தமிழோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? : ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
- பத்மா அர்விந்த்

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்று நாலடியார், குறள் பற்றி சொல்வதுண்டு. ஆனால் நாம் கவனிக்காமல் விடுவது பற்களின் ஆரோகியத்தை. இந்தியாவில் குறிப்பாக பற்களை சுத்தம் செய்ய பெரும்பாலோர் வலி வரும் வரை மருத்துவர்களிடம் செல்வதில்லை. பலவித பற்பொடிகள், சிலர் வீட்டிலேயே சூடம் சாம்பல் சேர்த்து கொர கொர என்று தயாரித்த பொடி போன்றவை உபயோகித்து அதன் எனாமல் (enamel) போய் கூசும் தன்மை, அடிக்கடி வலி வரும் போதோ ஈறுகள் வீங்கி விடும்போதோ, புளியை வைத்து அல்லது கிராம்பை வைத்து கொண்டால் நிவாரணம் கிடைக்கும் என்று செய்வார்களே தவிர மருத்துவரிடம் செல்வதில்லை. இது பலவகை நோய்களுக்கு காரணமாகிறது.

Teethஆரோக்கியம் இல்லாத பற்களும் ஈறுகளும் இதய நோய் வரக்கூட காரணமாகலாம். நுண்ணிய பாக்டீரியாக்கள் பல்லின் இடையில் தங்கும் சர்க்கரை, உணவு துகளில் இருந்து பெருகி, இரத்தம் மூலம் இதயத்தை அடந்து அங்கே நோய் உண்டாக்கும். இதுபோல ஈறுகளில் ஏதேனும் பாக்டீரியாக்கள் இருந்து ஜிஞ்ஜிவைடிஸ் என்ற நோய் வந்தால், அது சைனஸ் குழாய் வழியே மூளையில் உள்ள கேவர்னஸ் சைனஸை தாக்கி மூளை காய்ச்சலை வரவழைக்க கூடும். முகம் வீங்கி, மருத்துவமனைக்கு வருவோர் உண்டு.

சிறு குழைந்தைகள் இப்போதெல்லாம் கோக் போன்ற பானகங்கள் குடிக்கும் போது அதில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் அவர்களின் பால் பற்களை கரைத்து விடுகிறது.

இலட்சணக்கான மக்கள் பல்வலியால் (சாதாரணது முதல் ஈறுகளில் புற்றுநோய்வரை) துன்பப்படுவதை கண்டால் வருத்தமாக இருக்கிறது. மனிதனுக்கு வரும் உபாதைகளில் பல்வலிதான் முற்றிலும் தவிர்க்க கூடியது.

20% சதவிகம் 2-4 வயதுக்குள்ளான குழந்தைகள் பல்லில் ஓட்டைவந்து அவதிப்படுகின்றனர். இதற்கு அவர்களுக்கு தரப்படும் மிட்டாய்களில் உள்ள சர்க்கரையே காரணம் ஆகும். 60% 15 வயதுக்குள் உள்ள குழந்தைகள்  பல்வலியால் மிகவும் துன்பப்படுகிறார்கள். இதில் ஏழை வீட்டில் உள்ள குழந்தைகள் இந்த ஓட்டைகள் சீர் செய்யப்படாமல் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் பல் மருத்துவ காப்பீடு பெறுவதில்லை. இந்த வலியால் பள்ளிக்கு சரியாக செல்ல முடியாத நிலை, முகத்தின் அழகான தோற்றம் குறைவு, சொல்லின் பேச்சின் சீரான தன்மை குறைவு, வாயில் வீசும் துர்நாற்றம் இவை ஒரு குழந்தையின் தன்னம்பிக்கையை குறைக்க வல்லன.

அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டோர் 95% பல்வலியால் துன்பப்படுகின்றனர். இதில் பலர் பற்களை இழந்து பொய்பற்கள் கொண்டு இன்னும் திண்டாடுகின்றனர். இன்னும் பலர் ஈறுகளில் வரும் உபாதை இன்ன பிறவற்றால் துன்பப்படுகின்றனர். பற்களை இழப்பது ஒரு அழகுணர்ச்சி பிரச்சினை மட்டும் இல்லை. சரியாக உச்சரிக்க இயலாமை, சில வகை உணவுகளை கடித்து உண்ண முடியாமை போன்று பொதுவான உடல் நலத்திற்கு கூட பாதிப்பு வரக்கூடும்.

இதையும் தவிர்த்து வாய், தொண்டை இவற்றில் வரும் புற்றுநோயால் வருடத்திற்கு 28,000 பேர் துன்பப்படுகின்றனர். இதில் வருடாவருடம் 7200 பேர் இறக்கின்றனர். வாயில் வரும் புற்றுநோய் இந்தியர்களை பெருமளவில் பாதிக்கிறது. பாக்கு வெற்றிலை அதிகம் உண்பதால், அதன் சாற்றை துப்பாமல் சிலர் உட்கொள்வதால், அதிக நேரம் பான் பராக் போன்றவற்றை வாயில் அதக்கி கொள்வதால் இந்த புற்று நோய் ஏற்படுவதாக அண்மையில் நியுஜெர்ஸியில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சில அறிவியலாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கடந்த வருடம் கிட்டதட்ட 78 பில்லியன் டாலர்கள் வரை பல் மருத்துவர்களுக்கு  செலவு செய்துள்ளனர், 500 மிலியன் தடவை பல்மருத்துவர்களை மக்கள் சந்தித்திருக்கின்றனர். ஆயினும் பெருவாரியான மக்கள் பற்களை சுத்தம் செய்து கொள்ள செல்வதில்லை. பல் துலக்கும் போதும் பற்களின் இடையே சிக்கி யுள்ள உணவு துகள்களை (floss) சரிவர அகற்றுவதில்லை.

கிட்டதட்ட 100 மிலியன் மக்களுக்கு சரியான ப்ளுரைடு உள்ள தண்ணீர் கிடடப்பதில்லை(www.cdc.gov).

இதை தவிர்க்க என்ன செய்யலாம்? பாஸ்பாரிக் அமிலம் உள்ள கோக் போன்ற பானங்களை குழந்தைகளுக்கு தராமல் இருக்கலாம். மேலும் பழஜூஸ் குடித்தாலோ சாக்லேட் போன்றவை தின்றாலோ உடனே பற்களை சுத்தம் செய்வது, அல்லது நீர் விட்டு கொப்பளிப்பது போன்றவற்றை செய்ய பழக்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய பழக்கலாம். செயற்கை பற்களை வெண்மையாக்கும் பெயிண்ட், gum போன்றவற்றை சுவைப்பதை நிறுத்தலாம். இது பற்களின் எனாமலுக்கு ஆபத்தானது.

அமெரிக்க நோய்களை தடுக்கும் நிறுவனம் என்ன செய்கிறது?
  மாநில மத்திய அரசு நிறுவங்களுடன் சேர்ந்து ப்ளூரைடின் அளவை சரிபார்த்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்கிறது.
  இதற்காக ஒரு இணையதளம் நிறுவி, மாநிலை அரசு தண்ணீரில் உள்ள ப்ளூரைடின் அளாவை சரிபார்க்கிறது.
  மாநில தண்னீர் தன்மையை சரிபார்க்கும் பொறியியல் வல்லுனர்கள், அதிகாரிகளுக்கு ப்ளூரைடின் தன்மை பரிசோதிக்க பயிற்சி தருகிறது.

நியுஜெர்ஸி 2010 திட்டப்படி ஒரு sealant பற்களில் போட்டு குழந்தைகளின் பற்களை பேண அரசு திட்டம் தீட்டி உள்ளது. எல்லா குழந்தைகளுக்கும் இந்த sealant போடப்படும். இது சர்க்கரை மூலம் எனாமல் கரைவதையும், பாக்டீரியா சேர்வதை தவிர்க்கவும் பயன் படும்.

மேலும் மாநில அரசு இதற்காக மான்யம் ஒதுக்கி மக்களுக்கு பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மக்களுக்கு எடுத்து சொல்ல பல  உடல்நல துறை வல்லுனர்களை பயன் படுத்துகிறது.

காப்பீடுகள் வருடம் இரண்டு முறை இலவசமாக பற்களை சுத்தம் செய்து கொள்வதை தூண்டுகிறது. அதற்காக 100% செலவையும் திருப்பி தருகிறது.

பள்ளிகளில் உள்ள செவிலிகள் இதற்காக வருடம் இரண்டு முறை பற்களின் ஆரோக்கியம் பற்றி சொல்லித்தருவதோடு, பற்களை பரிசோதிக்கவும் செய்கிறார்கள்.
ரட்கர்ஸ் பல்கலை கழகம், மாநில அரசுடன் சேர்ந்து பற்களின் ஆரோக்கியம், மற்றும் பால் அருந்துவது, பற்களை துலக்குவது, கால்சியம் சேர்த்து கொள்வதன் அவசியம் பற்றி பள்ளிகளில் பாடம் எடுக்கிறார்கள்.

ஹாலோவீனில் (Halloween) சேர்த்த மிட்டாய்களை பரிசோத்தித்த பின்னே உங்கள் குழந்தைகளுக்கு தரவும். இதில் சில பொருட்கள் ஒவ்வாமை தரக்கூடியதாகவோ, சில சிரப்புகள் செரிமானத்தை குறைக்க வல்லதாகவோ இருக்க கூடும். அதேபோல தீபாவளிக்கு செய்த இனிப்புகள் உண்னும் போதும், மறக்காமல் வாயை கொப்பளிக்க சொல்லி தாருங்கள்.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors