தமிழோவியம்
தராசு : பள்ளிகளில் செல்போனுக்கு தடை
- மீனா

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்லவும் பேசவும் அரசு தடை விதித்துள்ளது எனவும் இத்தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். பாராட்டப்படவேண்டிய - வரவேற்கப்படவேண்டிய அருமையான உத்தரவு !!

செல்போன்களின் மூலமாக பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியரின் கவனம் எந்த அளவிற்கு சிதறுகிறது என்பதும், பள்ளியில் செல்போன் பயன்படுத்துவது எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் நன்கு அறிவோம். செல்போன்களை வைத்திருக்கும் மாணவ மாணவியர் படிக்கும் பாடங்களில் கவனத்தை முழுமையாக செலுத்தாமல் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்புவதில் முனைப்பாக இருப்பதை ஏற்கனவே பல பள்ளிகளில் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் புதுதில்லியில் ஒரு மாணவன் சக மாணவியுடன் தான் நடத்திய காமக்களியாட்டம் முழுவதையும்  செல்போனில் படமெடுத்து அதை உலகம் எங்கும் அனுப்பிய அவலமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் நாம் அறிந்தவையே.

இதுமட்டுமல்லாது பள்ளியில் உள்ள நேரத்தில் பாடங்களில் கவனம் செலுத்தாமல் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அடுத்தவர்களுடன் செல்போனில் மணிக்கணக்காக பேசுவதாலும் தொடர்ந்து எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டிருப்பதாலும் சம்மந்தப்பட்ட மாணவர்களின் கவனம் மட்டுமல்லாது சக மாணவர்களின் கவனமும் சிதறுகிறது.

இந்த அவலங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு தற்போது கொண்டுவந்துள்ள செல்போன் தடை சட்டம் வெற்றிகரமாக செயல்பட பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்பு அரசுக்கு நிச்சயம் தேவை. போதிய ஆதரவு இல்லாது போனாலும் அரசு இந்த தடையை விலக்ககூடாது என்பதே பலரது விருப்பம். பொறுத்திருந்து பார்ப்போம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors