தமிழோவியம்
திரைவிமர்சனம் : போஸ்
- மீனா

ஸ்ரீகாந்தை ஆக்ஷன் ஹீரோவாகக் காட்ட எடுக்கப்பட்ட மற்றொரு படம் போஸ். தமிழக முதல்வர் பதவிக்குப் போட்டியிடும் அமைச்சர் கலாபவன் மணி தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். அவரை மீட்க ராணுவத்தில் கமாண்டோவாகப் பணியாற்றும் ஸ்ரீகாந்த் தலைமையில் 6 கமாண்டோக்கள் ராணுவம் மற்றும் மத்திய அரசால் அனுப்படுகிறார்கள். அமைச்சரை பத்திரமாக மீட்டுக்கொண்டு வருகிறார்கள். இந்த கடத்தல் விவகாரம் - மற்றும் அதனால் கிடைத்த பப்ளிசிட்டி மூலம் கலாபவன் மணி முதல்வராக அறிவிக்கப்படுகிறார். ஸ்ரீகாந்த் அவருக்கு பாதுகாப்பு தரும் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.

கலாபவன் மணிக்கு நடக்கும் பாராட்டுவிழாவில் நடனமாடும் கல்லூரி மாணவி ஸ்நேகாவைக் கற்பழிக்க கலாபவன் மணி முயற்சி செய்யும்போது ஸ்ரீகாந்த் அவரை விவகாரமான இடத்தில் சுட்டுவிடுகிறார். சிநேகாவைப் பற்றி வெளியே சொல்லாமல், எதற்காக அமைச்சரை கொலை செய்ய முயற்சி செய்தாய்? என்ற கேள்விக்கு பதில் சொல்ல மறுக்கிற ஸ்ரீகாந்தை ராணுவம் வேலையிலிருந்து நீக்கி விடுகிறது. உயிர் பிழைக்கும் கலாபவன் மணி ஸ்ரீகாந்தைக் கொல்ல ரவுடிகளை ஏவுகிறார். சென்னை திரும்பும் ஸ்ரீகாந்த் கலாவன் மணியின் தாகுதல்களையும் சமாளித்தவாறு சிநேகாவுடன் காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தலில் நேருக்கு நேராக மோத ஆரம்பிக்கும் கலாபவன் மணி ஸ்ரீகாந்தின் அப்பாவைக் கொன்று விடுவதோடு, குடும்பத்தையே காலி செய்து விடுவேன் என்று சவால் விடுகிறார். பதிலுக்கு ஸ்ரீகாந்த் நீ இந்த மாநிலத்தின் முதல்வராக நான் விடவே மாட்டேன் என்று சவால் விடுகிறார். யார் தங்களுடைய சவாலில் ஜெயித்தார்கள் என்பதே மீதிக் கதை.

மிடுக்கான ஆர்மி மேனாக ஸ்ரீகாந்த். படத்தின் முதல் காட்சிகளில் அவர் சென்று கலாபவன் மணியைக் காப்பாற்றும் சீனில் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார். ராணுவ வீரர் என்பதற்கேற்ப கட்டுக்கோப்பான உடல், டிரிம்மான நடை.. அருமையான சண்டைக் காட்சிகளில் அட்டகாசமாக மின்னுகிறார் ஸ்ரீகாந்த்.

அழகான பொம்மை போல இருக்கிறார் சிநேகா. இந்தப் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் நடிக்கக் கிடைத்த காட்சிகளில் அருமையாக நடித்திருக்கிறார்.

வித்தியாசமான வில்லனாக கலாபவன் மணி. அவர் ஏற்கனவே செய்யும் ரோல் தான் என்றாலும் இதில் ரொம்பவும் மிமிக்ரி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசம் காட்டுகிறார். மற்றபடி எல்லாம் வழக்கமான லொள்ளு நடிப்புதான். வில்லன் கம் காமெடியன் - கலாபவன் மணி. படத்தில் நாகேஷ், மாணிக்க விநாயகம், கலைராணி, தேவன், தலைவாசல் விஜய் என்று பலரும் நடித்துள்ளனர். மற்றவர்கள் தலையைக் காட்டி இருக்கிறார்கள். அவ்வளவே!! கலாபவன் மணியின் ஆட்களாக வரும் பாஸ்கர், சித்ரா லட்சுமணன் மற்றும் மனோபாலா ஆகியோர் சமயத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்ஷன் செய்தாலும் படத்தில் காமெடியன் இல்லாத குறையை அவ்வப்போது தீர்த்து வைக்கிறார்கள்.

கதையில் ஏகப்பட்ட குழப்பங்கள். ஸ்ரீகாந்தின் மொத்தக் குடும்பமுமே லூசா என்று எண்ணும்படி அமைந்துள்ளது அவர்களது செயல்கள். தங்கள் அறியாமையால் ஸ்ரீகாந்தை கலாபவன் மணி ஆட்களிடம் காட்டிக்கொடுத்துவிட்டுதான் ஓய்வோம் என்ற ரீதியில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. மேலும் முதல்வராக பதவியேற்க இருக்கும் ஒருவருக்கு ஒரு கமாண்டோவின் விலாசம் கண்டுபிடிப்பது என்ன அவ்வளவு கஷ்டமா? ஸ்ரீகாந்திற்காக கலாபவன் மணி ஆட்கள் தெருத்தெருவாக சுற்றுவதைப் போலக் காட்டுவது எல்லாம் நம்பும்படியாகவே இல்லை. அதேபோல ஒரு ஒப்புக்காக கூட சிநேகாவின் குடும்பத்தைக் காட்டாததும் நெருடலே.

படத்தில் பாராட்டப்படவேண்டியவர் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெயின். ஒவ்வொரு சண்டை காட்சியையும் அபாரமாக உருவாக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் ஓ.கே. விஜய் மில்டனின் ஒளிப்பதிவு அருமை. பாராட்டுக்கள்.

கதையில் லாஜிக் கொஞ்சம் கூட இல்லாதது பெரிய குறை. படத்திலிருக்கும் சில நல்ல அம்சங்களையும் இந்தப் பெரிய குறை தூக்கி சாப்பிட்டுவிடுகிறது.

Copyright © 2005 Tamiloviam.com - Authors