தமிழோவியம்
தராசு : ஆருடம் சொன்னால் போதுமா?
- மீனா

Rain waterபல மாதங்களுக்கு முன்பாகவே தமிழக முதல்வர் "இந்த பார்த்திப ஆண்டு நல்ல மழை உண்டு.." என்று பல மேடைகளிலும் முழங்கித் தள்ளினார். அவர் கூறியது நிஜமானது. போதும் போதும் என்ற அளவிற்கு மழை தமிழகமெங்கும் கொட்டிக் கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இவ்வளவு கன மழை என்று அனைவரும் வியக்கிறார்கள். மழை நீர் சேகரிப்புக்காக அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் ஒழுங்காக செய்து முடித்துவிட்டது. மழை நீர் எல்லாவற்றையும் நாம் சேமிக்க ஆரம்பித்துவிட்டோம். தண்ணீர் தட்டுப்பாடு இனி இல்லை. ஒவ்வொரு வருடமும் தண்ணீருக்காக கர்நாடகா, ஆந்திரா என்று ஒவ்வொரு மாநிலமாக நாம் கையேந்திக் கொண்டிருக்கும் நிலை மாறி இந்த வருடமாவது யாரிடமும் தண்ணீர் பிச்சைக் கேட்காமல் நம் மாநில குடிநீர் தேவைகளை நம்மாலேயே சமாளிக்க முடியும் என்று அப்பாவி தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நிஜத்தில் நடந்தது என்ன? பிரமாதமாக மழை வருவதைப் பற்றி ஜோசியம் சொன்ன முதல்வர் தேவையான அளவிற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாரா? மழை நீரை நாம் உண்மையிலேயே சேமித்து இருக்கிறோமா என்றால் பதில் இல்லை என்பதுதான். சென்னை உள்பட மாநிலத்தின் பல இடங்களும் வெள்ளக்காடாய் காட்சி அளிப்பதற்கு முக்கிய காரணம் தேவையான அளவிற்கு சாலை மற்றும் வெள்ளப் பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்ளாததும் மழை நீர் சேமிப்பை அரசே சரியாக கடைபிடிக்காததும் தான். ஏதோ பெரிய மனது வைத்து முதல்வரே சென்னையின் பல பகுதிகளுக்கு மேற்கொண்ட விஜயத்தால் சாலைகள் ஓரளவிற்கு சரியானதே ஒழிய நகரின் பல பகுதிகள் இன்னமும் வெள்ளத்தில் மிதந்துகொண்டுதான் இருக்கின்றன. வெள்ளம் - மழை இரண்டும் மக்களை மிரட்டுவது மட்டுமன்றி வெள்ள நிவாரணம் வாங்கச் சென்றவர்களில் 6 பேர் நெரிசலால் மரணமடைந்த செய்தி வேறு நாளிதழ்களில் முதல் பக்கத்தில் மிரட்டிக்கொண்டிருக்கிறது.

அரசாங்கம் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை சரியாக செயல்படுத்தியிருந்தால் இவ்வளவு நாசங்கள் நகரில் விளைந்திருக்காது என்று கூறும் சமூக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களாக பெய்த மழை நீரில் கிட்டத்தட்ட 70 சதவீதம் நீர் வீணாக கடலில் கலந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் தெருவிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று பார்த்துக் கொண்டிருப்பது முதல்வரால் இயலாத வேலை. அதற்காகத்தான் அரசாங்கமும் அரசு அலுவர்களும் இருக்கிறார்கள். உண்மை.. ஆனால் கொடுக்கப்பட்ட வேலையை (மழை நீர் சேகரிப்பு மற்றும் சாலை பராமரிப்பு) அரசு அலுவலர்கள் - பொதுஜனமாகிய நாம் என்ற இருசாராரும் சரியாக செய்யாததன் விளைவுகளைத் தான் நாம் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

மொத்தத்தில் இயற்கையே நமக்கு மனமுவந்து அளித்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நாமும் அரசாங்கமும் தவறிவிட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை. தண்ணீரைக் கோட்டை விட்டதுடன் பலரது வாழ்க்கையை கண்ணீரில் கரைய விட்டுவிட்டோம் என்பதை அரசு எப்போது உணரும்? பாதிக்கப்பட்ட நாம் எப்போது உணர்வோம்? உணர்ந்த பிறகாவது ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா - எடுப்போமா? இல்லை வழக்கம் போல அடுத்த ஆண்டும் தண்ணீருக்காக நாம் அண்டை மாநிலங்களுடன் மல்லுக்கு நிற்க வேண்டியதுதானா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors