தமிழோவியம்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள் : எழுபது வயது இளைஞர் !
- ஜெயந்தி சங்கர்

ஓய்வூதியமும் இல்லாமல், முதுமையிலும் பொருளீட்டவேண்டிய கட்டாயம் ஒரு பலருக்கு இங்குண்டு. ஒருசிலரோ சுறுசுறுப்பாக இருக்கவேண்டியாவது தொடர்ந்து வேலைசெய்ய எண்ணம் கொள்கின்றனர்.

ஜூலை 22 ஆம் தேதி  'தி எலெக்ட்ரிக் பேப்பர்' என்ற உள்ளூர் ஆங்கில நாளிதழில் வந்த செய்தி  69 வயதான ஒரு டாக்ஸி ஓட்டுநரைப் பற்றியது. வரும் நவம்பர் 20 ஆம் தேதி அன்று திரு க்வேக் ஹை யோங்க் என்ற டாக்ஸி ஓட்டுனருக்கு 70 வயதாகி விடும். அன்றிலிருந்து சட்டப்படி அவர் டாக்ஸி ஓட்டக்கூடாது. மருத்துவச் சோதனைக்குப்பிறகு பொதுமக்களில் ஒருவராகக் கார் வேண்டுமானால் ஓட்டலாம். ஆனால், டாக்ஸி மட்டும் ஓட்டமுடியாது. சிங்கப்பூரில் 70 வயதுக்கு மேற்பட்ட 23,000 க்ளாஸ் 3 உரிமம் பெற்ற பொதுமக்கள் இருக்கிறார்கள் என்கிறது போக்குவரத்துக் காவல்துறை.

ஜூன் மாதம் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவச்சோதனையை மேற்கொண்டார் திரு க்வேக். திருப்திகரமாக இருந்தது அதன் முடிவுகள். அது போதாதா நான் தொடர்ந்து டாக்ஸி ஓட்ட என்பதே திரு க்வேக்கின் வாதம். "நான் 69 வயதானவன் என்றாலும் பார்க்க 49 வயது ஆளைப்போலத்தான் இருக்கிறேன்", என்று நம்பிக்கையோடு சொல்கிறார் இவர். "தவிர, எனக்கு இந்த வேலை அவசியம் தேவை, தெரியுமா", என்று கேட்கும் இவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

திரு க்வேக் தன் மனைவியைப் பராமரிக்கவேண்டியுள்ளது. 2002 ஆம் வருடம் பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டு அப்போதிலிருந்தே சக்கரநாற்காலியில் இருக்கிறார். மருத்துவச்செலவுகளில் மத்திய சேமநிதி (CPF- Central Provident Fund) கரைந்துவிட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் நிலவரப்படி அவரின் மத்திய சேமநிதிகணக்கில் $314.74 மட்டுமே (ஓய்வூதியக்கணக்கில்) இருக்கிறது. இனி வேலை போனதுமே மருத்துவ உதவியும் போய் விடும். இதுதவிர முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் 94 வயதுத்தாயிற்கு மாதமாதம்
அவர் கொடுக்கும் $100 யையும் கொடுக்கமுடியாது. திரு க்வேக்கு நான்கு மக்களிருக்கிறார்கள். எல்லோரும் அவரவர் வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்கள். அவரவர் குடும்பத்தைக் கவனிக்கவே அவர்களுக்குச் சரியாக இருக்கிறதாம். டாக்ஸி ஓட்டியே பிழைத்த தன் அப்பாவிற்கு வேறு வேலை செய்யவராது என்றும், அவரால் தொடர்ந்து நன்றாகவே டாக்ஸி ஓட்டமுடியும் என்றும் அவரது மகள் சொல்கிறார். பெயர் குறிப்பிடவிரும்பாத அவரது மகள், தங்களிடம் சேமிப்பு ஒன்றும் இல்லை என்றும் சொல்கிறார். அலுவலகத்தில் க்ளார்க்காக இருக்கும் இவருக்கு இரண்டு மகள்களுண்டு. இவரது கணவர் ஒரு பொறியாளர். குடும்ப வருமானம் $4000, பணிப்பெண்
வைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரு க்வேக் தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்கிறார் திடமாக.

செக்யூரிடியாகவோ பெட்டிக்கடை வைத்தோ பிழைக்கலாம் தான். ஆனால், டாக்ஸி ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் நிச்சயம் அதிகம் என்பதுடன் மனைவியைக் கவனித்துக்கொள்ளக் கணிசமான நேரமும் கிடைக்கும் என்கிறார் திரு க்வேக். திங்கள், புதன் மற்றும் வெள்ளிகளில் மதியம் மூன்றிலிருந்து நள்ளிரவு வரை டாக்ஸி ஓட்டுகிறார். செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஞாயிறுகளில் பகல் முழுவதும் ஓட்டுகிறார்.

நீண்டநேர வேலையும், வாகனமோட்டும் சிரமமும் 70 வயதைக்கடந்தவருக்கு அதிகம். ஆகவே திரு க்வேக் சட்டப்படி வேலையை விடவேண்டும் என்கிறது போக்குவரத்துக்காவல்துறை.

ஜூன் 30 ஆம் தேதி நிலவரத்தின் படி 70 வயதிற்கும் மேற்பட்ட முன்னாள் டாக்ஸி ஓட்டுநர்கள் சுமார் 22900 பேர் இருக்கிறார்கள். இவர்கள் க்ளாஸ் 3 உரிமத்திற்குத் தகுதியுடையவர்களே. இருப்பினும், சுகாதார அமைச்சு டாக்ஸி ஓட்டுநர்களின் அதிகபட்ச வயதைத் தீர்மானித்தது அந்த ஓட்டுநரின் நலனைக்கருத்தில் கொண்டு மட்டுமல்ல. டாக்ஸி பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மற்ற சாலைப்பயனீட்டாளர்களின் பாதுகாப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு தான். அதிகபட்ச வயதை நிர்ணயிக்கும்போது, பொதுமக்களின் பாதுகாப்பே முதன்மையானது என்கிறார்கள் சுகாதார அமைச்சு மற்றும் போக்குவரத்துப் போலிஸ்துறையினர். தவிரவும் 60 வயதிற்குப்பிறகுதான் பொதுவாக அதிக எண்ணிக்கையில் மக்களுக்கு நரம்பு தொடர்பான நோய்கள் வருகின்றன. உதாரணமாக, அல்சைமர், ஸ்ட்ரோக் என்னும் பக்கவாதம், பார்கின்ஸன்ஸ் போன்ற வியாதிகளைச் சொல்லலாம்.

தன் வாகனமோட்டும் உரிமத்தை (vocational licence) நீட்டிக்க போக்குவரத்துக்கழகத்திடம் மேமாதம் விண்ணப்பித்தார் திரு க்வேக். அதுதவிர தான் பணிபுரியும் 'கம்·பர்ட் ட்ரான்ஸ்போர்ட்டோஷன்' மானேஜரிடமும் வேண்டினார். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. டாக்ஸி ஓட்டுநர் கழகத்தின் அதிபர் ஒன்றும் செய்ய முடியாது, சட்டம் அப்படி, நாங்கள் என்ன செய்ய என்கிறார். ஆனாலும் திரு க்வேக்குச் சாதகமாக ஏதும் நடந்தால் மகிழ்ச்சிதான் என்கிறார் இவர்.

தன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருடாவருடம் புதுப்பிக்கும் வகையில் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் திரு க்வேக். தனக்காகவும் மற்றவருக்காகவும் திரு க்வேக் கொடுத்திருக்கும் குரல் அவரது துணிவைக்காட்டுகிறது என்கிறார் அவரது மகள். எல்லோருமே அவரது கோரிக்கையை அரசாங்கம் செவிமடுக்கும் என்றே காத்திருக்கிறார்கள்.

தேசியசேவையில் இருக்கும் 20 வயது இளைஞர் திரு ப்ராண்டன் லோ வயதானவர்களுக்கு சட்டென்று செயல்படும் திறனும் குறையும், வாகனமோட்டுவது உடல் மற்றும் மனரீதியாக மிகவும் சிரமமாக இருக்கும், ஆகவே இவர்கள் சாலைகளில் வாகனங்களைச்செலுத்தக்கூடாது என்கிறார். திரு எரிக் கோங்க் என்னும் 27 வயதுடைய இராணவ அதிகாரி ஒருவர், "உடலாரோக்கியம் இருக்கும் பட்சத்தில் இத்தகையோரை வாகனம் ஓட்ட அனுமதிக்கலாமே" என்கிறார்.

65 வயதான இன்னொரு டாக்ஸி ஓட்டுநர் திரு. லீ கட் வீ என்பவரும்கூடத் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தன் கண்பார்வை சரியாக இருப்பதாகவும், தானும் 70 வயதுக்கு மேலும் டாக்ஸி ஓட்டவே விரும்புவதாகவும் சொன்னார். இளம் ஓட்டுநர்கள் இரக்கப்படுகிறார்கள். 30 வயது திரு. ஷாவன் சோ, "இப்போதெல்லாம் வாழ்க்கை மிகவும் கடினம். சம்பாதிப்பது எளிதல்ல. ஆயுள் காப்பீடுகள் கூட இவ்வயதினருக்குச் சாதகமாயில்லை. ஆதலால், மருத்துவச் சோதனைகளில் தேறினால், இத்தகையோரையும் டாக்ஸி ஓட்ட அனுமதிக்கலாம்", என்கிறார்.

தென்மேற்குச் சமூகமன்றத்தின் பொதுநலத்துறையின் உதவியை நாடியுள்ளார் திரு க்வேக். அவரது விண்ணப்பத்தை மேலிடத்திற்கு அனுப்புமுன் தன் மனைவி மக்களின் விவரங்கள், தான் தனியாக மனைவியோடு இருப்பதற்கான அத்தாட்சி போன்றவற்றைக் கேட்டனர். உடனே தன் விண்ணப்பத்தை வாபஸ் வாங்கிவிட்டார் திரு க்வேக். ஏனென்று கேட்டதற்கு "என் குடும்பத்தினரை இதில் இழுக்க விரும்பவில்லை", என்றார்.

திரு க்வேக்கின் நிலைமை 'ஓய்வுகாலத்திற்கான திட்டம்' எவ்வளவு இன்றியமையாதது என்றே காட்டுகிறது என்றார் டாக்ஸி ஓட்டுநர் கழக அதிபர். ஆகவே சிங்கப்பூரர்களிடையே சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி ஊக்குவிக்க வேண்டும் என்றார். முதுமையைச்சமாளித்தல், நெருக்கடியைச்சமாளித்தல் போன்றவற்றை இவர்களுக்குக் கற்பிக்கவேண்டியதன் தேவையையும் வலியுறுத்தினார். சேமிப்பு இல்லாவிட்டால் குடும்பத்தினரிடமும் உதவி கேட்கமுடியாமல், உழைத்துப் பொருளீட்ட முடியாத முதுமைக் காலத்தில் மிகவும் சிரமப் படுகிறார்கள். சமூக நற்பணிமன்றங்கள் உதவிகரம் நீட்டினாலும்கூட இந்த மக்களுக்கு முதுமைக்கென்று சேமிப்பு மிகமிக அவசியம் என்றார் அவர்.

கொடிது கொடிது வறுமை கொடிது, அதனினும் கொடிது முதுமையில் (இளமையில்) வறுமை !

Copyright © 2005 Tamiloviam.com - Authors