தமிழோவியம்
கவிதை : தேவையில்லை...
- மெர்சி

இரவல் வார்தைகளைக் கொண்டு என்னிடம் காவியம் பேசினாய்
என்னவள் என்று பீற்றிக்கொண்டது

உன்னை ஒரு ஹீரோவாகக் காட்டிக்கொள்ள
என் பேதமையை பகடை ஆக்கினாய்

உன் குள்ளநரித்தனதுக்கு காதலை கொச்சையாக்கினாய்
உன்னை காப்பாற்ற என்னை கேடயமாக்கினாய்
நீ முன்னேற என்னை ஏணியாய் மிதித்தாய்
எதிலும் கலப்படம் என்பதை உன்னிடம் தான் கண்டுகொண்டேன்

பொய்க்கும் புரட்டுக்கும் உன் முகம்தான் தோன்றுகிறது

என்னைப்போல் உண்டா எனப் பேசியபோதும்
முட்டாள் மனதுக்குள் மத்தாப்பு வெளிச்சம்.

பெண்புத்தி பின்புத்தி என்றவனை முறைக்காமல் விட்டதில்லை
ஆனால் உன்னிடம் என் புத்தி முன்னே, பின்னே எங்கும் காணவில்லை

என் உலகமே நீ என மாற்றி வைத்தாய்
உன்னுடன் பேசாத பொழுது எல்லாம்
மண்டைக்குள் புழு குடைந்தது.

நாணயம் உன்னிடம் இல்லை
நா நயமே உண்டு.
பேசிப் பேசியே என்னை மழுங்க வைத்தாய்.
ஒன்றுமில்லாத உன்னிடம்
யாவுமாய் நின்றேன்

என் அன்பை பரிகசித்த நீ
எனக்குத் தேவையில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors