தமிழோவியம்
கவிதை : கை நழுவிய காண்டீபம்
- நாகூர் ரூமி

கனவுகள் இல்லாமலில்லை
கணிணியும் இல்லாமலில்லை
காகிதம் தேவையில்லை
எனினும்
கவிதைகள் ஏதுமில்லை.

காண்டீபம் கை நழுவுகிறது கேசவா - என
அர்ஜுனன் சொன்னதுதான்
ஞாபகம் வருகிறது.

என் காண்டீபம் நழுவி
காலம் பலவாகிவிட்டது.
எடுத்துச் சொல்ல எனக்குமொரு
கேசவன் கிடைப்பானா?

யாரையும்
கொல்வதற்கோ வெல்வதற்கோ அல்ல
சொல்வதற்கு மட்டும்தான்
என் காண்டீபம்

எனினும்
ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்
தெரியும்தானே?

ஆனால்
கொல்லுவதெல்லாம் வெல்லுவதல்ல
வெல்லுவதெல்லாம் கொல்லுவதுமல்ல
புரியும்தானே?

சொல்லாத சொல்லும்
இல்லாத பல்லும் ஒன்று
மூடியிருந்தால் புழு
பறந்து போனால்தான் வண்ணத்துப் பூச்சி
என்பார் தாத்தா.

மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
சொல்லத் தவிக்கும் சொற்கள்
ஏராளம் உண்டு என்னிடம்.

மௌனத்தின் இடுக்குகளில் இருந்து
எப்போதாவது அவை
தப்பிச் செல்லும் அழகை
ரசிப்பதுண்டு நான்.

அந்த சொற்களின் சிறகுகளில்
அகராதிகள் அழியும்
களஞ்சியங்கள் கிழியும்
காற்று கனப்படும்
வானம் வசப்படும்.

அந்தக் கணங்களில்
காண்டீபமும் வேண்டாம்
கதையும் வேண்டாம்

ஆனால்
காத்திருக்கத்தான் வேண்டும்
அந்தக் கணங்களுக்காக.

Copyright © 2005 Tamiloviam.com - Authors