தமிழோவியம்
இசையோவியம் : ஹம்சத்வனி
- 'லலிதா' ராம்

எந்த ஒரு காரியத்திற்கும் நல்லதொரு தொடக்கம் அவசியம். தொடக்கம் சரியாக இருந்துவிட்டால் காரியம் பாதி முடிந்தாற் போலத்தான். கர்நாடக இசைக் கச்சேரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு கச்சேரியைத் தொடங்கும் ராகம், ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில் கச்சேரியைக் களை கட்ட வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டுமெனில், அந்த ராகம் அதிக கனமில்லாததாகவும் அதே சமயத்தில், அதிகம் 'scope' இலலாத துக்கடா ராகமாக இல்லாமலும், விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் பாடுவதற்குத் தோதாகவும் இருத்தல் நலம். மேற்கூறிய குணாதிசயங்கள் பல ராகங்களுக்கு இருப்பினும், ஒரு கச்சேரியைச் சிறப்ப¡க தொடங்க என்ன பாடலாம் என்றதும், முதலில் மனதில் தோன்றும் ராகம் 'ஹம்சத்வனி'. இப்பேர்பட்ட 'minimum guarantee' ராகத்தில், நமது தொடரின் ** இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்குவோம்.

ஹம்சத்வனி சங்கராபரண ராகத்தின் ஜன்யம். பெரும்பாலான கச்சேரிகளின் முதல் பாடல் விநாயகப் பெருமானின் மீதே இருக்கும். இதனாலேயே, கச்சேரியைத் தொடங்கத் தோதான ராகமான ஹம்சத்வனியில் எண்ணற்ற 'விநாயகர் கீர்த்தனைகள்' இருக்கின்றது. முத்துஸ்வாமி தீக்ஷதரின் 'வாதாபி கணபதிம்' என்ற பாடல் மிகப் பிரபலமான ஒன்று. கேட்பவர் மனதில் உற்சாகத்தை எழுப்பக் கூடிய ராகமான ஹம்சத்வனி, திரையிசையிலும் பிரபலமான ஒன்று.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பல ஹம்சத்வனி ராகப் பாடல்கள் திரையில் மலர்ந்துள்ளன. 'கடவுள் அமைத்த மேடை' படத்தில் வரும் 'மயிலே மயிலே உன் தோகை எங்கே' என்ற பாடலைப் பார்ப்போம். பாடலின் முன்னோட்ட இசையை (prelude), கிதாரின் chords-உம், குழலின் கிராமிய மணமும், பல வயலின்களின் கூட்டணியில் அமைந்த 'strings'-உம் அழகாக நிரப்புகிறது. பாடல் திஸ்ர நடையில் (நிறைய டப்பாங்குத்து பாடல்கள் திஸ்ர நடை எனப்படும் தாளகதியில் அமைந்திருக்கும்) துள்ளலாக அ¨மந்துள்ளது. பாடலில் வரும் 'percussion'-ஐக் கூர்ந்து கவனித்தால், ஆங்காங்கே மிருதங்கத்தில் எழுப்பப்படும் 'சாப்பு' எனப்படும் ஒருவித 'metallic sound' பொன்ற ஒரு ஒலி ஒலிப்பது கேட்கும். பாடல் கர்நாடக ராகத்தை அமைந்திருப்பினும், மேற்கத்திய வாத்தியங்களும் கிராமிய பிரயோகங்களும் நிரம்பிய பாடலில், 'carnatic feel' ஒலிக்க அது மட்டுமே காரணம் ஆகிவிடாது. நுணுக்கமாக சேர்க்கப்பட்டுள்ள 'percussion'-உம் இதற்கு முக்கிய காரணமாகும்.  பாடலின் சரணத்தின் கடைசி இரு வரியில் தாள கதியை மாற்றி ஒருவித பிரமிப்பை உருவாக்கி பின்பு அழகாக பல்லவியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ராஜா.  எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஜென்சியும் அளவான, அழகான கமகங்களால் இழைத்து இழைத்து காதல் வயப்பட்ட இருவரின் மனநிலையை தங்கள் சர்க்கரைக் கரைச்சல் குரலால் அற்புதமாய்ப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

ஹம்சத்வனி ராகத்தை புதிதாகக் கேட்பவர்கள், 'என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான்' படத்தில் ஜெயச்சந்திரனும் சுனந்தாவும் பாடியுள்ள 'பூ முடிச்சு பொட்டு வைத்த வட்ட நிலா', 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் வரும் 'மலர்களே நாதஸ்வரங்கள்' மற்றும் 'சிவா' படத்தில் வரும் 'இரு விழியின் வழியே' , ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த இம்மூன்று பாடல்களை அடுத்தடுத்து கேட்டால், இப்பாடல்களுக்குள்ள ஒற்றுமை நன்றாக விளங்கி ராகம் சற்று புரிபடும். இப்பாடல்கள் அனைத்தும் 100% அக்மார்க் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தவை என்று சொல்வதற்கில்லை. ஆங்காங்கே அழகிற்காக பாடல் ராகத்தின் வரம்புகளை மீறியிருக்கிறது. இருப்பினும், பாடலின் பெரும்பாலான பகுதி ராகத்தின் கட்டமைப்புள் இருப்பதால், ஹம்சத்வனியில் அமைந்தது என்று கொள்வதிலும் ஒன்றும் பாதகமில்லை.

கர்நாடக கீர்த்த்னையை ஒத்து அமைந்த ஹம்சத்வனி என்று 'மகாநதி' படத்தில் வரும் 'ஸ்ரீரங்க ரங்கநாதரின் பாதம்' பாடலைச் சொல்லலாம். 'கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்' என்ற வரியில் 'தீர்த்தம்' என்ற வார்த்தையில் எஸ்.பி.பி கொடுக்கும் கமகத்தை கவனித்துப் பாருங்கள். அது ஹம்சத்வனி ராகத்திற்கே உரிய typical கமகமாகும். இப்பாடலின் இடையிசையையும் (interlude) குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஹம்சத்வனி பொதுவாக மகிழ்ச்சியை, உற்சாகத்தைக் குறிக்கும் ராகம். பாடலின் இடையிசைப் படமாக்கப்பட்ட விதத்தை கவனித்தால், கதாநாயகனுக்கு தன் மகளைப் பார்த்ததும், மறைந்த மனைவியின் நினைவு தோன்றி துக்கம் எழும்.

மகிழ்ச்சியான தருணத்தில் திடீர் என சோகம் நுழைந்ததை, ஷெனாய் என்ற வாத்தியத்தை உபயோகித்ததன் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜா.

மேற்கூறிய பிரபலமான ஹம்சத்வனி ராகப் பாடல்களைத் தவிர 'சிறையில் பூத்த சின்ன மலர்' என்ற படத்தில் யேசுதாச், சித்ரா பாடிய 'அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ' போன்ற அபூர்வமான பாடல்களிலும் அற்புதமான ஹம்சத்வனி பொதிந்திருக்கிறது. என்னுடைய MP3 collectionல், எஸ்.பி.பி-யும் சித்ராவும் பாடியிருக்கும்

'ராகம் தாளம் -- இருவரின்
தேகம் ஆகும் -- இது ஒரு
காமன் கீதம் இன்பமயம்'

என்றொரு அசர வைக்கும் ஹம்சத்வனி ராகப் பாடல் உள்ளது. பாடல் எந்த படம் என்று யாரேனும் கூறினால் புண்ணியமாய்ப் போகும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors