தமிழோவியம்
முத்தொள்ளாயிரம் : பாண்டியன்
- என். சொக்கன்

பகுதி 3 : பாண்டியன்


பாடல் 53

மகாபாரதத்தில் ஒரு சோகமான கட்டம் - அர்ச்சுனனின் மகன் அபிமன்யு, போரில் இறந்துவிடுகிறான். அந்தத் துயரத்தைத் தாங்கமுடியாத அர்ச்சுனன், சாப்பாடு, தூக்கம் மறந்தவனாய் இடிந்துபோய் அமர்ந்திருக்கிறான்.

இதைப் பார்த்த கண்ணன், அர்ச்சுனனைத் தேற்றி, 'ஏதாவது சாப்பிடு.', என்று வேண்டினான்.

'வேண்டாம் கண்ணா.', என்று மறுத்தான் அர்ச்சுனன், 'எனக்குச் சாப்பிடத் தோன்றவில்லை., எங்கே பார்த்தாலும் அபிமன்யுவின் முகம்தான் தெரிகிறது !'

'அதையே நினைத்துக்கொண்டிருந்தால் எப்படி ?', என்று அவனை உரிமையோடு கண்டித்தான் கண்ணன், 'நீ முதலில் சாப்பிடு, எல்லாம் சரியாகிவிடும்.', என்றபடி சில பண்டங்களைக் கொண்டுவந்து, அர்ச்சுனனுக்குமுன்னால் வைத்தான்.

அப்போதும் அர்ச்சுனனுக்குச் சாப்பிட மனமில்லை, ஆனால், அதைக் கண்ணனிடம் நேரடியாகச் சொல்லவும் தயக்கம், ஆகவே, 'சிவனுக்கு பூஜை செய்யாமல் நான் சாப்பிடுவதில்லை என்று உனக்குத் தெரியாதா கண்ணா ?', என்றான் சமாளிப்பாய்.

'தெரியும், நீ இந்த மலர்களை என் தலைமேல் தூவு.', என்றபடி, ஒரு பூக்கூடையைக் காட்டினான் கண்ணன்.

'எதற்கு ?', என்று வியப்புடன் கேட்டான் அர்ச்சுனன்.

'நீ என் தலைமேல் தூவும் மலர்கள், சிவபெருமானைச் சென்று சேர்ந்துவிடும்.', என்று சிரித்தான் கண்ணன்.

அதன்படி, அர்ச்சுனன் கண்ணனின் தலையில் மலர்களைத் தூவி, சிவ பூஜை செய்தான் - உடனே, அந்த மலர்கள் நேரடியாக, சிவபெருமானின் பாதங்களைச் சென்றடைந்ததாகச் சொல்வார்கள் !

அர்ச்சுனன் தூவி, கண்ணனின் தலைவழியே சிவபெருமானின் காலில் சென்று சேர்ந்த அந்த மலர்களைப்போல, இங்கே பாண்டிய அரசனின் காலில் கிடக்கும் இந்த மலர்களும், ஒரு 'புதுமை'யான முறையில் அங்கே வந்து சேர்ந்தவைதான் !

பாண்டியனின் ஆட்சியை ஏற்று, அவனுக்குக் கப்பம் செலுத்த வந்த சிற்றரசர்கள் ஏராளம் - அவர்கள் ஒவ்வொருவரும், பாண்டியனை அடிபணிந்து வணங்கியபோது, அவர்கள் தலையில் அணிந்திருந்த மலர்கள் உதிர்ந்து, கீழே விழுந்தன - அப்படி விழுந்த மலர்கள்தான், இப்போது பாண்டியனின் காலடியில் குவிந்து கிடக்கின்றன.


செங்கண் நெடியான்மேல் தேர்விசயன் ஏற்றியபூப்
பைங்கண்வெள் ஏற்றான்தாள் கண்டற்றால் எங்கும்
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப்படும்.

(செங்கண் - சிவந்த கண்
நெடியான் - திருமால் / விஷ்ணு
விசயன் - அர்ச்சுனன்
பைங்கண் - பசிய / குளிர்ந்த கண்கள்
வெள் ஏற்றான் - வெள்ளை எருதை வாகனமாக ஏற்ற சிவன்
தாள் - பாதம்
மொய்ம்மலர் - மலர்கள் மொய்த்த / நிறைந்த
தார் - மாலை
மிசை - உயர்வு)பாடல் 54

52வது முத்தொள்ளாயிரப் பாடலில், 'சோழனும், முருகனும் சமம்' என்று புகழப்பட்டது - அதுபோல, இந்தப் பாடலில், பாண்டியனும், கண்ணபிரானும் ஒன்றே என்று எழுதுகிறார் புலவர்.

சிறுவயதில், கண்ணனைக் கொல்வதற்காக, ஒரு அரக்கன் குதிரை வடிவம் எடுத்து வந்தான், அப்போது அவனை அடக்கிக் கொன்றவன் குழந்தைக் கண்ணன்.

பின்னர், அநிருத்தன் சிறைப்பட்டபோது, அவனை மீட்பதற்காக, குடக்கூத்து ஆடியவன் கண்ணன்.

கோகுலத்தில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த அந்த மாயக் கண்ணன், 'நப்பின்னை'யைக் காதலித்து, மணந்தவன்.

இந்தத் தகவல்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அடுக்கிச் சொல்லிவிட்டு, நம் புலவர் பாண்டியனைப் பார்த்துக் கேட்கிறார், 'கண்ணா, அப்போது நீ நப்பின்னையைத் தழுவியபோது உன் மார்பில் ஒரு மச்சம் இருந்தது. ஆனால், இப்போது அதைக் காணவில்லையே., அந்த மச்சத்தை எங்கே ஒளித்துவைத்திருக்கிறாய் ?'

இதைக் கேட்டதும், பாண்டியனுக்குப் பெரும் திகைப்பு, 'திடீரென்று இந்தப் புலவர் ஏன் இப்படி உளறிக்கொட்டுகிறார் ?', என்று மனதினுள் எண்ணியபடி, 'என்னாச்சு புலவரே ? திடீரென்று என்னைக் கண்ணன் என்று அழைக்கிறீர்கள் ? என் பெயர்கூட மறந்துவிட்டதா உங்களுக்கு ?', என்று புன்னகையுடன் கேட்டான்.

புலவரும் மெல்லச் சிரித்தபடி, 'நான் உங்களை அப்படி அழைத்ததில் ஏதும் தவறில்லை அரசே.', என்றார், 'தெளிந்த நீர் ஓடும் வைகை ஆற்றுக்கும், மதுரை மாநகரின் மக்களுக்கும், இந்தத் தென்னாட்டவர்கள் எல்லோருக்கும் தலைவராகிய நீங்கள், அந்தக் கண்ணபெருமானின் இன்னொரு அவதாரம்தானே.'

(அந்தக் காலப் பாண்டியனின் ராஜ்ஜியத்தில், 'உய்யலாலா' இருந்ததோ இல்லையோ, அரசனைப் புகழ்ந்து பாடி, ஜில்லென்று குளிர்ச்சிப்படுத்தும் புலவர்கள் ஏராளமாய் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது !)


கூந்தன்மா கொன்று குடம்ஆடிக் கோவலனாய்ப்
பூந்தொடியைப் புல்லிய ஞான்றுஉண்டால் யாங்குஒளித்தாய்
தென்னவனே, தேர்வேந்தே, தேறுநீர் கூடலார்
மன்னவனே மார்பின் மறு.

(கூந்தன்மா - கூந்தல் (பிடரி முடி) கொண்ட குதிரை
குடம் - ஒரு வகைக் கூத்து
கோவலன் - மாடுகளை மேய்ப்பவன்
புல்லிய - தழுவிய
ஞான்று - காலம்
உண்டால் - இருந்த
யாங்கு - எங்கே
வேந்தே - அரசனே
தேறு நீர் - தெளிந்த நீர்
கூடல் - மதுரை
மறு - மச்சம்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors