தமிழோவியம்
திரைவிமர்சனம் : வல்லவன்
- மீனா

வாழ்க்கையில் எத்தனையோ பெண்களைப் பார்த்தாலும் பார்த்தவுடனே இவள் நமக்குத்தான் என்று எந்தப் பெண்ணைப் பார்த்தால் தோன்றுகிறதோ அவள் தான் நம் துணைவி என்ற ரீதியில் சிந்திப்பவர் வல்லவன் (சிம்பு). ஸ்வப்னாவை (நயன்தாரா) கோவிலில் பார்த்த முதல் பார்வையிலேயே இவருக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது. ஸ்வப்னாவின் அன்பைப் பெற எவ்வளவோ முயற்சிகள் - மாறுவேடங்கள் போடும் சிம்பு ஒருவழியாக அவர் மனதில் இடம் பிடிக்கிறார். இருவரும் கிட்டத்தட்ட கணவன் - மனைவியாகவே மாறிவிட்ட நிலையில் நயன்தாராவிற்கு சிம்பு தான் வேலை பார்க்கும் கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதும் அவர் தன்னைவிட 3 வயது இளையவர் என்பதும் தெரியவருகிறது. உடனே சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்டு இன்னொருவரை மணக்கத் தயாராகிறார்.

Simbu,Sandhyaமனமொடிந்து சிம்பு நிற்கும் வேளையில் அவரது பள்ளிப்பருவ காதல் நினைவிற்கு வருகிறது. தன்னுடன் படிக்கும் கீதாவை (ரீமா சென்) மனசாரக் காதலிக்கிறார் சிம்பு. ஆனால் ரீமாவோ தன்னுடைய சைக்கோதனமான வேலைகளால் சிம்புவை வறுத்தெடுக்கிறார். ஒருகட்டத்தில் ரீமாவின் அழிச்சாட்டியங்களைப் பொறுக்க முடியாமல் சிம்பு அவரைப் பிரிகிறார். சரி ரீமாவின் கதை அத்துடன் முடிந்தது என்று நினைக்கும் வேளையில் நயன்தாரா - சிம்பு காதலுக்கு குறுக்கே வருகிறார் ரீமா. ஏற்கனவே பிரிந்து போன நயன்தாராவுடன் மீண்டும் சேர சிம்பு எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் முறியடிக்கிறார் ரீமா. போதாத குறைக்கு சிம்புவின் தோழி மற்றும் நலம்விரும்பியான சுசியையும் (சந்தியா) கடத்துகிறார் ரீமா. எப்படி ரீமாவின் திட்டங்களைத் தவிடுபொடியாக்கி தன் தோழியை மீட்டு காதலியுடன் சிம்பு இணைந்தார் என்பதே கிளைமாக்ஸ்.

நயன்தாராவிற்காக கல்யாணராமன் கமல் மாதிரி பல்லை வைத்துக்கொண்டு சிம்பு வரும் காட்சிகளிலும், அவருக்கு பிடித்த செருப்பை திருடிவிட்டி போலீசிடம் அடிவாங்கும் காட்சிகளிலும் சிம்புவின் நடிப்பு சூப்பர் என்றால் ரீமாவுடனான காட்சிகளில் - ரீமாவிற்கு செருப்பை மாட்டிவிடும்போதும் அவருடைய வாந்தியை அள்ளும் காட்சிகளிலும் கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார். மற்றபடி டான்ஸ் - சண்டைக்காட்சிகள் எல்லாவற்றிலும் ஓக்கே...

நயன்தாரா - காதல் காட்சிகளிலும் பாடல்களிலும் இயக்குனர் சிம்பு சொல்லிக்கொடுத்ததை அப்படியே simbu,nayanசெய்திருக்கிறார். நடிப்பு - இன்னும் கொஞ்சம் தேவை. சிம்புவின் தோழியாக படம் முழுக்க வருகிறார் சந்தியா. சைக்கோதனமான - கோமாளித்தனமான ஆட்களுக்கு நடுவே கொஞ்சம் நார்மலாக வருபவர் இவர் மட்டுமே என்றால் மிகையில்லை. ஆனாலும் தன் சைக்கோ நடிப்பால் சிம்புவுக்கு அடுத்தபடி வருபவர் ரீமா. சிம்புவை ஷ¥ மாட்டச்சொல்வது - வாந்தியை அள்ளவைப்பது, ஸ்கூல் யூனிபார்மில் சின்னப்பெண்ணாக வருவது எல்லாம் ஓவர் என்றாலும் தன் நடிப்பால் அனைவரது வாயையும் அடைக்கிறார் ரீமா. ஆனாலும் இவரது கதாபாத்திரத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். சந்தானத்தின் காமெடி சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டினாலும் பல இடங்களில் சொதப்புகிறது.

கதை, திரைக்கதையில் சிம்பு இன்னமும் மெனக்கட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றச் செய்கின்றன படத்தில் பல லாஜிக் குளறுபடிகள். தன்னை விட மூன்று வயது குறைவானவர் சிம்பு என்பதால் அவரைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கும் நயன்தாரா சிம்புவுடன் கல்யாணத்திற்கு முன்பே உறவு வைத்துக்கொள்வதை எப்படி அனுமதித்தார் என்பதும், இன்னொருவருடன் நாளை கல்யாணம் என்ற நிலையில் சிம்பு பல்லனாக மாறி இரண்டு வார்த்தை பேசியவுடன் மனம் மாறி அவரை ஏற்றுக்கொள்வதும், ரீமா ஒத்தை ஆளாக சந்தியாவைக் கடத்துவது போன்றவைகளும் குளறுபடியின் சாம்பிள்கள். பாலகுமாரனின் வசனங்களில் ஆபாசத்தை ரொம்பவே குறைத்திருக்கலாம்.

பிரியனின் ஒளிப்பதிவும் யுவன் ஷங்கர்ராஜாவின் இசையும் படத்திற்கு பெரிய பலம் என்றால் மிகையில்லை. இயக்குனர் - கதாசிரியர் சிம்பு சில இடங்களில் கோட்டைவிட்டிருந்தாலும் நடிகர் சிம்பு அதை ஈடுகட்டுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் படத்தை எப்படி கொண்டுசெல்வது என்று புரியாமல் சிம்பு தவித்திருப்பது புரிகிறது. மொத்தத்தில் வல்லவன் மன்மதன் போல ஓஹோ என்று இல்லாவிட்டாலும் ஓக்கே ரகமாக இருப்பது ஆறுதல்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors