தமிழோவியம்
உள்ளங்கையில் உலகம் : உலகளாவிய நகர்நிலைத் தொலைத்தொடர்பு அமைப்பு - 2
- எழில்

இந்த வாரம் யு எம் டி எஸ் வலையமைப்பின் கூறுகளைக் காண்போம். படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் வலையமைப்பு அமைந்திருக்கின்றது.

UMTSவலையமைப்பில், பயனாளரின் கையிலுள்ள கைக்கருவிதான் முதல் அடிப்படைக் கூறாகிறது. பயனாளர் கருவி (User Equipment) என்று இது பெயர் பெறுகிறது. இதே கைக்கருவி ஜி எஸ் எம் வலையமைப்பில் நகர் கருவி ( Mobile Station) என்றழைக்கப்பட்டது. மூன்றாந்தலைமுறையின் பயனாளர் அட்டையை (SIM) உலகளாவிய பயனாளர் அட்டை (Universal SIM-USIM) என்று அழைக்கிறார்கள். இரண்டாந்தலைமுறை அட்டையைக் காட்டிலும் பல தகவல்களைச் சேகரிக்க இந்த யுஸிம் அட்டையைப் பயன்படுத்துவதால், வேறுபடுத்திக்காட்ட இந்தப்பெயர். தள நிலையத்துடன் தொடர்பேற்படுத்தி தகவல் பரிமாற உதவுவது இந்தக் கைக்ருவி என்பது நாம் அறிந்ததே. மேலும் ஒளித்தோற்ற அழைப்பு செய்வதற்கு ஏதுவாய் காமெரா, இணைய இணைப்பு ஏற்படுத்திப் பயன்படுத்தும் உலாவி மற்றும் பல்வேறு வகையான பயன்பாடுகளை உள்ளடக்கிய மூன்றாந்தலைமுறைக் கைக்கருவிகள் தற்போது பரவலான வரவேற்புப் பெற்று வருகின்றன.

அடுத்து வருவது, கைக்கருவி தகவல் பரிமாறத் தொடர்பு ஏற்பட்டுத்தும் தள நிலையம். ஜி எஸ் எம் வலையமைப்பில் தள நிலையம் என்றழைக்கப்பட்டது. மூன்றாந்தலைமுறை நுட்பத்தில் இது கணு B ( Node B) என்றழைக்கப்படுகிறது, இதற்கான பெயர்க்காரணம் சிறப்பாக ஒன்றுமில்லை எனினும் கணு B என்றே பொதுவாக அறியப்படுகிறது. இரண்டாந்தலைமுறை தள நிலையத்திலிருந்து வேறு படுத்திக் காட்ட இப்பெயர் தரப்பட்டிருக்கலாம். கைக்கருவியிலிருந்து வரும் தகவல்களை வலையமைப்பிற்கும், வலையமைப்பிலிருந்து கைக்கருவிக்கு வரும் தகவல்களைக் கைக்கருவிக்கும் அனுப்பி/வாங்குவது இதன் வேலை. மேலும் வானலை வளத்தை ( radio resource) கைக்கருவிகள் முறையாகப் பயன்படுத்துவதை மேலாண்மை செய்வதும் இந்தக் கணுதான்.

ஜி எஸ் எம் வலையமைப்பில் எவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தள நிலையங்களைக் கட்டுப்படுத்த , தளக்கட்டுப்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளனவோ, அதே போல் கணு B-க்களைக் கட்டுப்படுத்த மூன்றாந்தலைமுறை வலையமைப்புகளில் வானலை வலையமைப்புக் கட்டுப்பாட்டு நிலையம் ( Radio Network Controller , RNC) அமைந்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட கணுக்கள் இந்தக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கணுக்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்கும் அவற்றின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து தகவல் பரிமாற்றம் செவ்வனே நடைபெறுவதற்கும் உதவுபவை இந்த கட்டுப்பாட்டு நிலையங்களாம்.

கட்டுப்பாட்டு நிலையங்கள் அடுத்த முனையில் செல்பேசி இணைப்பகம், இருப்பிடப் பதிவேடுகள் மற்றும் ஜி பி ஆர் எஸ் கணுக்களோடு (SGSN and GGSN) இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பினை எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகின்றதா? இவை ஜி எஸ் எம் மற்றும் ஜி பி ஆர் எஸ் வலையமைப்பில் உள்ள கூறுகளே! ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் ஜி எஸ் எம் மற்றும் ஜி பி ஆர் எஸ் வலையமைப்பின் கூறுகளைப் பயன்படுத்திக் கொண்டு யு எம் டி எஸ் வலையமைப்பு மறு உபயோகம் செய்து கொள்கிறது. இதன் மூலம் புதிதாய் இணைப்பகங்களும், இருப்பிடப் பதிவேடுகளும் அமைக்கும் செலவு குறைகிறது. இவ்வாறு புதிய சேவைகள், புதிய நுட்பங்கள் பின்னாளில் ஏற்பட்டாலும் அவற்றைக் குறைந்த அளவு வலையமைப்பு மாறுபாடுகளோடு ஏற்படுத்தித் தரும் வகையில் பத்தாண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டு திட்டங்கள் மிகத் தெளிவாய்த் தீட்டப்பட்டன.

ஆக, யு எம் டி எஸ் வலையமைப்பினை மைய வலையமைப்பு (Core Network) மற்றும் அணுகு வலையமைப்பு (Access Network ) என்று இரு பகுதிகளாய்ப் பிரிக்கலாம். அணுகு வலையமைப்பு என்பது புதிதாய் அமைக்கப்பட்ட கணு- B மற்றும் வானலைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் சேர்ந்த பகுதி. இந்த அணுகு வலையமைப்பு இணைக்கப்பட்டிருக்கும் பழைய ஜி பி ஆர் எஸ் மற்றும் ஜி எஸ் எம் வலையமைப்பினை மைய வலையமைப்பு எனலாம். கவனிக்க, இந்த மைய வலையமைப்பில் (ஜி எஸ் எம் வலையமைப்பின்) தள நிலையமும் தளக்கட்டுப்பாட்டு நிலையமும் இல்லை.

சரி, அணுகு வலையமைப்பிலிருந்து மைய வலையமைப்பிற்கு எந்த வகையில் தகவல் பரிமாற்றம் நடைபெறும்? மூன்றாந்தலைமுறை வலையமைப்புகளின் முக்கிய நோக்கமே தரவு வேகத்தை அதிகப்படுத்துவதே என்று பார்த்தோம். தரவுப் பரிமாற்றம் ஏற்படுத்த ஏதேனும் அழைப்பு ஏற்பட்டால், அந்த அழைப்பினைக் கட்டுப்பாட்டு நிலையமானது மைய வலையமைப்பிலுள்ள ஜி பி ஆர் எஸ் வலையமைப்பின் பகுதியான சேவை வழங்கும் ஜி பி ஆர் எஸ் கணுவினைத் (SGSN) தொடர்பு கொண்டு , அத் தரவு அழைப்பினை ஏற்படுத்தித் தருகிறது. ஏதேனும் பேச்சுப் பரிமாற்றம் ஏற்படுத்த செல்பேசி அழைப்பு ஏற்படுத்தினால் , கட்டுப்பாட்டு நிலையமானது செல்பேசி இணைப்பகத்தினைத் தொடர்பு கொண்டு, அவ்வழைப்பினை இணைக்க முயற்சிகள் மேற்கொள்கிறது.

நாம் ஏற்கனவே ஜி எஸ் எம் வலையமைப்பில் பார்த்த பல்வேறு நுட்பங்களும் (கைமாறுதல், இருப்பிடப்பதிவு, இருப்பிடப் புதுப்பித்தல்) இங்கும் உண்டு. வானலைக் கட்டுப்பாட்டு நிலையம் (
RNC ) மைய வலையமைப்பின் பகுதிகளைக் கட்டுப்படுத்தும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து, வலையமைப்பு முறையாகச் செயல்பட உதவுகிறது. மூன்றாம் தலைமுறைக் கம்பியில்லாத் தொலைத்தொடர்புத் திட்டத்தினால் பயனாளார் பெறும் பயன்கள் என்ன என்பதைச் சென்ற பதிவில் சுருக்கமாய்க் கண்டோம். விரிவான பயன்களைக் கீழ்க்கண்டவாறு பட்டியலிடலாம்.

புள்ளியிடை சேவைகள் (Point to Point)

புள்ளியிடைச் சேவைகளில் இரு பிரிவுகள்:

1. இருவழிச் சேவைகள் பேச்சு , கலந்துரையாடல் அழைப்பு , ஒளித்தோற்றக் கலந்துரையாடல் அழைப்பு (Video Conferencing)

2. ஒரு வழிச் சேவைகள் தொலைநகல், மின் பத்திரிக்கை, தொலை மருத்துவம், மின் பதிப்பு (e-publishing) , வீட்டிலிருந்தே பொருள் வாங்கல் (Home Shopping)  அலைபரப்புச் சேவைகள் (Broadcast) செல்பேசியில் வானொலி , செல்பேசியில் தொலைக்காட்சி , விரும்பும் வண்ணம் ஒளித்தோற்றக் காட்சிகள் காணல் (Video on demand), தரவு மற்றும் பேச்சுப் பகிர்ந்தளிக்கும் சேவைகள் மற்றும் பக்கமாக்குத் தகவல்கள் ( Radio paging).

Copyright © 2005 Tamiloviam.com - Authors