தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : கம்யூனிஸம்
- ஜெ. ரஜினி ராம்கி

இந்தியாவில் கம்யூனிஸ கருத்துக்களை கீதையிலிருந்து மேற்கொள் காட்டி விளக்கிய தலைவர் காந்திஜியாக மட்டுமே இருக்க முடியும். 'ஸர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து'  பிரபஞ்சத்தை படைத்த ஆண்டவனே அனைத்தையும் ஆளுபவனாகிறான். அனைத்திலும் அங்கமாக இருப்பதும் அவனே. அவனுடைய பாதத்தில் சகலத்தையும் சேர்ப்பித்துவிடுவோம்.

ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத் தேன த்யக்தேன புஞ்ஜீதா மாக்ருத கஸ்யஸ்வித் தனம்

நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுமளவுக்கு பொருளை நம்வசம் வைத்துக்கொண்டு மற்றவற்றையெல்லாம் மக்கள் ரூபத்திலிருக்கும் ஆண்டவனிடமே சேர்ப்பித்துவிடுவோம். கீதை சொல்லும் வழியையைத்தான் கொஞ்சம் வன்முறை முலாம் பூசி கம்யூனிஸ்ட்கள் பேசிவருகிறார்கள் என்றார் காந்திஜி. (Collected Works of Gandhiji)

முதல் உலகப்போருக்கு பின்னர் உலகெங்கம் பிடித்த கம்யூனிஸ பித்து இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ரஷ்யாவின் பொதுவுடைமைக் கொள்கையான போல்ஷிவிஸம் பற்றிதான் உலகெங்கும் பேச்சு. பொதுவுடமைக்கொள்கையில் உலகளாவிய மேம்பாடு பற்றி அழுத்தமாக வலியுறுத்தினாலும் தனிநபர் தூய்மை, வன்முறையற்ற வாழ்வு, கடவுள் மறுப்பு போன்றவற்றால் காந்திஜி போன்றவர்களால் கொள்கை ரீதியாக உடன்பட முடியவில்லை. கொள்கை, நோக்கங்களெல்லாம் சிறப்பாக இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் வன்முறையாகவும், கடவுளின் இருப்பை மறுப்பது போல இருக்கும் பட்சத்தில் அதனுடன் உடன்ட முடியாது என்பதுதான் அவரது நிலைப்பாடு.

'போல்ஷிவிஸம் ரஷ்யாவுக்கு நீண்டகாலம் நன்மை பயக்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் வன்முறையையும் கடவுள் மறுப்பையும் அடிப்படையாக கொண்டுள்ளதால் என் ஒப்புதலை பெறுவதற்கில்லை.  வெற்றிக்கான குறுக்குவழிகளில் எனக்கு நம்பிக்கை கிடையாது ' (யங் இந்தியா, 11.12.1924)

தனிநபரின் சொத்துரிமை என்கிற அமைப்பையே வன்முறையின் மூலம் சிதறடித்து உடமையின்மை என்கிற லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் பொதுவுடைமைக் கருத்துக்கள் இந்தியாவுக்கு ஒத்துவராது என்று காந்திஜி வலியுறுத்தியதால்தான் என்னவோ இந்தியா இன்றும் ஒன்றுபட்ட தேசமாக இருந்துவருகிறது. வன்முறையை அடித்தளமாக கொண்ட எத்தகைய கருத்துக்களும் வெற்றி பெற முடியாது என்பதை சிதைவுற்ற ரஷ்யா நிரூபித்துவிட்டது.

கம்யூனிஸ கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதில்தான் காந்திஜிக்கு கருத்து வேறுபாடே தவிர வன்முறையற்ற கம்யூனிஸத்தை அவர் என்றுமே ஆதரித்து வந்திருக்கிறார். பொருளாதார சமத்துவமில்லாத நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தால் அது தவறான வழியில் பயன்படுத்தப்பட்டுவிடும். வர்க்கப்போராட்டங்களில் முதலாளிகளும் ஈடுபடவேண்டும் என்பதையெல்லாம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தனது கருத்துக்களாக வெளிப்படுத்தியிருக்கிறார். தனிமனித திறமைகளை ஊக்கப்படுத்தி கூடவே ஒரு தொழிலையும் கற்றுக்கொடுக்கும் காந்திஜியின் வர்தா கல்விமுறை கார்ல் மார்க்ஸின் அறிவுக் கொள்கையுடன் ஓரளவுக்கு ஓத்துப்போனது. கார்ல் மார்க்ஸ் முன்னிறுத்தியதோ இயந்திரங்களின் மூலம் தொழில் சார்ந்த அறிவை ஏற்படுத்திக் கொடுப்பது. காந்திஜியோ சுதேசி தொழில்களை முன்னிறுத்தினார்.  (ஆதாரம் - மகாத்மா காந்தி, The lost face)

கருத்து சுதந்திரம் ரொம்ப அதிகமாகவே இருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இருக்கும் அதே பிரச்னைதான் கம்யூனிஸ்ட்கள் விஷயத்திலும். இந்தியாவில் குழுக்களாக இருந்து கொண்டு வேறு நாட்டின் கொள்கை, சிந்தாந்தங்களை பின்பற்றி அவற்றின் கட்டுப்பாட்டிலிருப்பது. கம்யூனிஸ்ட்களின் மறைமுகமாக இருந்த கரும்புள்ளி இந்தியாவின் மீதான சீனா படையெடுப்பு வரை இருந்தது. அதற்கு பின்னர் வெளிப்படையாகவே ஆகிவிட்டது. கம்யூனிஸ கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் காந்திஜியால் கம்யூனிஸ்ட்களின் செயல்பட்டை ஏற்க முடியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கவுமில்லை.

'இந்தியாவை அல்லாமல் ரஷ்யாவை தமது தாயகமாக கருதும் அவர்கள் தங்களது செயல்முறைக்கான கட்டளைகளை அங்கிருந்தே பெறுவதாக தெரிகிறது. இவ்வாறு ஒரு வெளி வல்லரசை சார்ந்துள்ள நிலைக்கு இடம் கொடுக்க என்னால் முடியாது' (ஹரிஜன், 6.10.1946)

சிவப்புத் தோழர்களின் தலையாய பிரச்னையே இதுதான். ரஷ்யா சிதைவுற்ற பின்னர் பிரச்னையின் தீவிரம் குறைந்தாலும் காந்திஜி சொல்வது போல இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு கம்யூனிஸக் கொள்கைகள் மாற்றம் பெற்றால் ஒழிய கம்யூனிஸ்களின் நிலையில் மாற்றமிருக்காது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors