தமிழோவியம்
திரைவிமர்சனம் : குண்டக்க மண்டக்க
- மீனா

எல்லாப் படங்களிலும் காமெடி இருக்கும் - கதையோடு சேர்ந்து. ஆனால் கூட்டணி நகைச்சுவையில் பிரபலமான பார்த்திபன் - வடிவேலுவின் காமெடியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் குண்டக்க மண்டக்க.

Parthiban and Vadiveluசொல்லிக்கொள்ளும் படி ஒரு வேலையுமே இல்லாத - தன்னுடைய பணக்கார காதலி லஷ்மிராய்யிடமிருந்து டெலிபோன் கட்டணம் உள்ளிட்ட தன் சொந்த செலவுகளுக்கே பணம் வாங்கும் ஆளான பார்த்திபனின் வாழ்க்கை லட்சியமே தன்னுடைய தங்கை மல்லிகாவிற்கு ஒரு கோடீஸ்வர மாப்பிள்ளையைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான். இவருடைய லட்சியத்தை நிறைவேற்ற கூட்டாளியாக வந்து சேர்கிறார் வடிவேலு. ஒரு சாமியார், ஒரு ஆட்டோ டிரைவரை(அம்ருத்) கோடீஸ்வரன் என்று சொன்ன காரணத்தால் பார்த்திபன் அவரை தன் வீட்டு மாடியில் குடிவைக்கிறார். எப்படியாவது மல்லிகா - அம்ருத் கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டும் அதற்கு மல்லிகாவிற்கு அம்ருத் மீது நல்ல எண்ணம் தோன்றவேண்டும் என்று நினைத்து ஏகப்பட்ட பிளான் போடுகிறார்கள் பார்த்திபன் - வடிவேலு இருவரும். முதலில் பார்த்திபனின் எண்ணத்திற்கு பிடிகொடுக்க மறுக்கும் மல்லிகா ஒரு கட்டத்தில் அம்ருத் ஒரு ஏழை - பெரிய குடும்பத்தை தனியாளாக சுமப்பவர் என்ற உண்மை அறிந்து அம்ருத்தை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் உண்மை தெரிந்த பார்த்திபன் இருவரையும் பிரிக்க நினைக்கிறார். இதற்கிடையே லஷ்மிராயின் பெற்றோர்கள் மகளின் காதலை எதிர்க்கிறார்கள். இரண்டு காதல் ஜோடிகளும் எதிர்ப்புகளை மீறி சேர்ந்தார்களா இல்லை பிரிந்தார்களா என்பதுதான் மீதிக்கதை.

கதை - லாஜிக் என்பதே துளிக்கூட இல்லாமல் வெறும் காமெடியை மட்டும் நம்பி படமெடுத்தால் எப்படி இருக்கும் என்பதற்கான நல்ல உதாரணம் குண்டக்க மண்டக்க. பார்த்திபன் வடிவேலு கூட்டணியை மட்டுமே நம்பி படமெடுத்துள்ளார் இயக்குனர் அசோகன் என்றால் அதில் கொஞ்சமும் மிகையில்லை. சில புதிய காமெடி - சில புளித்துப்போன காமெடி என்று கலந்துகட்டி ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள் பார்த்திபன் - வடிவேலு இருவரும். பார்த்திபன் வழக்கம் போல சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சி செய்ய - வடிவேலு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஜனங்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார். பார்த்திபன் கதாநாயகன் என்பதால் அவருக்கு டூயட், பைட் என்று சில காட்சிகள்.. மற்றபடி பார்த்திபன் - வடிவேலுவைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை.

காதலியாக பொம்மை போல வருகிறார் லஷ்மிராய் (வார்த்தைக்கு வார்த்தை பார்த்திபனை வாடா போடா என்பது ரொம்ப ஓவர்..) மல்லிகாவிற்கு வழக்கம்போல தங்கையாகவும், கலைராணிக்கு அம்மாவாகவும் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார்கள். தட்ஸ் ஆல். படத்தில் வனிதா, மதன்பாப் போன்றவர்களும் இருக்கிறார்கள்.  

பரத்வாஜ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். மொத்தத்தில் இப்படிப்பட்ட கதையை நம்பி படமெடுத்த தயாரிப்பாளருக்கு தைரியம் ஜாஸ்தி.

Copyright © 2005 Tamiloviam.com - Authors