தமிழோவியம்
அமெரிக்க மேட்டர்ஸ் : ஒரே வேட்பாளர் பல முறை தோன்றும் வாக்குச்சீட்டு - வேண்டுமா?
- பாஸ்டன் பாலாஜி

US election 2006அமெரிக்காவில் இன்று தேர்தல் தினம். மாஸசூஸட்சில் விநோதமான கேள்வியை வாக்காளர் முன் வைத்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து விவாதித்து முடிவு எடுப்பதற்கு சில சமயம் தாமதம் ஆகும். அதைத் தவிர்க்க பொதுமக்களே, கேள்வியை கேட்டு, 'ஆம் என்றால் இப்படி ஆட்டுங்க', 'இல்லை என்றால் தெளிவா சொல்லிடுங்க' என்று வினவுவார்கள்.

இவ்வாறு மக்களால் திட்டங்களும் சட்டங்களும் இயற்றப்பட்டாலும், ஒப்புக்கு சப்பாணிதான்! மக்கள் மன்றத்திலும் எம்.எல்.ஏ.க்களால் இன்னொரு முறை நிறைவேற்றப்பட்டாலே அவை சட்டமாக மாறும். ஆனால், ஏனோதானோ என்றில்லாமல், பத்தாண்டுகள் கிடப்பில் போடாமல், அதுவேக துரித கதியில், சட்டசபைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்களின் மனதைக் கவர்ந்த செல்ல சட்டம், உடனடியாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முடிக்கப்படும்.

பாஸ்டனை தலைநகராகக் கொண்ட மாசாசூஸட்ஸ் மாகாணத்தில் மூன்று கேள்வி கேட்கிறார்கள்.

முதல் கேள்வி வர்த்தக ரீதியானது. பலசரக்குக் கடைகளில் வைன் ஷாப்பை ஓரமாக வைத்து விற்றுக் கொள்ளலாமா? கூடாதா? அல்லது அதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கும் கள்ளுக் கடையில்தான் வைன் விற்க முடியுமா?

குடிமக்களுக்கு வைன் கடை என்றால், கல்யாணி, ஹேவர்ட்ஸ் 5000 பியர் வகையறா, மெக்டோவல்ஸ் விஸ்கி, கோல்ட் ரிபாண்ட் ஜிம், பகார்டி ரம் என்று எல்லாம் கிடைக்கும் இடம் என்பது அத்துப்படி. ஆனால், அமெரிக்காவில் வைன் என்றால், 'சைட்வேஸ்' திரைப்படத்தில் வருமே... அதுபோல், மெர்லோ, பினோ கார்ஜியோ, வைட் ஜின்ஃபேண்டல் என்று திராட்சை ரசம் மட்டுமே பொருந்தும்.

விளக்கை அணைத்தால் கட்டாந்தரையும் கட்டிலும் ஒன்றுதான் என்று வாதிடுபவர்களுக்கு, கள்ளுக்கடையும் ஒன்றுதான்; காயலான் கடையும் ஒன்றுதான். எங்கு கிடைத்தால் என்ன? கிடைச்சா சரி... எனவே, இந்த கருத்துக் கணிப்பில் பெரிதாக எனக்கு ஆர்வம் இல்லை.

அடுத்த கேள்விதான் மேட்டர் கேள்வி.

கூட்டணிக் கட்சியில் நாலு முக்கிய கட்சிகள் இருக்கிறது. எ. காட்டாக திமுக, பா.ம.க., இந்திரா காங்கிரஸ் & கம்யூனிஸ்ட். ஒவ்வொருவரும் எனக்கு இங்கே 13.4% இருக்கிறது; அங்கே 27.8% உண்டு; வடக்கே எங்க சாதிக்காரங்க 39.45% என்று புள்ளிவிவர பேப்பர் புலியாக இருப்பார்கள். உணமையாகவே இவர்களின் பலம் என்ன? எத்தனை பேர் இந்தக் கட்சியோடு கூட்டணி வைத்ததற்காக நம்ம வேட்பாளருக்கு வாக்களித்தார்கள்?

இந்த சங்கதியை அறிந்துகொள்ள வகை வகுக்கும் கேள்வி அது. ஒரு வேட்பாளரே, பல தடவை வாக்கு சீட்டில் இடம் பிடிக்கலாமா?

பத்து கட்சி கூட்டணி என்றால், விருப்பப்பட்டால், மூ.மு. கழகத்திற்காக ஒரு தபா, சிபிஐ.க்கு ஒரு தபா, சிபிஐ(எம்)முக்கு இன்னொரு தபா, காங்கிரஸ்(ஐ), தமிழ் மாநில காங்கிரஸ், வாழப்பாடி காங்கிரஸ், பொதுவுடைமை கட்சி (தா பாண்டியன்) என்று எல்லோரும் பரிந்துரைத்து, அதிக வாக்குகள் பெற்றவர் என்னும் பெயர் பெறாவிட்டாலும், அதிக தடவை வாக்குச்சீட்டில் பெயர் அச்சடித்தவர் என்னும் பெயரையாவது தட்டிச்செல்லலாம்.

இந்த முறையில் ஃபார்வார்ட் ப்ளாக் மதுரையில் அஇஅதிமுக-வையும், தேனியில் திமுக-வையும், பெரியகுளத்தில் தனியாகவும் நிற்பதற்கு டீல் போடலாம்.

குழப்ப கூட்டணிகள் மிகும் என்பது அரசியல்வாதிகளின் தலைவலி.

எந்த சின்னத்தில் ஓட்டுப் போடுவது என்பதே குழப்பமடைபவர்களுக்கு, 'மேட்ரிக்ஸ் array' போல் இத்தனாம் வரி, என்று சொல்லி பிரச்சாரம் செய்து, புரிய வைத்து, செல்லும் வாக்கு போடுவது தற்போதைய மின்னணு சாதனங்களில் கஷ்டமாக இருக்கலாம். வாக்குகளைக் கூட்டிக் கழித்தல் சிரமம் தரலாம்.

ஆனால், பெருவாரியாக படித்தவர்களைக் கொண்ட தொகுதியில் இந்த முறை வரவேற்கத்தக்கது.

பொழிச்சலூரில் மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு கொண்டு, அவர்களுக்காகப் போராடுபவரை தனி அமைப்பு ஒன்று தனி வரியாக பட்டியலில் சேர்த்து, தங்கள் பலத்தை நிரூபிக்கலாம். பொதுசனங்களை கவனியாமல், விளைநிலங்களை மட்டும் கணக்கில் சேர்த்து, விமான நிலைய அரசியல் செய்யும் கட்சியின் கவனத்தைக் கோரலாம்.

இதுபோன்ற முறைகள் ஏற்கனவே நியு யார்க் போன்ற மாற்றங்களை வேகமாக அங்கீகரிக்கும் இடங்களில் இருக்கிறது. பல கட்சி, பல கொள்கை, பல்வேறு கோரிக்கை, விருப்பங்கள் கொண்ட சிறுபான்மையினருக்கும் பெருமதிப்பைத் தரும் ஜனநாயகத்தின் அடுத்த படியாக இந்த வினாவிற்கான விடையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors