தமிழோவியம்
திரைவிமர்சனம் : குடைக்குள் மழை
- மீனா

பார்த்திபன் தன் படங்களில் கட்டாயம் வித்தியாசமாகச் செய்வார் என்று அனைவரும் சொல்லிச் சொல்லியே பார்த்திபனை ஒரு மாதிரியாக மாற்றிவிட்டார்களோ என்று நினைக்க வைக்கும் படம் குடைக்குள் மழை.

தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் பார்த்திபன், போனில் யாருடனோ பேசுகிறார். அப்போது அவர் சொல்லும் பிளாஷ்பேக்கிலிருந்துதான் கதையே துவங்குகிறது. தான் உண்டு, ஆட்டோ ஓட்டும் தன் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்ந்து வரும் பார்த்திபனை, எங்கிருந்தோ வரும் மதுமிதா துரத்தித் துரத்தி காதலிக்கிறார். அவருடைய காதலில் தன் நிலை தெரியாமல் தடுமாறும் பார்த்திபன், தன் தாயார் இறந்ததைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு காதலியின் ஆயுள் கெட்டியாக இருக்கவேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று மொட்டை போட்டுக்கொண்டு வருகிறார். அப்போதுதான் மதுமிதா தன்னை உண்மையாக காதலிக்கவில்லை என்பதும் அவ்வளாவு நாள் அவர் நடத்திய காதல் நாடகம் ஒரு டி.வி. ஷோவிற்காக என்பதும் பார்த்திபனுக்குத் தெரியவருகிறது.  அதிலும் அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மறைவாய் படம்பிடிக்கப்பட்டு டி.வி.யில் காட்டப்படும்போது மனமுடைந்து போகிறார். போதாத குறைக்கு மதுமிதாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்துதான் அவரது தற்கொலை முயற்சி.

பாதிப் படத்தில் திடீரென்று தோன்றும் தம்பி பார்த்திபன் அண்ணனையும் மதுமிதாவையும் சேர்த்து வைக்கிறேன் என்று கூறுகிறார். மதுமிதாவைப் பார்த்ததும் அவரது அழகில் மயங்கி அவரைத் தான் அடைய முயற்சி செய்கிறார். இதில் ஏற்படும் தகராறில் அண்ணன் தம்பியைக் கொன்று விடுகிறார். மேலும் மனம் மாறி மதுமிதாவையும் அவருடைய வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுவிடுகிறார். என்னடா... படம் ஒரு மாதிரிப் போகிறதே என்று கடுப்பாகும்போதுதான் அந்த எதிர்பாராத கிளைமாக்ஸ் வருகிறது. மொத்தப் படத்தையும் அந்த 10 நிமிடக் கிளைமாக்ஸ் காட்சி புரட்டிப் போட்டுவிடுகிறது.

ஆட்டோ டிரைவராக வரும் பார்த்திபன் பாந்தமாக நடித்துள்ளார் (ஒரு சில காட்சிகளில் கொஞ்சம் ஓவர் ஆக்ஷன்). தன்னுடைய நண்பர்களிடம் தனக்கு எப்படி இரங்கல் அஞ்சலி சுவரொட்டி அடிக்க வேண்டும் என்று கூறும் காட்சிகளில் அழகான பார்த்திபன் டச் தெரிகிறது. தற்கொலை செய்ய முடிவெடுத்தப் பிறகு அவர் மதுமிதாவின் தோழியிடமும் தன் நண்பர்களிடமும் போனில் பேசும் காட்சிகள் முதலில் கொஞ்சம் புரியவில்லை என்றாலும் பிளாஷ்பேக் சொல்லச் சொல்ல புரிகிறது. ஆனால் தம்பி பார்த்திபன் போடும் காட்டுக் கூச்சல்களும் அவரது நடை உடை பாவனைகளும் வெறுப்பையே ஏற்படுத்துகின்றன.

அழகான அறிமுகம் மதுமிதா. முதல் படத்திலேயே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக கடைசி பத்து நிமிடங்களுக்கு தலையைக் காட்டுகிறார் ஸ்ரீமன். மற்றபடி வேறு யாருக்கும் முக்கியத்துவம் இல்லை. படத்தில் பெரிய நட்சத்திரக் கூட்டம் ஒன்றையும் காணவில்லை. பார்த்திபன், மதுமிதா ஆகியோருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இசை கார்த்திக் ராஜா. பாடல்கள் சுமார் ரகம் தான். கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஒரு மாதிரியாக படத்தை கொண்டு சென்ற பார்த்திபன் இறுதிக் காட்சிகளில் தான் சபாஷ் வாங்குகிறார். தமிழ் சினிமா உலகிற்கு இதைப் போன்ற புதிய முயற்சிகள் தேவை என்றாலும் பார்த்திபன் போன்றவர்கள் இந்தக் கதையை இன்னமும் சிறப்பாக செய்திருக்கலாம். சாரி பார்த்திபன்...

Copyright © 2005 Tamiloviam.com - Authors