தமிழோவியம்
திரைவிமர்சனம் : மழை
- மீனா

ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மற்றொரு ரீமேக் படம். மழை என்று படத்திற்கு ஒரு அழகான ஒரு டைட்டிலை வைத்துவிட்டதைத் தவிர இயக்குனர் வேறு ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. தெலுங்கில் வீசிய அதே மசாலா நெடி தான் தமிழிலும் வீசுகிறது.

'Jeyam' Ravi & Shreyaநடிகை ஸ்ரேயாவை அவரது அப்பா கலாபவன் மணி - அம்மா அம்பிகாவின் கண் முன்னாலேயே கடத்துகிறார் வில்லன் ராகுல்தேவ். நடிகை படப்பிடிப்பிற்கு வராவிட்டால் கோடிக்கணக்கில் பணம் நஷடமாகும் என்பதால் படத்தின் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் உள்துறை மந்திரியிடம் ஸ்ரேயாவை மீட்டுத்தரும்படி கோருகிறார். ஆனால் மந்திரி ராகுல்தேவை எதிர்த்து தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட, கலாபவன் மணிக்கு ஜெயம் ரவியின் நினைவு வருகிறது. ஸ்ரேயாவின் பேரைக் கேட்டதும் சீறும் ரவி பிறகு தன்னை வளர்த்த தனது சித்தப்பாவின் வைத்திய செலவுக்குப் பணம் தேவை என்ற காரணத்தால் ஸ்ரேயாவை மீட்க ஒப்புக்கொள்கிறார். ஆரம்பமாகிறது இவர்களது பிளாஷ்பேக்.

ரயிலில் சந்தித்துக் கொள்ளும் ரவி - ஸ்ரேயா இருவருக்கும் கிட்டத்தட்ட கண்டதும் காதல். ஆனால் பெயர் முகவரி போன்ற ஒரு விபரமும் தெரிந்துகொள்ளாமல் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். அதே ரயில் நிலையத்தில் ஸ்ரேயாவைப் பார்க்கும் வில்லனுக்கும் அவர் மீது கண்டதும் காதல் பிறக்கிறது. இதற்கிடையே சந்தர்ப்பவசத்தால் ரவியும் ஸ்ரேயாவும் மீண்டும் சந்திக்கிறார்கள். காதல் தொடர்கிறது.

சுத்த சோம்பேறியாக மாமியார் காசில் ஊரைச் சுற்றிக் கொண்டுத் திரியும் கலாபவன் மணிக்கு மகளின் காதல் பிடிக்காமல் போகிறது. அதே நேரத்தில் ஊரின் பிரபல தாதாவும் பணக்காரருமான ராகுல்தேவ் தன் மகளைக் காதலிப்பது தெரிந்ததும் மகளை ராகுல்தேவிற்கே திருமணம் செய்து கொடுக்க நினைக்கிறார். இதற்கு நடுவிலேயே ஸ்ரேயாவை தற்செயலாகப் பார்க்கும் இயக்குனர் சார்லியும் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜனும் அவரை ஒரு பெரிய நடிகையாக்க விரும்புவதாக கூறுகிறார்கள். பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காத கலாபவன் மணி முதலில் ஸ்ரேயாவின் மனதிலிருந்து ரவியை ராகுல் தேவ் மூலமாக விலக்குகிறார். பிறகு ராகுல்தேவிற்கு அல்வா கொடுத்துவிட்டு மகளுடன் எஸ்கேப் ஆகிறார். எஸ்கேப் ஆனவர்களைத் தொடர்ந்து வரும் ராகுல் தேவ் ஸ்ரேயாவைக் கடத்துகிறார். இப்படியாக பிளாஷ்பேக் முடிகிறது. கடத்தப்பட்ட ஸ்ரேயாவை மீட்க வரும் ரவி எப்படி ராகுல்தேவிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறார்? முறிந்து போன ரவி - ஸ்ரேயா காதல் என்னவாயிற்று என்பதுதான் மீதிக்கதை.

Jeyam Raviநாயகன் - நாயகி சந்திக்கும் முதல் சில காட்சிகளில் மழை வருகிறது. மற்றபடி படத்தின் பெயருக்கும் கதைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. ஜெயம் ரவி - நடிப்பு ஓகே. சண்டை காட்சிகளும் பரவாயில்லை. ஆனால் எத்தனை நாட்களுக்குத் தான் அந்த போரடிக்கும் ஒரே பார்முலா கதையில் தொடர்ந்து நடிக்கப்போகிறாரோ தெரியவில்லை. நூற்றுக்கணக்கான வில்லன் ஆட்களுடன் ரவி தனியாளாக மோதுவதும், வயிற்றில் கத்தி குத்து வாங்கி - ரத்தம் கொட்டும் நிலையிலும் வில்லனுடன் சண்டை போட்டு முதலில் டன் கணக்கில் உதை வாங்கி பிறகு ஜெயிப்பதும் தமிழ் சினிமாவின் சாபக்கேடான காட்சிகள்.

ஸ்ரேயா - மற்ற படங்களை விட இந்தப் படத்தில் ஓரளவு நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வில்லன் ராகுல்தேவ் அப்பாவையே கொல்லும் காட்சியில் கொஞ்சம் சுமார். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் இல்லை இவரது நடிப்பில். இறுகிப்போன முகத்துடன் படம் முழுவதும் வளைய வருகிறார். ஒருசில காட்சிகளில் மட்டுமே தலையைக் காட்டுகிறார் வடிவேலு. கலாபவன் மணியின் காமெடி கலந்த வில்லத்தனம் சுமார் ரகம். மற்றபடி படத்தில் அம்பிகா, ராஜேஷ், வெங்கட் பிரபு போன்றவர்கள் தலையைக் காட்டியிருக்கிறார்கள்.

பிரசாத்தின் இசை - தெலுங்குப் பாடலைக் கேட்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். இயக்குனர் ராஜ்குமார் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. அவற்றை ஓரளவாவது கற்றபிறகு அடுத்த படம் எடுக்க அவர் முயற்சி செய்தால் பிழைக்க வழியுண்டு. மொத்தத்தில் படத்தில் அடித்துப் பெய்யும் மழை - நம்மைப் பொறுத்தவரை சாரலாகக் கூட இல்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors