தமிழோவியம்
கட்டுரை : வந்துட்டாரய்யா!! வந்துட்டாரய்யா!!!
- மீனா

ஒரு வழியாக உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து புஷ் மறுபடியும் அதிபராக தேர்வாகியுள்ளார். அமெரிக்கா சரிபாதியாக கொள்கை அளவில் வேறுபட்டு நிற்பதை இத்தேர்தல் தெளிவாகக் காட்டினாலும் இன்னும் 4 வருடங்களுக்கு புஷ்ஷ¤ம், அவரது நிழலாக செயல்படும் அவரது அப்பாவும், மற்ற மந்திரிப் பிரதானிகளும் வைத்ததே சட்டம் என்ற நிலை மீண்டும் வந்தாகிவிட்டது. மத்தியப் பகுதிகளில் வாழும் அமெரிக்க மக்கள் எந்த அளவிற்கு புஷ்ஷின் தீவிரவாதத் தாக்குதல் மிரட்டல்களுக்கு பயந்துபோய் இருக்கிறார்கள் என்பதை இத்தேர்தல் தெளிவாக விளக்குகிறது. அதே நேரத்தில் படித்த, பொருளாதாரத்தைப் பற்றிக் கவலைப்படும் மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட புஷ்ஷிற்கு எதிராகவே வாக்களித்துள்ளார்கள்.

சில நாட்களுக்கு முன்பாக ஒசாமா பின்லேடன் அல்ஜசிரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், " அமெரிக்காவை அழிப்பதையே நான் குறிக்கோளாக வைத்துள்ளேன். அதற்காக 2 விதங்களில் செயல்பட்டு வருகிறேன் " என்று குறிப்பிட்டுள்ளான். ஒசாமா அமெரிக்காவின் மீது இரண்டு விதமானத் தாக்குதல்களை நடந்தி வருவதாக அந்த பேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஒன்று அமெரிக்கா மீதான நேரடித்தாக்குதல். அதை அவர்கள் செப்.11 அன்று செயல்படுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது மறைமுகமான - பொருளாதாரத்தைக் குறிவைத்துத் தாக்குவது. அதாவது செப்.11 ஆம் தேதி நடந்த இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு ஒசாமாவின் இயக்கத்தினர் செலவழித்தது வெறும் $500,000 மட்டுமே. ஆனால் அதற்குப் பிறகு புஷ் தொடுத்ட ஆப்கான் மற்றும் ஈராக் படையெடுப்பிற்காக இன்று வரை அமெரிக்கா $500 பில்லியன் செலவு செய்துள்ளது.. இதற்கு மேலும் செலவு தொடரும். ஏனெனில் ஈராக் மீதான தாக்குதல் புலிவாலைப் பிடித்த கதைதான். விடமுடியாது. ஆக பொருளாதாரத்தை சிதைப்பதன் மூலம் ஒசாமா தனது தாக்குதல்களை மறைமுகமாகத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறான்.

ஏறுமுகமாகவே இருந்த அமெரிக்க பொருளாதாரம் இறங்க ஆரம்பித்தவேளையில் புஷ்ஷின் இந்தத் தாக்குதல்கள் ஒருசில தனிப்பட்டவர்களின் கஜானாவை மட்டுமே நிரப்பிவருகிறதே தவிர சாமான்ய மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. மேலும் இந்தப் படையெடுப்புகளின் காரணமாக அமெரிக்காவின் மீது தீவிரவாதிகளின் கோபப்பார்வை தீவிரமடைந்துள்ளதே தவிர தீவிரவாதிகள் யாரும் பயந்துபோய்விடவில்லை. புஷ்ஷ¤ம் அவரது குடும்பமும் அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பாய் உட்கார்ந்துகொண்டிருக்க, ஈராக்கிலும் ஆப்கானிலும் ஏராளமான போர்வீரர்களும் அப்பாவி பொதுஜனமும் தினமும் உயிரை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் மறந்துவிட்டு பாதிக்குப் பாதி அமெரிக்க மக்கள் இன்னமும் புஷ்ஷை நம்பிக்கொண்டிருப்பதுதான் பரிதாபமாக இருக்கிறது. இனி என்ன நடக்கும்? தன்னை ஒரு போர் ஜனாதிபதி என்று சொல்லிச் சொல்லியே ஓட்டு வாங்கிய புஷ் உலகில் மீதி இருக்கும் எண்ணெய் வளம் மிக்க நாடுகள் அனைத்தின் மீதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி என்ற பேரில் போர் தொடுப்பார். தன்னால் முடிந்த அளவு உலக மக்கள் தொகையைக் குறைக்க வழிசெய்வார். அவரது சொந்த கஜானா நிறையவே நிரம்பும். ஐ.நா உள்பட எந்த அமைப்பும் அவரைத் தட்டிக் கேட்க இயலாமல் கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கைப் பார்க்கும். இவரது முட்டாள்தனமான நடவடிக்கைகளால் ஆத்திரமடையும் தீவிரவாதிகள் அமெரிக்காவின் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள். நித்ய கண்டம் பூர்ணாய்சு என்ற ரீதியில் அமெரிக்க மக்கள் பயத்தில் செத்து செத்து பிழைப்பார்கள். அமெரிக்கப் பொருளாதாரம் இன்னும் தள்ளாடித் தள்ளாடி கீழே விழும்.

மேற்கூறியவை நடக்காமல் கடவுள் அருளால் புஷ் மனம் திருந்தி நல்லாட்சித் தந்தால்.. போர் இல்லாமல், அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர் தூக்குகிறேன். உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குறைவின்றி செய்கிறேன். விலையேற்றத்தைக் கட்டுக்குள் வைக்கிறேன். வேலைவாய்ப்பை பெருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கிறேன்... இப்படி எல்லாம் சொன்னால்.. சொன்னதைச் செய்துகாட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஏதோ ஒரு நப்பாசைதான்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors