும்படி வலியுறுத்துவதாக தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மனோவியல் நிபுணர் கல்வின் ·பான்ஸ் என்பவர் கூறுகிறார். இந்த வகை நோயினால் பாதிப்படையும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடிவருவதாக எல்லா மருத்துவர்களும்  சொல்லவில்லை. இருந்தாலும் பொதுவாகப்பார்த்தால் இந்த வகை பதின்மநோயாளிகள் கூடியே வருகின்றனர். இதில் பெரும்பாலோர் மௌனமாகக் கஷ்டப்படுகின்றனர். இது ஒரு நோய் என்று அறிந்தவரும் இதில் அடங்குவர். ஒருகட்டத்தில் இனிமேல் சகிக்கவே முடியாது எனும்போது மருத்துவரை நாடுகின்றனர். மருத்துவமனையில் பதின்மவயதில் அவதிப்படும் நோயாளிகளோடு மத்தியவயது நோயாளிகளும் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் தன் கடைக்குட்டி மகள் இதே பதின்ம நோய்க்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று திருமதி சான் சொன்னார். இந்தத் தாயிற்கு பெருத்தகவலையேற்பட்டுவிட்டது. மகளுக்குப் பிடித்தமான உணவுவகைகளைச் சமைத்துவைப்பாராம். ஆனாலும், மகளோ சாப்பிடமுடியாது தவிப்பார்.

இது ஒருபுறமிருக்க, திருமதி லிம் என்ற நாற்பது வயது பெண்ணிற்கு நடந்தது மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. சிறுவயதில் அவர் குண்டாக இருப்பாராம். அவருடைய அம்மா, " நீ இப்பிடி குண்டா இருக்கயே , ஒன்ன யாரு கல்யாணம் பண்ணிக்கப் போறா", என்று அடிக்கடி சொல்வாராம். இவருக்கு அது மனதில் பதிந்துவிட்டது. சுமார் 30 ஆண்டுகளாக இவர் அளவிற்கு அதிகமாக நார்ச்சத்து மாத்திரைகளையும் பொடிகளையும் உட்கொண்டு வந்திருக்கிறார். அத்துடன் பேதி மாத்திரைகள் வேறு. ஒரே நாளில் 20 பேதிமாத்திரை, 10-12 நார்ச்சத்துப் பொடி பாக்கெட்டுகளையும் உட்கொள்வதென்றால் எவ்வளவு அறியாமை பாருங்கள் ! பதின்மவயதைக்கடந்த மூன்று குழந்தைகளுடைய இவர் நாள் முழுவதும் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வாராம். உணவு உட்கொள்வதைத் தவிர்த்து இப்படியெல்லாம் செய்தால் உடல் இளைக்கும் என்று தீவிரமாய் நம்பினார். இந்தப்பெண்ணின் குடலில் அடைத்துக்கொண்டிருந்த இந்தச் சமாச்சாரங்களையெல்லாம் அகற்றவே 6 முறை அறுவைசிகிச்சை செய்து, கடைசியில் ஒரு பகுதி குடலையே அகற்றும் நிலையேற்பட்டுள்ளது.

நான் அறிந்த ஒரு பெண்மணி தொண்டைப்புண் காரணமாகப் பெரிதும் அவதிப்பட்டார். கணவர் புதிதாக வியாபாரம் ஆரம்பித்திருக்கிறார், ஒரு நிலையாகிறவரை செலவைக்குறைக்கிறேன் என்று $ 30 மருத்துவருக்குக் கொடுக்க மனமில்லாமல் ஒரு வாரம் சிரமப்பட்டார். ஆனால், இவர் $1200-$1400 வரை தன் உடல் எடையைக்குறைக்கச் செலவிடுகிறார். எத்தனை விசித்திரம் !

மத்திய வயது நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதில் அதிக தயக்கம் காட்டுகின்றனர். மகளுக்கு இதே பிரச்சனை இருக்கும் போது காட்டும் அக்கறையை ஆண்களும் மனைவிமார்களுக்கு இருக்கும்போது காட்டுவதில்லை. நோயிலிருந்து மீண்டிருக்கும் அனுபவசாலியான திருமதி சான், மற்ற பதின்மநோயாளிகளுக்குக் கூறும் செய்தி- "உங்களைச் சற்று மறந்து உங்கள் குடும்பத்தின்மீது அக்கறை காட்டுங்கள்."

குழந்தைகள் பெற்றுக்கொண்டுவிட்ட பெண்மணிகள், தங்கள் கணவன்மார்கள் வேறு பெண்ணைத்தேடிச்சென்று விடாமல் இருக்கவே தங்களைப் பென்சிலாக்கிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஆண்கள் எல்லோரும் மனைவிமார் குச்சியாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.

இத்தகையபிரச்சனைகள் உணவின் மூலம் வெளிப்படும் மனப்பிரச்சனைகளே. இதிலிருந்து மீள்வது, போதைக்கடிமையானவர்கள் அதிலிருந்து மீளும்போது படும் அவதியைப்போன்றே மிகவும் கொடுமையானது. என்றாலும், தகுந்த சிகிச்சையுடன் மனோதிடமும் இருந்தால் இதிலிருந்து மீண்டுவிட முடியுமாம்.

பசிக்கே உணவில்லாமல் உலகெங்கும் ஆங்காங்கே மக்கள் இருக்கிறார்கள். அடிப்படைத்தேவையான அளவு உணவே அவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. ஆனால், தேவைக்கேற்ப நல்ல உணவுண்டு ஆரோக்கியமாக இருக்கவேண்டிய இப்படிப்பட்ட சிலரோ உண்ணாமல், கொஞ்சம் சாப்பிட்டதையும் வெளிக்கொணர்ந்து குச்சி உடம்புக்காக இந்தப்பாடுபடுவதைப் பார்க்கும்போது சிரிப்பதா வருந்துவதா ? !

Copyright © 2005 Tamiloviam.com - Authors