தமிழோவியம்
தராசு : திருந்தவே மாட்டீர்களா ?
- மீனா

தமிழக மக்களின் நலம் குறித்த தீர்மானங்கள் இயற்றும் போது - மற்ற மாநிலங்களுக்கு எதிராக மல்லு கட்டும் போது அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்பது அனைத்து தமிழர்களின் நெடுங்காலக் கனவு. இது கனவாகவேபோய்விடுமோ என்று பயம் தற்போது நாட்டின் நலம் விரும்பிகள் அனைவர் மனதிலும் தோன்றியுள்ளது மறுக்க முடியாத உண்மை. இது குறித்து எத்தனையோ முறை நமது தராசு பகுதியிலேயே எழுதியாகிவிட்டது - "உங்களுக்குள் எப்படியாவது அடித்துக்கொள்ளுங்கள். அதைப்பற்றி கவலையில்லை. ஆனால் ஒரு பொதுப் பிரச்சனை என்று வந்து விட்டால் தயவு செய்து அனைவரும் ஒரு அணியாக நில்லுங்கள். அப்போதுதான் எதிர்தரப்பிற்கு கொஞ்சமாவது பயம் வரும்.." என்று. ஆனால் நமது தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே சுயகாரியப் புலிகள் என்பதை மற்றும் ஒரு முறை முல்லை பெரியார் அணைப் பிரச்சனையில் நிரூபித்து விட்டார்கள்.

நமது அண்டை மாநிலங்களுடனான நமது பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே தண்ணீர் தான். கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று அனைத்து மாநிலங்களுடனும் நாம் தண்ணீருக்காக தாவா  செய்து கொண்டே இருக்கிறோம். பிரச்சனை என்று வந்துவிட்டால் கட்சி பேதமே இல்லாமல் அண்டை மாநில அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். ஆளும் கட்சி - எதிர்கட்சி, நண்பர் - பகைவர் என்ற உணர்வுகள் எல்லாம் அவர்களுக்கு  இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் - தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது... தந்தால் நம் மாநில விவசாயிகள் வாடுவார்கள். இவ்வளவே. இந்த உணர்வு மனதில் மேலோங்கும் போது கட்சி பேதங்கள் எல்லாம் அவர்கள் கண்களில் தெரிவதில்லை.

ஆனால் நம் தமிழகத்தில் நடப்பது என்ன? வெட்கக்கேடான விஷயம் - மக்களின் நலன் மோசமாக பாதிக்கப்படும் இத்தகைய விஷயத்தில் கூட நமது அரசியல்வாதிகள் ஒன்று சேர மறுக்கிறார்கள். ஒரு அனைத்து கட்சி கூட்டம் கூட நடத்த நமக்கு வக்கில்லை. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போன கதை தான் நமது நிலை. உள்ளூரிலேயே ஒற்றுமை இல்லை - இவர்களுக்கு என்ன நாம் பணிவது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பையே ஆட்டிப் பார்க்க நினைக்கிறார்கள் கர்நாடக கேரள அரசியல்வாதிகள். ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானம் இயற்றவே முடியாத நாம் என்ன இம்மாநில அரசுகளை எதிர்த்து வழக்கு போட்டு வாழ்வது என்ற எண்ணம் தான் அவர்களுக்கு. அவர்களைச் சொல்லி குற்றம் இல்லை. அவர்கள் நினைக்கும்படி தானே நம் ஆட்களும் இருக்கிறார்கள்?

எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு என்றால் நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டம்.... ஏனென்றால் அது அவர்களது காசு சமாச்சாரம் ஆயிற்றே.. ஆனால் மக்கள் பிரச்சனை என்றால் தி.மு.க ஒரு பக்கம் நிற்கும், அ.தி.மு.க ஒரு பக்கம் நிற்கும், காங்கிரஸ் ஒரு பக்கம் நிற்கும். ஏனென்றால் இது மக்கள் சமாச்சாரம் ஆயிற்றே. வாடும் விவசாயிகளை விட மாறனுக்கு பாராளுமன்றத்தில் சிலை வைப்பது தொடர்பான பிரச்சனைதான் முக்கியமாகப்படுகிறது கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும்.

மக்கள் பிரச்சனையை அண்டை மாநிலங்களிடம் சொல்லி நமது உரிமையை மீட்க அனைவரும் ஒன்று சேருங்கள் - சொல்லி சொல்லி அலுத்துப் போன விவகாரம் இது.. நம் தமிழக அரசியல்வாதிகளைப் பற்றி தற்போது மக்கள் எண்ணுவது இதுதான் - "சே! நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீர்களா?".

Copyright © 2005 Tamiloviam.com - Authors