தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : எழுத்து இலக்கியம்
- ஜெ. ரஜினி ராம்கி

முழுமையான இலக்கியவாதியாக இல்லாவிட்டாலும் எழுத்தின் மூலம் பல நல்ல கருத்துக்களை மக்களிடையே சேர்ப்பித்து அதன் மூலம் ஒரு அமைதிப்புரட்சி உண்டாக்க முடியும் என்று காந்திஜி நம்பியிருந்தார். தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் ஒரு செய்திப் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை பார்த்த அனுபவம் அவருக்கு கைகொடுத்தது. யங் இந்தியா, ஹரிஜன் போன்ற பத்திரிக்கைகளில் நிறைய விஷயங்களை கட்டுரைகளாக எழுதியிருந்தாலும் சமூகமும் வாழ்வும் சார்ந்த விஷயங்களை மட்டுமே அவர் பதிவு செய்வதில் முனைப்பு காட்டியிருக்கிறார். அவர் மேடையில் பேசியவையெல்லாம் கூட அவரது உதவியாளரால் தொகுப்பட்டு கட்டுரை வடிவங்களில் வெளியாகியிருக்கின்றன. காந்திஜியை பொறுத்தவரை எழுத்து என்பது மக்களிடையே ஏதாவது நல்ல
விஷயங்களை பரப்புவதற்கு உதவியாக இருக்கவேண்டும். அதனாலேயே கலை, இலக்கியமெல்லாமே மக்களுடன் நேரடியாக பேசுபவையாக இருக்கவேண்டும் என்பதை சொல்லிவந்தார்.

அது மட்டுமல்லாமல் எழுத்து என்பது நேரடியாக சொல்ல வேண்டியதை மக்களுக்கு சொல்லும் எளிய வடிவமாக இருக்கவேண்டும் என்கிறார். சுற்றி வளைத்து சொல்லும் கதை, புதினங்கள், நாவல்கள் போன்றவற்றை காந்திஜி ஏனோ அங்கீகரிக்கவில்லை. முக்கியமாக புதினங்கள் என்றாலே காந்திஜிக்கு அலர்ஜி. புதினங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நேரமும் பணமும்தான் செலவாகுமே தவிர அதனால் மக்களுக்கு எந்த பயனும் இருக்காது என்பது அவரது கருத்து. அதற்கு காரணம் அந்த காலத்து புதினங்கள் மக்களின் ஆடம்பர வாழ்க்கை பற்றியும் பெண்களின் அழகு பற்றியும் வர்ணிக்கும் படைப்புகளாக இருந்ததுதான் காரணம்.

அதிலும் பெண்களை அலங்காரப் பதுமைகள் போல வர்ணிக்கும் புதினங்கள் ஆகவே ஆகாது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புதினங்கள் வருவதை அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். முக்கியத்துவம் என்றால் பெண்களின் கண்கள், மூக்கு, கழுத்து என்று அங்கங்களை வர்ணிக்கிறேன் பேர்வழி என்று பக்கம் பக்கமாக ஏழுதி தள்ளுவது. அப்படிப்பட்ட இலக்கியப் படைப்புகள் மக்களுக்கு தேவையில்லை அவை புறக்கணிக்கப்படவேண்டியது அவசியம் என்கிறார். பெண்ணை வர்ணிக்கும் எழுத்தாளர், என்றைக்காவது அவரது தாயாரையே, தந்தையையோ அல்லது உடன்பிறந்தோர்களை வர்ணித்து எழுதியிருக்கிறாரா, அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பெண்களை பற்றியெல்லாம் குறிப்பிடாமல் ரம்பா, ஊர்வசிகளைப் பற்றியெல்லாம் வர்ணிப்பதால் என்ன பயன் என்கிற காந்திஜியின் கேள்வி இன்றைய நிலைக்கும் பொருத்தமானதே!

பெண்கள் என்று மட்டுமல்லாமல் பொதுவாக வர்ணணைகளின் மீதே காந்திஜிக்கு உடன்பாடு இல்லையென்பது அவரது கட்டுரைகளிலிருந்தே தெரிகிறது. கண்ணை கட்டி மாய உலகில் நம்மை அமிழ்த்தும் இதுபோன்ற வர்ணணைகள் படைப்புகளின் மைய கருத்திலிருத்து விலகிச்செல்வதைத்தான் அவர் குறை சொல்கிறார்.

குரானிலும், பைபளிலும், உபநிஷங்களிலும் வர்ணணைகளுக்கு இடமில்லை. துளசிதாஸரின் படைப்புகளிலும் வர்ணணைகள் இல்லை.  அப்படியிருக்கும்போது வர்ணணைகள் இருப்பதைத்தான் முழுமையான இலக்கியப்படைப்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறார். (Collected works of Mahatama Gandhiji)

இலக்கிய உலகில் கதைகளும், புதினங்களும் குவிந்திருந்தாலும் வான்கோள ஆய்வியல், பூகோளம், சரித்திரம் பற்றியெல்லாம் அதிகமான புத்தகங்களில்லை (ஹரிஜன், 21.11.1936) என்று அவர் சுட்டிக்காட்டும் நிலைமை இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

எழுத்தின் நிலைமை இப்படியென்றால் பத்திரிக்கை கலாசாரம் பற்றியும் காந்திஜி கவலைப்படும்படியான விஷயங்களை அந்த காலத்திலேயே வெளிப்படையாக பேசியிருக்கிறார். மக்களுக்கு அறிவூட்டும் வேலையை வியாபார ரீதியாக செய்யும் பத்திரிக்கைகள் கொஞ்சம் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்கிறார். கிடைத்த தகவல்களை சரிபார்க்காமல் பிரசுரிக்கும் பத்திரிக்கைகளை சாடும் அவர் உறுதி செய்யமுடியாவிட்டால் பிரசுரிக்காமலிருப்பது உத்தமம் என்கிறார். 

குடிப்பழக்கத்தையும், புகைப்பிடித்தலையும் தவறென்று தலையங்கம் எழுதிவிட்டு சிகரெட், மது விளம்பரம்  வெளியிடுவது, போலி மருத்துவம் சார்ந்த விளம்பரங்கள், மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை விளம்பரங்களாக வெளியிடும்போது பத்திரிக்கைகள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதுபோன்ற விளம்பரங்களை சீர்திருத்தியே ஆகவேண்டும். விளம்பரங்களை ஏற்றுக்கொள்வதிலும் அதை பிரசுரிப்பதிலும் ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவந்து அதை முழுமையாக கடைப்பிடிப்பது ஒவ்வொரு செய்தி ஊடகத்தின் கடமையாக இருக்கவேண்டும். (Collected works of Mahatma Gandhiji, November 1917)

அப்படியொரு வழிமுறை., பத்திரிக்கைகளுக்கு மனமாற்றத்தின் காரணமாகவோ அல்லது அரசாங்கத்தின் கடுமையான சட்டத்தின் காரணமாகவே இதுவரை நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் சோகம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors