தமிழோவியம்
நாங்க ரெடி நீங்க ரெடியா ? : கனவு தீபாவளி
-

இனி வரும் வாரங்களில், ஒவ்வொரு வாரமும் நமக்கு கடிதம் எழுதும் வாசகர்களில் சிலரை தேர்ந்தெடுத்து ஒரு கேள்வி கேட்போம். அதற்கு வாசகர்கள் தங்கள் பதிலை (தமிழில்) சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதி அனுப்பலாம். கேள்வியை அனுப்பினால் கண்டிப்பாக பதில் அனுப்பியாக வேண்டுமென்பதில்லை. (முடியவில்லை என்று ஒரு வரி பதில் போட்டால் போதும். அதுவும் முடியவில்லையென்றால் பரவாயில்லை)

இது வரை கடிதம் எதுவும் எழுதவில்லை ஆனால் இதில் கலந்து கொள்ள விருப்பமா? உங்கள் ஆர்வத்திற்கு எங்கள் நன்றி. உடனே feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு உங்கள் விருப்பத்தை தெரிவித்து ஒரு வரி போடுங்கள். வரும் வாரங்களில் உங்களையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறோம்.

பதிலை அனுப்பும் போது உங்கள் (சமீபத்திய) புகைப்படத்துடன் அனுப்பினால் ரொம்ப சந்தோஷம்!

இதோ இந்த வார கேள்வி.

உங்கள் கனவு தீபாவளியை எப்படி கொண்டாட விருப்பம் ?


முரளி வெங்கட்ராமன் :

தீபாவளி = தீபம் + ஆவளி அல்லது தீபம் + ஒளி. 

மனத்துக்கண் கிடக்கின்ற மாசுகளைஎல்லாம் எரித்து, நல்லொழுக்க தீபத்தை ஏற்றி வைக்கும் தினம்.  நரகத்தை எரித்து, சொர்க்கத்தை காட்டும் தினம். என்னை பொறுத்தவரை கல்விக்கு மட்டும் தான் "ஒளி" என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.  செல்வ ஒளி என்றோ தைரிய ஒளி என்றோ நாம் சொல்வதில்லை. ஞானஒளி என்று தான் சொல்கிறோம்.  படிக்க எழுதக் கற்றுக் கொண்டு விட்டோம்.  நன்கு முன்னேறி விட்டோம்.  ஆனால் காட்டுப் புறங்களில் வசிக்கும் நமது பழங்குடி மக்கள் பலருக்கு இன்னும் வாழ்க்கை இருளாகவே இருக்கின்றது.  அவர்கள் வீட்டில் ஒளி இல்லாமல் போனால் நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடுகிறது என்று மகிழ முடியாது.  "ஏகல் வித்யா" என்ற ஒரு அற்புத அமைப்பு இவர்களுக்கு ஒளி தரவேண்டி நமக்கு ஒரு சந்தர்ப்பம் தருகின்றது.  பழங்குடியினருக்கு வாழ வழி காட்ட அவர் தம் வசிப்பிடங்களில் பள்ளிகூடங்கள் கட்டித் தருகின்றது.  $365 ஒரு வருடத்திற்கு ஒரு பள்ளிக்கு ஆகும் செலவு.  அது ஐந்து வருடங்களில் அந்தக் கிராமத்தையே புறச்சார்பினமை இன்றி தம் சொந்தக்கால்களில் நிற்க வழி செய்கின்றது. 

என் தீபாவளியை இப்படிப்பட்ட ஒரு மலை வாழ் மக்களின் குழந்தைகளிடம் பேசியும் சிரித்தும் வெடி வெடித்தும் கொண்டாட ஆசைப்படுகின்றேன். இந்தத் தீபாவளி இல்லையென்றாலாவது பரவாயில்லை, வாழ்வில் ஒரு தீபாவளியையாவது அங்கனம் கொண்டாட வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்போது தான் தீபாவளியை நான் பொருள் அறிந்து கொண்டாடிய மகிழ்ச்சியை அடைய முடியும்.  ஒளி ஏற்றிய இன்பத்தை அடைய முடியும்.

காசி :

முந்தின ராத்திரி குடும்பத்தினர் அனைவரும் ஒரு இடத்தில் கூடவேண்டும். குழந்தைகள், ஆசைதீர பட்டாசு வெடிக்கவேண்டும். பெரியவர்களும் தெருவில் இறங்கி பட்டாசில் கலந்துகொள்ளவேண்டும். காலையில் ரொம்பவும் நேரமே எழுப்பாமல் விடிந்தபின் எழவேண்டும். ரேடியோவில் மங்கல இசையோடு குளித்து, புத்தாடை அணிந்து மீண்டும் சில பட்டாசுகளை வெடித்து, திருப்தியாக (இட்லியைத்தவிர எதையாவது)  சாப்பிட்டு நண்பர்களைப் பார்க்கப் போகவேண்டும். மத்தியானம் வரை சுற்றிவிட்டு சாப்பாட்டுக்கு வந்து மீண்டும் குழும்பத்தினர் எல்லாரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு சாய்ந்துகொண்டே டிவி பார்க்கவேண்டும். அதுவரை குடும்பத்தினர் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும்! அந்த நிம்மதியில் குட்டிதூக்கம் போடவேண்டும்.

அவ்வளவுதான் தீபாவளி.

மகேஷ் :

முன்னெல்லாம் தீபாவளினா தலைவர் படம் வரும், ஆனா இப்போ வரதில்லை. அதனால என் கனவு தீபாவளியில தலைவர் படம் வந்து அதை மூணு ஷோ பார்க்கனும். அப்பால ஃப்ரெண்ட்ஸ் கூட கதை அடிச்சுட்டு சரவணபவன்ல நைட் சாப்பாடு. அப்படியே ரூமுக்கு வந்து ஒரு தூக்கம் போட்டா தீபாவளி முடிஞ்சிருக்கும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors