தமிழோவியம்
காந்தீய விழுமியங்கள் : கூட்டுறவு
- ஜெ. ரஜினி ராம்கி

ஒற்றுமையின் பெருமையை வலியுறுத்திய இரண்டாம் கிளாஸ் கதை ஞாபகத்துக்கு வருகிறது. யார் பெரியவர் என்கிற போட்டியில் கை, வாய், கண் போன்ற அவயங்கள் ஸ்டிரைக் பண்ணியதால் சாப்பிட முடியாமல் ஒருவன் மயக்கமடைவதாக ஒரு கற்பனை கதை. உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளுமே ஒன்றையொன்று சார்ந்துதான் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் கதையை சின்னவயசில் நீங்களும் படித்திருப்பீர்கள். ஆனால், காந்திஜிக்கு ஒற்றுமை என்றவுடன் ஞாபகத்துக்கு வருவது ஒரு ஆங்கில நாவல். ராபின்ஸன் குருஸோன்னு ஒரு கேரக்டர். யாரையும் சார்ந்து இருக்காமல் எல்லாவற்றையும் தானே செய்துகொண்டு 'ஓன் மேன் ஷோ' காட்டும் டேனியர் டெ·போ§வின் ஆங்கில நாவலில் வரும் காரெக்டர். குருஸோவின் கேரக்டர் கதையில் மட்டுமே சாத்தியம் என்பார் காந்திஜி. தனிநபர் சுதந்திரம் இருக்கவேண்டியதுதான் அதற்காக மற்றவர்களை சாராமல் நம்மால் இருக்க முடியாது என்பதை அவர் சொல்லிவந்தவர். சொந்த காலில் நிற்கவேண்டும் என்று எல்லோரும் நினைத்தாலும் அது அடுத்தவரின் உதவியால் மட்டுமே சாத்தியமாகிறது என்பதும் உண்மைதானே.

'மனிதன் ஒரு சமூகப்பிராணி. சமூகத்தோடு எந்தவித உறவுமின்றி அவன் பிரபஞ்சத்துடன் ஐக்கியத்தை உணர முடியாது. 'நான்' எனும் அகம்பாவத்தை அகற்றிவிட இயலாது. அவனுடைய சமுதாயச் சார்பு அவனுடைய நம்பிக்கையை சோதனை செய்து கொள்வதற்கும் உண்மை உரைக்கல்லால் தன்னையே அளந்து கொள்வதற்கும் உதவுகிறது' (யங் இந்தியா 13.5.1926)

சரி, மற்றவர்களை சார்ந்திராமல் நம்மை ஒரு நல்ல நிலைமைக்கு உயர்த்திக்கொள்ளமுடியுமா? முடியவே முடியாது என்று காந்திஜி சொல்லிவிடவில்லை. நல்ல நிலைமைக்கு உயர்ந்துவிடலாம். ஆனால், அது அவனுக்கு வேண்டுமானால் நல்லது; நாட்டுக்கு நல்லதல்ல என்கிறார். அதற்கு காந்திஜி சொல்லும் காரணம், மற்றவர்களின் உதவியின்றி நல்ல நிலைக்கு வருபவன் கர்வமிக்கவனாகவும் செருக்குடையவனாகவும் மாறி உலகிற்கு உண்மையிலேயே சுமையாக மாறிவிடுவான் என்கிறார்.

பொதுசேவையில் எல்லா மக்களும் ஈடுபடுவேண்டும் என்றால் முதலில் மக்கள் கூட்டறவுடன் வாழவேண்டும் என்கிற கருத்தாக்கத்தை செயல்பாட்டுக்கும் கொண்டுவந்தவர் காந்திஜி. எந்த சேவையாக இருந்தாலும் முதலில் கூட்டாக ஒரு அமைப்பின் கீழ் செய்வதுதான் நல்ல பலனை தரும் என்பார்.

'வெற்றிகரகமான கூட்டுறவு முயற்சியின் ரகசியம் அதன் உறுப்பினர்கள் நேர்மையாக இருப்பதிலேயே அடங்கியிருக்கிறது. அவர்கள் கூட்டுறவின் மகத்துவத்தை பற்றி தெரிந்திருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு குறிக்கோள் இருந்தாகவேண்டும். கூட்டுறவோடு முதலீடு செய்து வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வரம்பு கடந்த விகிதங்களில் வட்டி வசூலித்து அதிக அளவு பணத்தை உருவாக்கிவிடுவது மோசமான குறிக்கோளாகும்'  (ஹரிஜன், 6.10.1946)

இந்தியாவில் ஒரு விவசாய புரட்சியை உண்டாக்கவேண்டும் என்பதற்காக காந்திஜி சொன்ன விஷயம்தான் கூட்டுறவுப் பண்ணை முறை. ஒரு நிலத்தை நூறு துண்டுகளாக போட்டு விவசாயம் செய்து நிறைய கொள் முதலை எதிர்ப்பார்ப்பதை விட ஒரு கிராமத்திலிருக்கும் நூறு குடும்பங்கள் கூட்டாக விவசாயத்தில் ஈடுபடுட்டால் தனித்தனியாக கிடைக்கும் பலன்களை விட நிறையவே அதிகமாக இருக்கும் என்பது. நிலம் அனைத்தையும் ஒன்றாக உழுது விவசாயம் பார்ப்பதால் உழைப்பு, மூலதனம், கருவிகள் போன்றவை
மிச்சமாகும். காந்திஜி இதையே விவசாய வேலைகள் என்றில்லாமல் ஆடு, மாடு வளர்ப்பு, காய்கறிகள் பயிரிடுவது என அனைத்து தொழில்களுக்குமே விரிவுபடுத்த நினைத்தார். காந்திஜி தனது சபர்மதி ஆசிரமத்தில் இதையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்தார். நாடு சுதந்திரமடைந்தவுடன் காந்திஜியின் ஐடியா பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் திட்டங்களாக தீட்டப்பட்டன. இதற்கு சமீபத்திய உதாரணம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட உழவர் சந்தை!

'உடனடியாக இந்த கூட்டுறவு வாழ்க்கை முறைக்கு மக்களை மாற்றுவது கடினம் என்பது வேறு விஷயம். நேரானதும் குறுகியதுமான வழியில் செல்வது எப்போதுமே கடினமானதுதான். தனிப்பட்டவர் முயற்சியை விட கூட்டுப்பண்ணை வைப்பதுதான் சரியானது என்பதை நான் வலியுறுத்த நினைக்கிறேன்.உண்மையில் தனிப்பட்ட மனிதனும்கூட கூட்டுறவு மூலம் தனது சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும். மக்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களானால், வகுப்புவாத பிரச்னை போன்றவையெல்லாம் நிகழ வாய்ப்பே இருக்காது' (ஹரிஜன் 15.12.1942)

காந்திஜி அந்த காலத்திலேயே 'ஷேர்களை' பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருந்த தீர்க்கதரிசி.

'இந்தியாவின் இம்பீரியல் வங்கியில் முதலீடு செய்யப்பட்டடுள்ள ஏழு லட்சம் டாலர்கள் ஜப்பான் விமானத்திலிருந்து வீசப்படும் குண்டால் நாசமாகிவிடலாம். ஆனால் அவை எழு லட்சம் முதலீட்டார்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டால் எவரும் அவர்களின் சொத்தை பறிக்க முடியாது. பின்னர் அங்கே அந்த எழு லட்சம் தனி மனித தொகுதிகளுக்குமிடையே இயல்பான கூட்டுறவு இருக்கும். அந்தக்கூட்டுறவு நாஜி முறைகளால் தூண்டப்பட்ட கூட்டுறவு அல்ல. நிர்பந்தம் எதுவுமில்லாத கூட்டுறவு உண்மையான விடுதலையையும் புதிய ஒழுங்கமைப்பையும் உருவாக்கிவிடும்'

Copyright © 2005 Tamiloviam.com - Authors