தமிழோவியம்
இது ஆம்பளைங்க சமாச்சாரம் : நாட்குறிப்பு எழுதுங்கள்
- மா சிவகுமார்

நாட்குறிப்பு  எழுதுவதால் பல பலன்கள் கிடைக்கின்றன.

1. Communication

Writing Diaryகருத்துக்களை எடுத்துச் சொல்லும் திறன் அதிகரிக்கிறது. (communication). நம்முடைய எண்ணங்களை சரியாக அணி வகுத்து பிறருக்கு எடுத்துச் செல்வதற்கான பயிற்சி தினசரி எழுதும்போது கிடைக்கிறது. எழுதும் போது கிடைக்கும் இந்த அதிகரிப்பு,  பேசும் போதும் உதவுகிறது.  வீடு, வேலை,  வெளியிடங்களில் நம்முடைய எண்ணங்களை திறமையாக வெளிப்படுத்துவதற்கு இது உதவும்.

2. மொழித் திறன் (language skills)

சித்திரமும் கைப்பழக்கம் என்பதன் படி நமது தாய் மொழியிலோ ஆங்கிலத்திலோ வளமையாக எழுத ஆரம்பிக்கும் போது மொழியறிவில் இருக்கும் பழுதுகள், சின்ன வயதில் கற்று மறந்து விட்ட இலக்கண விதிகள் கவனத்துக்கு வந்து மொழித் திறனை அதிகரிக்க உதவுகின்றன.

3.  Introspection

நாளில் நடந்ததைத் திரும்பிப் பார்த்து தவறுகளை  உணர்ந்து கொள்ள முடியும். நேரத்தை  வீணாகக் கழித்ததைப் புரிந்து கொண்டு மனதளவில் திருத்திக் கொள்ளுதல் நாட்குறிப்பு எழுதுவதன் மூலம் கிடைக்கிறது கவனத்துக்கு வந்து பிழையில்லாமல் எழுதவும், பேசவும் முடிகிறது.

4. விழிப்புணர்வு

நாளில் வேலைகளைச் செய்யும் போது இவற்றைப் பற்றி குறிப்புகள் எழுத வேண்டுமே என்ற நிதானிப்பு மனதில் ஓடிக் கொண்டேயிருக்க நம்முடைய செயல்களில் அமைதியும் தெளிவும் அதிகரிக்கிறது.

உணர்ச்சிகளில் மூழ்கி, நடப்பதற்கு எதிர்வினைகளை  செய்து கொண்டே போனால், நம் வாழ்க்கை நம் கையில் இருக்காது. விழிப்புணர்வு நாள் முழுவதும் இருந்தால் எந்த ஒரு சூழலிலும் அந்த கணத்திலிருந்து விடுபட்டு, வாழ்க்கைக்கு நல்ல பலன் கிடைக்கும் வழியைத் தேர்ந்தெடுக்க முடியும்.


5. பிறர் கருத்துக்கள்

எழுதிய நாட்குறிப்புகளை  பிறருடன் பகிர்ந்து கொண்டால், நம்முடைய செயல்களுக்கான ஒரு உரைகல் இருந்து கொண்டேயிருக்கும். படிப்பவர்களின் கருத்துக்கள் நமது குறைபாடுகளைச் சுட்டியும், நிறைகளைப் போற்றியும் நம்மை வழி நடத்தும்.

நம்மைப் பொறுத்த வரை நம்முடைய செயல்களுக்கு ஒரு மதிப்பீடு இருக்கும். சென்னையில் கிண்டியிலிருந்து மைலாப்பூர் போக நான் குறிப்பிட்ட வழியில் போகிறேன். அதுதான் சிறந்த வழி என்று எனக்குத் தோன்று பல ஆண்டுகளாக அதிலேயே  ஓடிக் கொண்டிருக்கிறேன். இன்னொருவருக்கு அதை விடக் குறுகலான வழி தெரிந்திருக்கலாம். நமது வழியை அவரிடம் சொன்னால், அவர் நம்மை  மேம்படுத்தலாம், அல்லது நம்முடைய வழி சிறந்ததாக இருந்தால் அவரும் அந்த வழியில் போக ஆரம்பிட்து விடலாம்.

6. அனுபவப் பாடங்கள்

அப்படி பிறருடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது அனுபவங்கள் அவர்களுக்கும் படிப்பினையாக இருக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

பல விஷயங்கள் மிக இயல்பானதாக வெளிப்படையானதாக நமக்குத் தோன்றுவது இன்னொருவருக்கு இன்னும் புதுமையாக இருக்கலாம். நம்முடைய வளர்ப்பு, பின்புலம், அனுபவங்களில் நாம் ஈட்டிய பாடங்கள் இன்னொருவருக்குக் கிடைக்காமலே இருந்திருக்கலாம்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors