தமிழோவியம்
ஜோதிட விளக்கங்கள் : ஜனன கால இருப்பு திசை
- ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

ஜாதகத்தில் இருப்பு தசை என்று ஒன்று போட்டு இருக்கிறார்கள். அதை வைத்துத்தான் தற்போது நடக்கும் தசா, புக்தியைக் கணக்கிடுகிறோம்.  இதிலே சிலருக்கு ஐயப்பாடு ஒன்று வருகிறது.  நாம் பிறக்கும் ஊருக்குத் தகுந்தாற்போல் தசா, புக்திகள் மாறுமா ? ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பிறந்தவர்களின் ஜெனன கால இருப்பு தசை, புக்தி ஒரே மாதிரி இருக்குமா? அல்லது மாறுபடுமா?

முதலில் "ஜெனன கால இருப்பு தசை என்றால் என்ன?" என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  சந்திரனானவர் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சுமார் ஒரு நாள் சஞ்சாரம் செய்கிறார்.  ஒரு குழந்தை பிறக்கும்போது ஒரு நட்சத்திரத்தில் பாதி சஞ்சாரம் செய்து இருக்கலாம். மீதிப் பாதி இன்னும் சஞ்சாரம் செய்ய வேண்டியது இருக்கும். இன்னும் சஞ்சாரம் செய்ய வேண்டிய மீதி தூரம்தான் ஜனன கால இருப்புதசை ஆகும். உதாரணமாக பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் எனக் கொள்ளுங்கள். பரணி நட்சத்திரத்தில் குழந்தை பிறக்கும்போது முக்கால் பகுதி சஞ்சாரம் செய்து விட்டார் என்றும் இன்னும் கால் வாசி தூரம் கடக்க வேண்டும் எனவும் கொள்ளுங்கள். பரணி நட்சத்திரத்திற்குண்டான இருபது ஆண்டுகளில் முக்கால் பங்கான 15 ஆண்டுகள் கழிந்து விட்டது. மிச்சம் உள்ள 5 ஆண்டுகளே ஜெனனகால இருப்பு தசை ஆகும். இது ஊருக்கு ஊர் மாறுமா ? என்பது தான் நமது கேள்வி.

ஆகாய மண்டலத்தில், அதாவது 12 ராசிகள் உள்ளடங்கிய நீள் வட்டத்திற்கு நடுவில் நமது பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது அல்லவா? பூமிக்கு அப்பாற்பட்ட ராசி மண்டலத்தில் சந்திரன், நட்சத்திரத்தின் மீது சஞ்சாரம் செய்யும்போது இந்த இருப்புதசை கணக்கிடப் படுகிறது.  பூமிக்கும், சந்திரன் நட்சத்திரத்தின் மீது சஞ்சாரம் செய்வதற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை அல்லவா ? ஆகவே இந்த பூமியில் எந்த நாட்டில் பிறந்தாலும், எந்த ஊரில் பிறந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஜெனன கால இருப்பு தசை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இருக்க வேண்டும். மாறினால் அது தவறுதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors