தமிழோவியம்
வானவில் : சோம்பல் கண்ட சோகம்
-

முன்பு ஒரு காலத்தில் ஒரு பெரிய ஒட்டகம் இருந்தது. அதற்கு அதனது முந்தையப் பிறவிகளைப் பற்றிய அனைத்து நினைவுகளும் இருந்தன. கடினமான விரதங்களைக் கடைபிடித்து, கடுமையான அனுஷ்டானங்களை அது மேற்கொண்டு வந்தது. அதனுடைய அருந்தவத்தை பிரும்மா பாராட்டி அதற்கு வரமளிக்க முன்வந்தார்.

பிரும்மா ஒட்டகத்தின் முன்பு தோன்றி, " நீ விரும்பும் வரம் என்ன? " என்று கேட்டார். உடனே ஒட்டகம், " படைப்புக் கடவுளே! நூறு யோசனை தூரத்திலுள்ள உணவையும் இங்கிருந்தபடியே உண்ணும் வகையில் என் கழுத்து நீளும்படி அருள் புரியவேண்டும்! " என்று கேட்டது. அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார் பிரும்மா.

அந்த வரத்தைப் பெற்ற ஒட்டகம் எங்கும் நகர்வதே கிடையாது. மேய்வதற்கு என்று வெளியே செல்வது கிடையாது. இருந்த இடத்திலிருந்தே கழுத்தை வெகு தூரம் நீட்டி உணவை உண்டு காலம் கழிக்க ஆரம்பித்தது. காலப்போக்கில் அது மிகவும் சோம்பேறியாகிவிட்டது.

ஒருநாள் அது இருந்த இடத்தில் கடுமையான புயல் காற்று வீசியது. உடனே ஒட்டகம் தன் கழுத்தை ஒரு குகைக்குள்ளே நீட்டியது. மழையும் புயலும் தொடர்ந்தன. அந்த நேரத்தில் மழையில் நனைந்தபடியே பசியால் வாடிக்கொண்டிருந்த ஒரு நரி அந்த குகைக்குள் நுழைந்தது. ஒட்டகத்தின் கழுத்தைக் கண்டதும் நரி ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தது. ஆர்வத்துடன் ஒட்டகத்தின் கழுத்தைக் கடித்து தின்ன ஆரம்பித்தது.

ஒட்டகம் கழுத்தைச் சுருக்கிக்கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் பெருந்துன்பம் அடைந்தது. அதே நேரத்தில் நரி மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒட்டகத்தின் கழுத்தை மேலும் மேலும் கடித்துக் கொன்றுவிட்டது. ஒட்டகம் தனது முட்டாள் தனமான சோம்பலால் உயிரை இழந்தது.

எனவே சோம்பேறித் தனத்தைத் தூக்கி எறியவேண்டும். ஐம்புலன்களை அடக்கி ஆளவேண்டும். இவ்வுலகில் எல்லாக் காரியங்களையும் புத்திக் கூர்மையுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் வாழ்வில் வெற்றி பெற முடியும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors