தமிழோவியம்
கவிதை : தீச்சுடர் தின்னும் விழிகளை
- இராஜ.தியாகராஜன்

Eye Donationமுன்குறிப்பு : கீழ்வரும் பாடலை கண்கொடை வாரத்திற்காய், "கவிதை வானில்" கவிமன்றத்தில், புதுச்சேரியில் நான் வாசித்தளித்தேன்.  ஒரு புள்ளிவிவரம்,  ஒரு குழந்தையின் விழிப்படல நோய்தீர விழிப்படல மாற்று சிகிச்சையை அதன் 10 அகவைக்கு உள்ளாகவே செய்திடல் வேண்டும். அதன் பின்பு விழிப்படலம் கிடைத்தும் பயனில்லை.  இன்று இந்தியாவில் குழந்தைகளுக்கு ஆண்டுத் தேவை 16 இலட்சம் விழிப்படலங்கள்; ஆனால் கிடைப்பதோ வெறும் 1500ல் இருந்து 2000 மட்டுமே.  ஆகையால் தீச்சுடர் தின்னும் விழிகளை கொடையளித்தல் மிக மேலான கொடையே.

- இராஜ. தியாகராஜன்


அவை வணக்கம். (இன்னிசை வெண்பா)

செந்தமிழின் பாரதியை, சாரதிநான் பாரதிக்கே
என்றெழுந்த பாவரசை அன்றணைத்தத் தண்புதுவை
மண்வசிக்கும் சின்னவனாம் மாணவன்நான் கண்கொடையின்
நன்மையினைச் சொல்வேன் நயந்து!

சாதலின்றிச் சதமாய் வாழ...... (கலிவெண்பா)
கண்மூடித் தூணருகில்  காதலா யாடுகின்ற
கண்கட்டு மாட்டத்தைக் காலமெலா மாடுகின்ற
கண்ணில்லா அன்பர்களின் காட்சியெனுங் காரிருளாம்
துன்பத்தைப் போக்கிநற்  றூயவொளி  யேற்றிடவும்

பூதல முதித்த புதல்வர்கள் யாவருஞ்
சாதலு மகற்றிச் சதமாய் வாழவும்,
நாதனாய் நம்மையே நானிலம் போற்றவும்,
பாதையைச் சொல்வேன் பதமாய் அறிவீர்!

தழலின் பெருநாவால் சாம்பரா யாகி
அழிந்தே போகு மனிச்ச மலராம்,
புழுக்கு முடலில் பொருந்திய விளக்காம்
விழியின் படலத்தை விருப்புடனே தந்திடுவீர்!

கண்ணில்லாப் பிள்ளைகள் கண்பெறவே இப்படி
இன்றுநாம் செய்திடின் என்றுமே நாமினி
அன்பாய் அழகாய் அருளாய் அவர்தம்
நெஞ்சிலும் வாழ்வோம் நிலைத்து!


நன்றி : புதுச்சேரி மின்னிதழ்

Copyright © 2005 Tamiloviam.com - Authors